திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

 45

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை

(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 411)

செல்வங்களுள் சிறப்புடையது செவிச்செல்வம். அது எல்லாச் செல்வங்களிலும் தலைமையானது என்கிறார் திருவள்ளுவர்.

கல்வியின் சிறப்பையும் கல்லாமையின் இழிவையும் கூறிய திருவள்ளுவர் அடுத்துக் கேள்வியை வைத்துள்ளார். கேள்வி என்றால் வினா என்று நாம் தவறாகப் பொருள் கொள்கிறோம். “கேள்வி என்றால் வாழ்க்கைக்குப் பயன்படும் நூற்பொருள்களைக் கற்றறிந்தார் கூறக்கேட்டல்”  எனப் பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்குகிறார். “செல்வமாவது செவி, மெய், வாய், கண், மூக்கு இவற்றுள் செவியான் விளையும் உணர்வு பெரியது” என்று பரிதியும்  “உலகத்துச் செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்த செல்வம் யாதெனின், செவிச்செல்வம்” என்று காலிங்கரும் விளக்குகின்றனர்.

தனம், தானியம், தைரியம், வீரம், வித்தை, கீர்த்தி, விசயம், அரசு என்னும் எட்டு வகைச் செல்வத்திலும் பெரிது கேள்விச்செல்வம் என்கிறார் பரிதி.

பரிமேலழகர், பொருளால் வரும் பிற செல்வங்கள் நிலையற்றவை என்பதாலும் துன்பத்தை விளைவிப்பன என்பதாலும் அவற்றை விடக் கேள்விச்செல்வமே தலையாயது என்று விளக்குகிறார்.

பணிதல்….செல்வர்க்கே செல்வம்(குறள் 125), அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்(குறள் 241), வேண்டாமை அன்ன விழுச்செல்வம்(குறள் 363), கேடில் விழுச்செல்வம் கல்வி(குறள் 400) எனத் திருவள்ளுவரே குறிப்பிடும் செல்வங்களுள் தலையாயது கேள்விச்செல்வம் எனலாம்.

“கற்றலின் கேட்டலே நன்று” என்பது ஏன் வந்தது? இன்றைய அச்சு முறையிலும் இணையப் பயன்பாட்டிலும் ஆளுக்கு ஒரு நூல் வைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, படிப்பு பரவலாகிறது.ஆனால் ஓலைச்சுவடி முறையில் எழுதி எழுதித்தான் படிகள் எடுக்க இயலும். எனவே, படிப்பதை விடக் கற்றோரிடம்  கேட்டு அறிவு பெறும் வழக்கமே மிகுதியாக இருந்துள்ளது. கல்வியில் ஐயம் அகற்றித் தெளிவு பெறவும் ஆழக் கற்கவும் கேள்விச்செல்வம் பெரிதும் துணையாக இருந்துள்ளது. எனவே, கேள்விச்செல்வம் போற்றப்படுகிறது.  இக்காலத்திலும் நாமாகப் படித்துப் புரிந்து கொள்வதைவிட நன்கு கற்றவர் சொல்வதைக் கேட்பது எளிதில் புரிகின்றது. கற்றலில் கேட்டலும் சரிபாதியாகின்றது. உலகின் ஏதோ ஒரு மூலையில் உள்ளவர் சொல்வதை வேறு ஏதோ ஒரு மூலையில் உள்ளவர் அல்லது உலகெங்கும் உள்ளவர்கள் கேட்பதற்கு உரைப்பதிவுகள், காட்சிப்பதிவுகள், ஒலி-ஒளி பரப்புகள் முதலான அறிவியல் வசதிகள் உதவுகின்றன. ஆதலின் இன்றும் கேட்டுப்பெறும் அறிவு முதன்மை இடத்தைப் பெறுகின்றது.

கேள்விச்செல்வத்தைத் தலைமையானதாகப் போற்று!

இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 20.09.2019