[திருக்குறளுக்கு உரை திருக்குறளே! 1/9 தொடர்ச்சி]

திருக்குறளுக்கு உரை திருக்குறளே! 2/9

ஆனால்,

  1. ‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

         பெய்யெனப் பெய்யும் மழை                                           (குறள்.55)

என்னும் குறட்பாவிற்கு திருக்குறள் மக்கள் உரையில் (ஏறத்தாழ பதினாறு) பதிப்புகளில் பாவேந்தரை அடியொற்றி, “மனைவி பயன்மழை போன்றவள்” என்று உரை எழுதியவர், அண்மையில் வரும் பதிப்புகளில், “பத்தினி சொன்னால் மழை பெய்யும்” என்று அறிவியலுக்குப் புறம்பான உரை எழுதித் திருவள்ளுவரைத்  திடுக்கிட  வைப்பார். தீர்வுக்குத் தெய்வப் புலவரை நாடுகிறோம். குறளாசான் எழுத்தாணியால் காமத்துப் பாலில் 1192 -ஆம் குறட்பாவைக் காட்டுகிறார்:

     வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு

     வீழ்வார் அளிக்கும் அளி                                                    (குறள்.1192)

 தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஆண்-பெண் சமன்மையை நிறுவச்  சில இணைக் குறட்பாக்களை எழுதுவது வழக்கம். ‘அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க’ (குறள். 691) என்று நெருப்பின் தன்மையைக் கூறியவர், ஒரு காதலனாகக் காதலியிடம் ஒரு புதுமைத் தீயைக் காண்கிறார்:

     நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

     தீயாண்டுப் பெற்றாள் இவள் 

                                              (குறள்.1104)

மனைவி சளைத்தவளா, என்ன? அவளும் அவள் நுகர்ந்ததைப் பதிவு செய்கிறாள்:

     தொடின்சுடின் அல்லது காமநோய் போல

     விடின்சுடல் ஆற்றுமோ தீ     

                                              (குறள்.1159)

இது போல் இன்பம் திருமாலுலகில் கிடைக்குமா என்று வியக்கிறான் அவன்:

     தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்

     தாமரைக் கண்ணான் உலகு 

                                               (குறள்.1103)

அவளுடைய நுகர்வும் அது போல்தான் இருக்கிறது:

     புலத்தலின் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு    

     நீரியைந் தன்னா ரகத்து                                                       (குறள்.1323)

இந்த இணைக்குறள்கள்போல்தான் குறட்பாக்கள் 55-உம் 1192-உம். குறள் 55-இல் மனைவி பயன்மழை. குறள்1192-இல் கணவன் பயன்மழை. திருவள்ளுவர் அறிவியல் அறிஞர் தான்!      

  1. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

   களைகட் டதனொடு நேர்                                                      (குறள்.550)

இக்குறளுக்கு நாமக்கல் கவிஞர் உரை மனங்கொள்ளத் தக்கது:

‘கொலை செய்யும் பாதகர்களை அரசன் அப்புறப்படுத்தி விடுவது, பயிர்களைப் பாதுகாக்க களையெடுப்பது போலாகும்.’

மனுவும் களை எடுத்தலைப் பற்றிக் கூறுவதாலும் கொலைத்தண்டனையை ஆதரிப்பதாலும் பல உரையாசிரியர்கள் திருவள்ளுவர் மரணத் தண்டனையை ஆதரிப்பதாக உரை எழுதுகின்றனர்.

ஏற்கெனவே திருவள்ளுவர், ஒறுத்தல் என்ற சொல்லைத் தண்டித்தல் என்ற பொருளில்  இங்கு எழுதியது போன்று 314-ஆம் குறளில் மூன்றாம் சீரில் கையாண்டுள்ளார். 550-ஆம் குறளையும் ஆற்றுநீர்ப் பொருள் கோள் முறையில் கொள்ளவேண்டும் என்பது குறளாசான் கருத்து.

     இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

     நன்னயஞ் செய்து விடல்                                                      (குறள்.314)

கொலைசெய்யும் பாதகர்களைத் தண்டிப்பது மீண்டும் கொலை செய்யாதிருக்க என்று பொருள்பட,

     தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்

     ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து 

                                                 (குறள்.561)

என்று கூறுவதன் மூலம் திருவள்ளுவர் மரணத் தண்டனையை எதிர்க்கிறார் என அறியலாம்.

  1. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

       தொகுத்தார்க்கும் துய்த்த லரிது   

                                     (குறள்.377)

பெரும்பாலும் உரையாசிரியர்கள் ‘வகுத்தான்’ என்ற சொல்லுக்கு, தெய்வம், ஊழ்த் தெய்வம் என்றெல்லாம் உரை எழுதுகின்றனர். பேராசிரியர் முனைவர் மோகனராசு நழுவல் உத்தியைக் கையாள்கிறார்:

     “வரையறுக்கப் பட்ட வழிகளில் செல்லாமல், கோடிகோடியாகப் பொருள் சேர்த்தவரும் அதனைத் துய்க்க முடியாது.” மூலப் படைப்பாளியை (காரண கருத்தாவை) இருட்டடிப்பு செய்யும் இந்த உத்தியை ஆங்கிலத்தில்  ‘agent deletion’ என்று கூறுவார்கள். தீர்வு காணத்  தெய்வப் புலவரை நாடுகிறோம்

     :இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

     வகுத்தலும் வல்ல தரசு                                                     (குறள்.385)

திருவள்ளுவரின் இந்தத் தீர்வு அடுத்து வரும் குறளுக்கும் தீர்வாக அமையும்.  

  1. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

      கெடுக உலகியற்றி யான். (குறள்.1062)

இந்தக் குறளுக்குப் பேராசிரியர் மோகனராசு தரும் உரையில் நழுவல் உத்தி இல்லை:

     ‘ஒரு சிலர் பிச்சை எடுத்துத்தான் உயிர் வாழ்தல் வேண்டும் என்றிருந்தால், வாழ்க்கை நெறிமுறைகளை உண்டாக்கித் தருபவன் கெட்டலைவானாக.’

(தொடரும்)

பேராசிரியர் பி.என்.(இ)டயசு, ஆங்கிலத்துறை, (பணி நிறைவு) இலயோலா கல்லூரி, சென்னை-34

முகவரி: 261, ஐயாவு(நாயுடு) குடியிருப்பு, அமைந்த கரை, சென்னை-29. தொ.பே.எண்.23630891