திருப்புமுனைத் தேர்தலில் தி.து.வி.தினகரனுக்கு வாழ்த்து!

 

  சென்னை, இராதா கிருட்டிணன் நகர் இடைத்தேர்தல், போட்டியிடும் கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிற்கும் மத்திய ஆளுமைக்கும் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடியது.

  தேர்தல் என்றாலே ஒவ்வொருவரின் வெற்றி, தோல்வியை முடிவு கட்டுவதாக அமையும். ஆனால், இந்த இடைத்தேர்தல் போட்டியிடும் சில கட்சிகளின் வாழ்வா தாழ்வா என்பதையும் முடிவுகட்டக்கூடியதாக உள்ளது. எனவே, தமிழ்நாட்டு அரசியலில் தடம் பதிக்கத் துடிக்கும், முறைமுக ஆட்சியையாவது திணிக்க நினைக்கும் பா.ச.க.விற்கும் இதன்முடிவு இன்றியமையாததாகிறது.

   இத்தொகுதியில் அதிமுக பல முறை வென்றிருந்தாலும் அக்கட்சிக்கான தொகுதியாகக் கூற இயலாது. மக்கள் அளித்த வாக்கு எண்ணிக்கை மாறி மாறி அமைந்துள்ளது.  2015 ஆண்டு செயலலிதா இடைத்தேர்தலில் போட்டியிட்ட பொழுது  1,81,420 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். ஆனால், 2016 பொதுத்தேர்தலில் 1,90,06  வாக்களார்கள் வாக்களித்துள்ளனர். பதிவுவாக்கு எண்ணிக்கை கூடியிருந்தாலும் செயலலிதா  முன்பு, தான் பெற்ற 1,60,432 வாக்குகளை விடக் குறைவாகவே –  அஃதாவது 97,218  – வாக்குகள் பெற்றுள்ளார்.

  பொதுத்தேர்தல் என்னும் பொழுது நாடு தழுவிய கண்ணோட்டத்தில் முடிவு எடுக்கும் மக்கள் இடைத்தேர்தல் என்னும் பொழுது தொகுதி நன்மையைக் கருத்தில் கொண்டு  ஆளுங்கட்சியை ஆதரித்து வாக்களிப்பதே இதற்குக் காரணம்.

  இப்பொழுது பொதுத்தேர்தல்  நடைபெறுவதாக இருந்து செயலலிதா இருந்தாலும் வெற்றி வாய்ப்பு என்பது ஐயமே. ஆனால், நடைபெறுவது இடைத்தேர்தல். ஆளுங்கட்சிக்கு வாக்களித்து நன்மைகள் பெற வேண்டும் என்பதே வாக்காளர்களின் எண்ணமாக உள்ளது.

  இத்தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் விரைவில் ஆட்சியில் அமர வேண்டும் என்ற ஆர்வம் தாலினிடம் உள்ளது. இந்த எண்ணமே, பொதுத்தேர்தலை விரும்பாதவர்கள் தி.மு.க.விற்கு வாக்களிக்கவும் விரும்பாப் போக்கை ஏற்படுத்தியுள்ளது. ஈழத்தில் நடைபெற்ற பேரவலமான தமிழினப் படுகொலைக்குப் பின்னரும் அதை நிலையாமையாகக் கூறியதும்,  அதற்குக் காரணமான  பேராயக்கட்சியுடன்(காங்கிரசுடன்) ஆழமான அழுத்தமான உறவு இருப்பதாகக் கூறுவதும் தி.மு.க.வின்பக்கம் இருக்கும் தமிழார்வலர்களை நாம்தமிழர் கட்சியின் பக்கம் திருப்பி விடுகிறது. எனவே, தி.முக. எதிர்பார்க்கும் எண்ணிக்கையிலான வாக்குகளை அதன் வேட்பாளர் மருதுகணேசு பெறுவது ஐயமே.

 மார்க்சியப் பொதவுடைமைக் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டாலும் தேர்தலைப் புறக்கணிக்கும் அதன் கூட்டாளிக் கட்சிகள் அக்கட்சி வேட்பாளர் உலோகநாதனுக்கு ஆதரவு தராதது தவறே. பரப்புரையில் ஈடுபடாமல், தத்தம் கட்சியினரின் வாக்குகளை அவருக்கு அளிக்குமாறு  வேண்டினால்,  அவருக்குக் கணிசமாக வாக்குகள் கிடைக்க வாய்ப்பிருந்திருக்கும். அவ்வாக்குகள் தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும்தான் போகப்போகின்றது.

 தே.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றபின்னர் ஆளுங்கட்சிக்கு விலை போகும் முன்னர் நாமே ஆளுங்கட்சிக்கு வாக்களித்தால் என்ன என்ற எண்ணத்தையும் வாக்காளர்களிடம் எற்படுத்தியுள்ளது.

  பா.ச.க.வின் மறைமுக ஆட்சிகூட வரக்கூடாது என எண்ணுபவர்கள் பா.ச.க.வின் வேட்பாளர் கங்கை அமரன் வெற்றி பெற வேண்டும் என எண்ணுவார்களா என்ன?

  அரசியல்வாதிகளிடம் உள்ள பொதுவான நல்ல பண்புகளில் ஒன்று, எளிமையாக யாவருடனும் பழகுவதுதான். ஆனால்,  உறவைச் சொல்லிக்கொண்டு அரசியலில் குதித்து இடைத்தேர்தலில் களம் காணும் தீபாவிற்கு மக்களுடன் மக்களாகப் பழகுவது ஒவ்வாமையாக உள்ளது. எனவே, தொடக்கத்தில் அவர்மீது ஒரு சாராருக்கு ஏற்பட்ட  மயக்கம் தெளிந்து கொண்டுள்ளது.

  எனவே, அவர் பேரவையை அதிமுகவின் ஓர் அணியாகக் கருதும் நிலைகூட இல்லாமல் போகும் வாய்ப்பே உள்ளது.

 பிளவு அதிமுகவின் பன்னீர் அணியில் மதுசூதனன் வேட்பாளராக நிற்கிறார். அவர் வாகை சூடிய தொகுதிதான் இது. என்றாலும் வாக்குகள் தனிப்பட்டவர் அடிப்படையில் இல்லாமல் கட்சிசார்ந்தே அளிக்கப்படுகின்றன. பிளவு அணி   வெற்றி பெற்றால் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றலாம் என்ற எண்ணம் மட்டுமே இவர்களது இலக்கு. இத்தகைய நிலை தமிழ்நாட்டிற்குக் கேடு விளைவிப்பதாகும். இவர்கள் பெறும் வெற்றிபா.ச.க.வின் அடிமை ஒப்பந்தத்தில் கையாப்பமிடுவதற்கு ஒப்பாகும்.

  பொதுவாக எக்கட்சியிலும் பிரிந்து செல்வோரிடம் மதிப்பும் அன்பும் இருந்தாலும் பெரும்பான்மையர் அமைப்பை விட்டு வெளியே வருவதில்லை. அதிமுகவில் செல்வாக்குடன் இருந்து விலகிய சே.து.சோமசுந்தரம்(S.D.S.), இராம.வீரப்பன், திருநாவுக்கரசர் முதலானோர் காணமால்  போன அல்லது மீண்டும்  அடைக்கலம் பெற்று முகவரி பெற்ற நிலைகளே ஏற்பட்டுள்ளன.

  திமுகவில் செல்வாக்கும் பலரின் ஆதரவும் பெற்ற வைகோவாலும் திமுகவில் பெரும் பிளவை உருவாக்க இயலவில்லை. மக்கள்திலகம் எம்ஞ்சியார் விலகியபோதும் கட்சியில் யாரும் அவர் பக்கம் இல்லை., அவரது திரைப்பட நேயர்கள் அவர் பக்கம் இருந்தே அவரை வெற்றி பெறச்செய்தனர். எனவே, பிளவு அணி வெற்றி  பெறும் என்பது பகல் கனவே. என்றாலும் கணிசமான வாக்குகள் பெற்று அதிமுகவைத் தோற்கடிக்கலாம் என நம்பியிருப்பர். “கட்சியில் பிளவு ஏற்படுத்தவாவது திமுக  மறைமுகஆதரவு அளிக்கும். அதனால்தான் வலுவில்லாத வேட்பாளரை அக்கட்சி நிறுத்தியுள்ளது” என்றும் கருதுகின்றனர்.

  பிற கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பது திமுகவின் இலக்கு அல்ல. மு.க.தாலினும் அதற்காகக் கட்சியை நடத்திக் கொண்டிருக்கவில்லை. அவர், நமக்கு நாமே என்றுதான் சுற்றுகிறாரே தவிர, ‘பிறருக்கு நாமே என்றல்ல! எனவே, இந்த எண்ணம் பலிக்காது. ஆனால், இவர்கள் பெறும் வாக்குகள்,  ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுக்கும் என்பதால், அந்த அச்சத்தின் காரணமாக வாக்குகள் கிடைப்பது குறைவாகத்தான் இருக்கும்.

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்

விற்றற்கு உரியர் விரைந்து. (திருவள்ளுவர், திருக்குறள் 1080)

என்பதற்கு எடுத்துக்காட்டானவர்களை உடைய பிளவு அணி தோல்வியைத் தழுவுவது நாட்டிற்கு நல்லது.

  ஆளுங்கட்சி என்ற தகுதியுடன் தி.து.வி.(டி.டி.வி.)தினகரன் போட்டியிடுகிறார். பனங்காட்டு நரி சலசலப்பிற்கு அஞ்சாது என்பதுபோல் பிளவு அணியின் ஆரவார உரைகள் கண்டு அஞ்சாமல் உள்ளார். மு.க.தாலின்,  தன்னைத் தவிர குடும்பத்தினர் பிறர் கட்சியில் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என எண்ணுவதுபோல், இவரும் உறவினர்களைக் கட்சியிலிருந்து தள்ளியே வைத்துள்ளார். கட்சியைப் பிடியில் வைத்திருக்கவும் ஆட்சி கலையாமல் இருக்கவும் கட்சிப்பிளவினைப் போக்கவும் இவரது வெற்றி இவருக்கும் கட்சிக்கும்  தேவையாக உள்ளது.

   இவர் வெற்றி பெற்றால் முதல்வராவார்; எனவே, முதல்வரையும் அவரைச் சார்ந்தவர்களையும் அச்சம் பிடித்துக்கொண்டுள்ளது. அவர்கள் இவர் வெற்றியை விரும்பவில்லை என்பதுபோல் ஊடகங்களில் கற்பனை உலா வந்துகொண்டுள்ளது. அவ்வாறான சூழல் ஏற்பட்டாலும் விட்டுக் கொடுப்பவர்களுக்கு மிகுந்த செல்வாக்கு கிடைக்கும். ஆனால், பிளவு அணியை வெற்றி பெறச்செய்தால் உள்ளதும் போகும் என்பதை அறிந்துள்ளதால் அவ்வாறு யாரும் எண்ணவில்லை. ஆனால், திரும்பத் திரும்பச்சொல்லிக் குழப்பத்தை ஏற்படுத்த  ஊடகத்தினர் முயன்றாலும் கட்சியினர் தெளிவாக உள்ளதால் அதற்கான வாய்ப்பு இல்லை.

  தினகரன் வெற்றி பெற்றதும், அமைச்சர்களுக்கெல்லாம் அமைச்சர் போன்ற செல்வாக்கு உள்ளதால், குறைந்தது ஓராண்டேனும் அமைச்சர் பதவியை நாடாமல் இருப்பது நல்லது. இதனைத் தன் கட்சியின் தலைவர்களிடமும் அமைச்சர்களிடமும் இப்பொழுதே சொல்லிவிடுவதும் நன்று.

  திட்டமிட்டுச் செயலாற்றும் திறன் மிகுந்த தினகரன், தன் முந்தைய நா.உ.பொறுப்பில் பெற்ற பட்டறிவைக் கொண்டு, மெல்ல,  வெற்றிப்பாதையை நோக்கிச்  சென்று கொண்டுள்ளார்.

  யார் ஆட்சியில் இருந்தாலும் ஆட்சிக்காலம் முழுவதும் அக்கட்சியே ஆளுங்கட்சியாக இருக்க வேண்டும் என எண்ணுபவர்கள், இவர் வெற்றியையே விரும்புகிறார்கள்.

  எனவே, வெற்றிக்கு வாழ்த்துகிறோம்! வென்றபின்னர், உழவர் நலன், ஏழு தமிழர் நலன்,  நீண்ட காலச்சிறைவாசியர் நலன், பிற தமிழர் நலன், முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் நலன், தமிழினப்படுகொலையாளிகளுக்குத் தண்டனை வாங்கித்தரும் மனித நேயநலன், தமிழ்ஈழ நலன், தமிழ்மொழி நலன்  என எல்லாவற்றிலும் கருத்து செலுத்தி அரசிற்கு நல்ல வழிகாட்டியாக அமைவாராக!

  தமிழினப் பகை யரசாகிய பா.ச.க.தன் தமிழ்ப்பகைச் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்த வழி காண்பாராக!

இலக்குவனார் திருவள்ளுவன்