திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்

 

15

அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தற்கு இயல்பு

(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்:இறைமாட்சி, குறள் எண்: 382)

 

அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய நான்கு பண்புகளும் குறைவின்றி ஆள்வோரிடம் இருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

நாட்டில் இயற்கைப் பேரிடர், உட்பகையால் எதிர்ப்பு, அயல்நாட்டுப்பகையால் எதிர்ப்பு முதலான நேர்வுகளில் மனம் கலங்காமல் சிந்தித்து முடிவெடுத்துச் செயல்படுத்த அஞ்சாமை தேவைப்படுகிறது.

பதவிப்பொறுப்புகளில் இல்லாத அரசர்கள், கலைஞர்கள் முதலானவர்கள் பொருள்நிலை குறித்துக் கவலைப்படாமல் தங்கள் புலமையில் ஈடுபாடு காட்ட அரசு அவர்களை ஆதரிக்க வேண்டும். அதற்கு ஈகை தேவை. பஞ்சம், வறட்சி, வெள்ளப் பெருக்கு, புயல் முதலான பெருந்துன்ப நேரங்களில் மக்களுக்கும்  ஈதல் வேண்டும். எனவேதான் ஈகையையும் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

ஆனால் உரையாசிரியர் காலிங்கர் ஆரியச் சாதிமுறையைப் புகுத்தி, “ஈகை என்பது கீழ்ச்சொன்ன இல்லறத்து இயல்பாகிய கொடை நெறிக்கு அடங்காது தனது பெரும்பொருட்கும் பெருந்தன்மைக்கும் ஏற்குமாறு மற்ற அந்தணர் முதலாக, இழிகுலத்தாராகிய புலையர் ஈறாக அனைவர்க்கும் வரம்பற வழங்கும் வண்மை என அறிக.” எனக் குறிப்பிட்டுள்ளார். அனைவர்க்கும் எனக் கூறி இருந்தாலும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற திருவள்ளுவர் இங்ஙனம் கருதியதாகக் கூறுவதே கொடுமைதான்.  தவறாகக் கற்பிக்கப்பட்ட எவ்வகைப் பாகுபாடுமின்றி நாட்டு மக்கள் துயரத்தில் பங்கேற்கும் ஈகைப் பண்பு அரசிற்குத் தேவை என்பதே வள்ளுவர் நெறி.

அரசறிவு, வேளாணறிவு, நீர் மேலாணறிவு, தொழிலறிவு, உளவியலறிவு, உலகநாடுகள்பற்றிய அறிவு, வினையறிவு எனப் பலதரப்பட்ட அறிவுப்புலங்களிலும் சிறந்திருந்தால்தான் நல்லாட்சி தர இயலும். அறிவைக் குற்றத்திலிருந்து காக்கும் கேடயமாக, “அறிவு அற்றம் காக்கும் கருவி” (திருக்குறள் 421) எனத் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். எனவே, குற்றமில்லா ஆட்சிக்கும் மக்களைக் குற்றமில்லாப் பாதையில் செலுத்தவும் அறிவுடைமை ஆள்வோர்க்குத் தேவை என்கிறார் திருவள்ளுவர்.

“அறிவு என்பது மற்று தகுதியும் தகுதியல்லதும் தெரிந்து உணரும் உணர்வு” எனக் காலிங்கர் கூறுகிறார். அத்தகைய தெரிவு உணர்வு இல்லாததால்தான் தகுதியற்ற திட்டங்களைத் தகுதியுடையனவாகக் காட்டித் துன்புறுத்தும் நிலை நாட்டில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

“ஊக்கம்  என்பது மக்களை மேம்படச் செய்வதற்குரிய கொள்கை.” அதற்கு விடா முயற்சியும் எப்பொழுதும் மனம் கலங்காத் தன்மையும் தேவை. ஊக்கம் இருந்தால் மட்டுமே சிறப்பாகச் செயலாற்ற முடியும். எனவே ஊக்கமுடைமையையும் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

மேற்குறித்த நான்கு பண்புகளும் ஆட்சித்தலைமைக்கு மட்டுமல்லாமல், கட்சித்தலைமை, நிறுவனத் தலைமை, ஏன், குடும்பத்தலைமைக்கும்கூடத் தேவை. எனவே நாம் ஒவ்வொருவருமே, அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் கொண்டு சிறப்புற வாழ்வோம்!

இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி, 08.08.2019