(திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் 1/2 தொடர்ச்சி)

திருக்குறள் சான்றோர்

இலக்குவனார் திருவள்ளுவன் 2/2

வருணாசிரம எதிர்ப்புக் குறள் விளக்கங்கள்

இலக்குவனார் திருவள்ளுவன் தரும் குறள் விளக்கங்களிலேயே புரட்சியும் புதுமையும் கொண்ட திருவள்ளுவர் உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டுவது,  கடவுள் வாழ்த்து குறள்களுக்கு அவர் தரும் விளக்கங்கள் ஆகும். வருணாசிரமக் கொள்கையை எதிர்த்தே திருவள்ளுவர் முதல் அதிகாரத்தை அளித்துள்ளார் என்கிறார்.

வருணாசிரமப்படித் தலையில் பிறந்ததாக அவர்கள் சொல்பவர்கள் உயர்வானவர்கள், காலில் பிறந்ததாக அவர்கள் சொல்பவர்கள் கீழானவர்கள். ஆனால் திருவள்ளுவர் 7 குறட்பாக்களில் தாளைத் தலைதான் வணங்க வேண்டும் எனக் காலை உயர்த்துகிறார். எனவே, உயர்விற்குரிய காலில் பிறந்தவர்கள் என்பது உண்மையானால் இவர்களே உயர்வானவர்கள் என்கிறார்.

மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாள்உளாள் தாமரையி னாள்  (குறள் 617)

என்னும் திருக்குறள் மூலம் உழைப்பவர்களின் கால்களில்தான் திருமகள் உறைகிறார் எனக் கூறி ஆரியத்திற்கு எதிராக உழைப்பவர்களைத் திருவள்ளுவர் போற்றுகிறார் என விளக்குகிறார்.

 

திருக்குறளுக்கு ஒரு வரி விளக்கங்கள்

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம், வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் நூல்களில் அறத்துப்பால்,பொருட்பால் குறள்களுக்கு ஒரு வரி விளக்கங்கள் அளித்துள்ளார். இவை மிகச் சிறப்பான உரைகளாக அமைந்துள்ளன.

சான்றுக்குச் சில:

கெடுப்பதும் கொடுப்பதும் மழையே!

அறிவு வலிமையால் ஐம்புலன் காத்திடு!

அரியன செய்து பெரியாராய்த் திகழ்!

அறம் செய்! பழிச் செயல் விடு!

பழிக்கு அஞ்சிப் பகுத்துண்டு வாழ்!

சாவா மருந்தாயினும் விருந்தினருடன் உண்க!

நல்ல வழியில் வந்தாலும் பெறாதே!

உண்மை என்னும் விளக்கே உண்மையான விளக்கு.

எண்ணித் துணி! துணிந்த பின் எண்ணாதே!

குடிகளைக் காக்க குறைகளைக் களை!

மருந்து வேண்டா எனில் செரித்தது அறிந்து உண்!

பிறருக்குக் கொடுக்காமல் புவிக்குச் சுமையாய் இராதே!

துன்பம் வரும் பொழுது உன்னையே விற்காதே!

நேர்மையான தூய பணி

இவர், காதணி விழா, பூப்பெய்தல் விழா முதலான சடங்கு சார் எந்த விழாக்களையும் நடத்தியதில்லை. அவ்வாறு நடத்தினால் அலுவலத்தினரையும் துறையினரையும் அழைக்க வேண்டும். அவர்கள் வந்திருந்து தரும் பரிசு, அவர்களுக்குப் பதவி வழியில் இவர் செய்த நன்மையைக் கருதி வழங்குவதாக இருக்கும். அதுவும் கையூட்டுதான் என்று சொல்லி எதையும் நடத்தியதில்லை. பிறருக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், பணி ஓய்வு நேரும்பொழுது வழியனுப்பு விழாக்களை இவர்தான் பொறுப்பேற்றுச் சிறப்பாக நடத்துவார். இவர் எந்த நேர்விலும் தனக்காக இத்தகைய விழாக்கள் நடத்த உடன்படவில்லை. பணி நிறைவின் பொழுதும் துறையினர் அளிக்க இருந்த விழாவை மறுத்துவிட்டார். இந்த அளவிற்கு 35 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய இவர் குறள்நெறிப்படி தூய நேர்மையாளராகத் திகழ்ந்துள்ளார் என்பது பெரிதும் பாராட்டிக்குரியது.

 

திருக்குறள் தொடர்பான இவரது படைப்புகள் வருமாறு:

திருக்குறள் பற்றிய நூல்கள் – 2

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்

 

திருக்குறள் பற்றிய கட்டுரைகள் – 14

 1. உழைப்பு நெறி,
 2. குறளும் கீதையும்,
 3. குறளும் வேதமும்,
 4. மாண்புறு குறளும் மாணா மனுவும்,
 5. நான் விரும்பும் நூல் – திருக்குறள்
 6. எனக்குப் பிடித்த திருக்குறள்,
 7. ஆரிய எதிர்ப்பே திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து,
 8. குறள்நெறி அறிஞர் இலக்குவனார்
 9. வள்ளுவர் வாய்மொழி (குறள்நெறி பற்றிய தொடர்)
 10. வள்ளுவர் வகுக்கும் உழைப்பு நெறியே உயர்வானது,
 11. மாநில மத்திய அரசுகளே! திருவள்ளுவரையும். திருக்குறளையும் போற்றுங்கள்!
 12. திருக்குறளில் கலைச்சொற்கள்
 13. தமிழ்ச்சிமிழ் – திருக்குறள் (திருக்குறள் தொடர்பான தமிழ் இலக்கிய மேற்கோள்கள், பாடல்கள் கட்டுரைக் குறிப்புகள் ஆகியவற்றின் தொகுப்பு – கணிணிப்பதிப்பு (2002)
 14. பேராசிரியர் வெ.அரங்கராசனது ‘திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும்’ – ஆய்வுரை

ஆம். என்னுடைய நூலுக்கும் மிக அருமையான ஆய்வுரையைத் தந்துள்ளார்.

இணையத் தளங்களிலும் நட்பு, ‘அகரமுதல’ முதலான இணைய இதழ்களிலும் வலைப்பூக்களிலும் திருக்குறள் பற்றிய ஆன்றோர்கள், சான்றோர்கள் கருத்துகளை வெளியிட்டு வருகிறார். கட்டுரையாளனாகிய நான் எழுதிய ‘திருக்குறள் அறுசொல் உரை’யையும் ‘அகரமுதல’ மின்னிதழில் வெளியிட்டு இலக்கியம் வலைப்பூவில் பதிந்து மடலாடல் குழுக்களிடையேயும் முகநூல், சுட்டுரை முதலான இணையத் தளங்களிலும் பரப்பியுள்ளார். திருக்குறள் தொடர்பானற்றை உலகம் முழுவதும் இவர் பரப்பும் பணி எல்லாராலும் பாராட்டப்பெறுகிறது.

திருக்குறள் பற்றிய பாடல்கள் – 2

 1. வள்ளுவர் மாலை (நாட்டியத்திற்கான வணக்கப்பாடல்)
 2. திருக்குறள் நூலைக் கற்றிடுவோம்!

 

திருக்குறள் தொடர்பான நூல்கள் கணியச்சில் வெளியீடு – 3

பேராசிரியர் சி.இலக்குவனாரின் பின் வரும் நூல்கள்:

 1. திருக்குறள் எளிய பொழிப்புரை (கணியச்சு)
 2. வள்ளுவர் கண்ட இல்லறம் (கணியச்சு)
 3. வள்ளுவர் வகுத்த அரசியல் (கணியச்சு)

 

பிற பணிகள்:

தமிழ்க்காப்புக்கழகம், தமிழ்த்தொண்டர் குழு, இறைநெறி மன்றம், நூலக வாசகர் வட்டம், இலக்குவனார் இலக்கிய இணையம் முதலான அமைப்புகள் மூலம் பட்டிமன்றங்கள், கருத்தரங்கங்கள், பிற நிகழ்ச்சிகள் நடத்தியும் பங்கேற்றும் தமிழ்த் தொண்டாற்றியுள்ளார். கலைமன்றங்கள், சிறுவர் மன்றங்கள் மூலம் தமிழ்க்கலைகளை வளர்க்கவும் பரப்புவும் பயிற்றுவிக்கவும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். 14 நூல்களில் இவரின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. 20 புத்ததகங்கள் எழுதியுள்ளார். 5 புத்தகங்கள் பதிப்பித்துள்ளார்.1500க்கு மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். இவை தவிர, கதைகள், தொடர்கதைகள், நம்பிக்கைத் தொடர்கள், பாடல்களும் எழுதியுள்ளார். இலக்கிய இதழ்களில் மட்டுமல்லாமல் அரசியல் விழிப்புணர்வு இதழ்களிலும் இவரது பேட்டிகளும் கட்டுரைகளும் வருகின்றன. அயல்நாட்டு இதழ்களிலும் இவரது படைப்புகள் வருகின்றன. தொலைக்காட்சிகளிலும் அவ்வப்பொழுது பங்கேற்றுத் தமிழின் சிறப்பையும் தமிழறிஞர்களின் சிறப்பையும் கூறி வருகிறார். ‘அகரமுதல’ என்னும் மின்னிதழ் ஆசிரியராக உள்ளார். இணைய வழியாகத் தமிழ் பரப்புவதில் முன்னோடியாகவும் முதலாமவராகவும் உள்ளார்.

நல்வாய்ப்பிற்கு நன்றி

இலக்குவனார் திருவள்ளுவன் குறித்து உரையாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததைப் பெரும் பேறாகக் கருதுகிறேன். திருக்குறளைப் பரப்பி வருபவர் பலர் உள்ளனர். ஆனால் மாணவப் பருவத்திலேயே திருக்குறள் வழி நடந்து திருக்குறள் வழியில் குற்றவாளிகளைத் திருப்பித் திருந்தியப் பாதையில் வாழச் செய்து நல்லறம் புரிந்தவராக, என்றும் குறள்நெறிப்படி வாழ்பவராக இவர் உள்ளதால் இவரைப்பற்றிப் பேசும் நல்வாய்ப்பு தந்த திருக்குறள் தலைமைத் தூதர் முனைவர் கு.மோகனராசு அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

 

நிறைவுரை                             

இலக்குவனார் திருவள்ளுவன், பள்ளிப் பருவத்தில் இருந்தே திருக்குறளில் ஈடுபாடுகாட்டி, குறள்நெறியில் வளர்ந்து, குறள்நெறியைப் பரப்பி, பிறர் திருக்குறள் வழியில் வாழத் தூண்டுகோலாகத் திகழ்ந்து வருபவர். எனவே,  திருக்குறள் சான்றோர் என்றால் இவர்தாம் திருக்குறள் சான்றோர்.

இலக்குவனார் திருவள்ளுவன் 133 ஆண்டு புகழுடன் வாழ்ந்து

குறளறத்தை மேலும் பரப்பட்டும்!

–  பேரா. வெ.அரங்கராசன்

முன்னாள் தலைவர், தமிழ்த்துறை,

கோ.வெங்கடசாமி நாயுடு கல்லூரி,

கோவிற்பட்டி 628 502