(திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – க௩. தமிழ் வாழுமா? வளருமா? – தொடர்ச்சி)

இன்று வாழும் தமிழ் மக்களுக்குத் தாங்கள் பயன்படுத்தும் சொற்கள் தமிழ்ச்சொற்களா? வேற்றுமொழிச் சொற்களா? எனத் தெரியாது. ஏனெனில், இடைக்காலத்தில் தமிழகத்தில் ஆரியம் புகுந்து, தன் மொழி சமற்கிருதத்தைத் தமிழுடன் கலந்து எழுதி, தமிழும், வடமொழியும் (சமற்கிருதம்) கடவுளின் (சிவனின்) இருவிழிகள் என்றும் சமற்கிருதம் “தேவபாசை” என்றும் கதைகட்டி விட்டனர். இதுகொண்டு தமிழ்மக்கள் மயங்கி தமிழ்ச் சொற்களை விட்டு வடமொழிச் சொற்களை மிகுதியாகக் கலக்கத் தொடங்கினர். இதனையறிந்த ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்,
‘வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாக் கும்மே’

என்று ஒரு நூற்பாவழி சிறு கட்டுப்பாடு விதித்தார். இவ்விதியைப் பின்பற்றி நூல் யாத்தவர் கம்பரும் வில்லிபுத்தூராருமாவர்.


இருப்பினும், தமிழர் மயக்கந்தீரவில்லை. வடமொழியையும், தமிழையும் சம அளவில் கலந்து எழுதி ஒரு புதுநடையை உருவாக்கினர். அதற்குத்தான் “மணிப்பவளநடை” எனப் பெயரிட்டனர்.


இதனால் பல்லாயிரம் தமிழ்ச்சொற்கள் வழக்கு ஒழிந்தன. ஆங்கிலம், இந்தி மொழிகளின் கூட்டுறவால் மேலும் பல தமிழ்ச் சொற்கள் வழக்கிறந்து கொண்டேயிருக்கின்றன.

தமிழுக்கு இந்நிலை ஏற்பட்டதையுணர்ந்த தமிழார்வலர் பலரும் முன்வந்து தமிழைக் காக்க முற்பட்டனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். தவத்திரு மறைமலையடிகளாரும், மொழிப் பேரறிஞர் ஞா.தேவநேயப்பாவாணருமாவர்.
மறைலையடிகளார் மகளார் நீலாம்பிகையம்மையார் இயற்றியுள்ள “வடசொல் தமிழ் அகரவரிசை” என்னும் நூல் பார்த்தால், வடமொழிக் கலப்பால் எத்துணைத் தமிழ்ச்சொற்கள் தமிழ் மக்கள் நாக்களில் நடமாடவில்லை; அவ்விடங்களை வடமொழிச்சொற்கள் வலிந்து பற்றிக் கொண்டன என்று அறியலாம்.

தமிழுக்கு என்ன சிறை? என்று சில்லோர் வினா விடுக்கின்றனர். அவர்கள் தமிழ் மொழிச் சொற்கள் எவை? வேற்று மொழிச் சொற்கள் எவை? என அறியாதவர்களே! அன்றியும், பண்டைத் தமிழ் இலக்கியங்களாம் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு ஆகியவற்றைப் பார்க்காதவர்; படியாதவரேயாவர்.
இன்று கற்றவர், கற்பிப்பவர்(teachers)கட்கும் அந்நிலையே. அவர்கள் பேச்சில், எழுத்தில் தமிழ்ச் சொற்களைக் காண்பதரிதாக உள்ளது. ஏன்? பல்லாயிரம் தமிழ்ச்சொற்கள் ஒதுக்கப்பட்டு, மறைக்கப்பட்டு, வழக்கில் வராமல் வெளியில் வராமல் (சிறையில்) வைக்கப்பட்டு விட்டன. அவற்றின் இடங்களில் வேற்றுமொழிச் சொற்கள் அமர்ந்துவிட்டன. இந்நிலை தமிழுக்குச் சிறையா? இல்லையா? சொல்க தமிழா!

சில எடுத்துக்காட்டுகள் காண்க.
புஸ்தகம் (வ.மொ.) வந்தது – பொத்தகம் (த.சொ.)
மறைந்தது.
Book (ஆ.சொ.) வந்தது – புத்தகம் (த.சொ.) மறைந்தது.
கஷ்டம் (வ.சொ.) வந்தது – துன்பம் (த.சொ.) மறைந்தது.
நஷ்டம் (வ.சொ.) வந்தது – இழப்பு (த.சொ.) மறைந்தது.
SIR (ஆ.சொ.) வந்தது – ஐயா (த.சொ.) மறைந்தது.
ராஜ்பவன் (இ.சொ.) வந்தது – அரசமாளிகை (த.சொ.)
மறைந்தது.
தாலுகா (பார்சி) வந்தது – வட்டம் (த.சொ.) மறைந்தது.
கிராமம் (இ.சொ.) வந்தது – ஊர் (த.சொ.) மறைந்தது.

இங்ஙனம் பலவுள. இடமஞ்சி விடுத்தாம்.

(தொடரும்)