திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 12 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்
திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்
12
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.(திருவள்ளுவர், திருக்குறள் 338)
கூட்டிற்கும் அக்கூட்டில் இருந்து அதைத் தனித்துவிட்டுப் பறந்து செல்லும் பறவைக்கும் உள்ள தொடர்புதான் உடலுக்கும் உயிருக்கும் என்கிறார் திருவள்ளுவர்.
மறுபிறவியில் நம்பிக்கை உள்ள சமயவாதிகள் உடலிலுள்ள உயிர் குறித்து மீண்டும் வேறு உடலில் புகும் என்பதுபோன்ற கருத்துகளைக் கூறுகின்றனர். ஆனால், அறிவியலாளர்கள் மறுபிறவிபற்றிக் கூறுவதில்லை. உடலறிவியலைச் சிறப்பாகக் கூறும் அவர்கள் உடலைவிட்டுப் பிரிந்த உயிரை ஆராய்வதில்லை. திருவள்ளுவரும் மீண்டும் உயிர் எங்கு தங்கும் என்றெல்லாம் ஆராயாமல் பிரிந்து செல்வதை மட்டும் கூறுகிறார்.
‘குடம்பை’ என்பதை மணக்குடவர், பரிப்பெருமாள், காளிங்கர் முதலான உரையாசிரியர்கள் ‘கூடு’ என்கின்றனர். பரிதி, பரிமேலழகர் ‘முட்டை’எனப் பொருள் கொண்டு முட்டையிலிருந்து குஞ்சு வெளியே வருவதைக் கூறுகின்றனர். முட்டையிலிருந்து வெளியே வருவது குஞ்சுதானே தவிர, பறவை அல்ல.
தமிழ்ச்செம்மல் வ.உ.சிதம்பரனார், இக்குறள் “உடம்பை விட்டு உயிர் நீங்கும் தன்மை யையே கூறுகின்றது; உடம்போடு உயிர் தோன்றுதலையாவது, உடம்பினுள் உயிர் மீண்டு புகாமையையாவது கூற வந்ததில்லை; முட்டையை விட்டு வெளிப்படும் உயிரை அப் பருவத்தில் பார்ப்பு என்று சொல்லுதல் வழக்கே யன்றிப் புள் என்று சொல்லுதல் வழக்கன்று; முட்டையை விட்டு வெளிப்பட்டவுடன் பறக்கும் பார்ப்பை நாம் கண்டது மில்லை. கேட்டது மில்லை” என முட்டை என்று கூறுப்படுவதை மறுக்கிறார். அதுபோல், உடம்பைக் கூடு என்று சொல்வதுதான் மரபே தவிர, முட்டை என்று சொல்வதில்லை எனத் தண்டபாணி தேசிகர் முட்டை என்பதை மறுக்கிறார்.
முட்டை யிலிருந்து பறவை வெளியே வருவது வாழ்வின் தொடக்கம். சாவு என்பது வாழ்வின் முடிவு. இரண்டையும் பொருத்துவது ஏற்க இயலாதது என்றும் அறிஞர் கூறுவர்.
குடம்பை என்னும் சொல் சங்க இலக்கியங்களில் 20 இடங்களில் கூடு என்னும் பொருளில்தான் வருகிறது.
ஆனால், சிலர் இரண்டிற்கும் பெரிய வேறுபாடில்லை, இரண்டும் நிலையாமையைத்தான் கூறுகின்றன என இரண்டையும் ஏற்கும் வகையில் கூறுகின்றனர்.
திருவள்ளுவர் கூடு, பறவை என்று சொல்லாமல் முறையே குடம்பை, புள் ஆகிய கலைச்சொற்களைப் பயன்படுத்துகிறார். நிலையாமையை வலியுறுத்தவே உயிர் வாழ்க்கை நிலையாமையைக் கூட்டிற்கும் பறவைக்கும உள்ள தொடர்பு மூலம் நமக்கு விளக்குகிறார்.
வாழ்க்கை நிலையில்லாததுதான். ஆனால், போர் வெறியாலும் இன, மத வெறியாலும் சிறிது காலமேனும் நிலைத்து நிற்கும் வாய்ப்பு உள்ள உயிர்களை நிலையில்லாத் தன்மைக்குக் கொண்டு சென்று அழிப்போர் இவ்வுலகில் இன்னும் உள்ளனரே!
– இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி, 02.08.2019
Leave a Reply