திருவள்ளுவர் அகப்பொருள் நெறி : நூலாய்வுக் கட்டுரை – 3/4 – வெ.அரங்கராசன்


(திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 2/4 தொடர்ச்சி)
முனைவர் கு.மோகனராசின் திருவள்ளுவர் அகப்பொருள் நெறி
நூலாய்வுக் கட்டுரை – 3/4
இம்முப்பொருள்களும் கீழ்க்காணும் 2 வகைப்பாடுகளில் வழங்கப்பட்டுள்ளன.
- முதல் பொருளும் கருப்பொருளும் 13 வகைகளில் வழங்கப் பட்டுள்ளன. அவை 1 முதல் 13 தலைப்புகளில் அமைந்துள்ளன. அவை:
1.அறிமுகம் 2. காமம்
3.பாடல் வடிவம் 4.திணைப் பகுப்பு
5.நாடக வழக்கு 6.அகப்பொருள் தலைமக்கள்
7.பெயர் வரும் முறைமை 8.கூற்று முறைமை
9.நிலம் 10.பொழுது
11.பிரிவு [பொது] 12.களவு
13.ஐயங்கள்
- உரிப்பொருள்கள் 24 வகைகளில் வழங்கப்பட்டுள்ளன.
இவை 14 முதல் 37 தலைப்புகளில் தரப்பட்டுள்ளன. அவை காமத்துப்பாலில் உள்ள 24 தலைப்புகள்.
இந்த 37 தலைப்புகளும் நூலின் அகக்கட்டமைப்பியல் முறைமை என்னும் பகுதியில் மொழியப்பட்டுள்ளன.
9.0.0.0. ஆய்வுப் போக்கியல் முறைமை:
250 குறட் பாக்களை கூர்ந்து, ஆழ்ந்து 133 நூற் பாக்களாக்கி, அவற்றைத் திருக்குறள் அகப்பொருள் நெறி என அமைத்துள்ளார் நூலாசிரியர்.
.
அவை 37 தலைப்புகளில் உள்ளன. தலைப்புகளுக்கு வரிசை எண்கள் வழங்கியுள்ளார் நூலாசிரியர். ஒவ்வொரு தலைப்பின் கீழும் உரிய நூற் பாக்களைக் கூறி, அவற்றிற்கும் வரிசை எண்களையும் வழங்கியுள்ளார்.
அனைத்து நூற் பாக்களையும் காமத்துப்பாலில் உள்ள ஒவ்வோர் அகப்பொருள் நெறியின் உள்ளடக்கத்திற்கு ஏற்ப,, நாற்சீர் அடிகளில் வடித்துள்ளார். அவற்றை 1 முதல் 13 அடிகள் வரை வரைந்துள்ளார்.
10.0.0.0.குறளுக்குப் புதிய பொருள்கள் கண்டுள்ள முறைமை:
காமத்துப்பாலில் உள்ள 250 குறட் பாக்களில் எந்த ஒரு குறட் பாவினையும் கொடுத்து, அதற்கு உரிய புதிய பொருள் காணும் முறைமை என்பது இந்நூலில் இல்லை. ஏனென்றால், அதற்கு உரி ய தேவையும் இங்கு நூலாசிரியருக்கு ஏற்படவில்லை.
ஆனால், அதற்கும்மேல் மிக நுட்பமான ஆய்வியல் முறைமை இந்நூலில் அமைந்துள்ளது. அஃதாவது, ஊடுபொருள் காணும் மிகப் புதிய நுண்ணியல் முறைமை. நூலாசிரியர் ஊடுபொருளாக நுவல்வனவற்றுள் 3ஐ மட்டும் இங்கு இயம்புவாம். .
அவை:
1.காமத்துப்பாலின் 250 குறட் பாக்களுக்குள் ஊடுருவி நிற்கும் பொருளாக நூலாசிரியர் தரும் நூற்பா:
அகப்பொருள் மரபுகள் அறிவன அறிந்து
உலக மாந்தர்க்கு உரியன தேர்ந்து
அறமுத லாகிய அப்பொருள் குறித்து,
குறையேதும் இன்றிக் குடும்ப வாழ்க்கையில்
உறவு தழைக்க உணர்வு செழிக்க
ஒருமைப் பாடும் உறுதி கொள்ளத்
திருவள் ளுவனார் தெளிந்துரைத் ததுவே
அருமறை பேசும் அகப்பொருள் மரபே [பக்.9].
2.அன்பின் ஐந்திணை அடிப்படை யாயினும்
ஐந்திணைப் பகுப்போ இப்பாற்கு இல்லை;
அன்புடை உள்ளத்து உணர்வே பகுப்பு [பக்.10].
3. அனைவகை நிலனும் அகப்பொருட் குரித்தே [பக்.14].
11.0.0.0. நூல்ஆய்வியல் நுட்பம்:
ஒரு நூலுக்குத் திறனாய்வுக் கட்டுரை வரைதல் சாலவும் எளிய செயல். ஆனால், ஒரு நூலில் / ஒரு நூலின் ஒரு பகுதிக்கு, அதில் உள்ள பொருண்மைகளுக்குத் தொல்காப்பியம், நன்னூல், நம்பி யகப்பொருள், யாப்பருங்கலக்காரிகை போன்ற நூல்களில் உள்ள நூற் பாக்கள்போல், நூற்பாக்களை நன்முறையில் ஆக்குதல் சாலவும் கடினச் செயல்.
ஏனென்றால், அந்நூலை / அந்நூல் பகுதியினை அணுகி, நுணுகி, ஆழ்ந்து, கூர்ந்து, அறிந்து ஆராய்ந்து உணர்கிற ஆய்வியல் நுட்பத் திறன், நூலாசிரியரிடம் திட்பமுடன் நிறைந்திருத்தல் வேண்டும். இலக்கணக் கல்வியும் இலங்குதல் வேண்டும்.
திருவள்ளுவர் அகப்பொருள் நெறி என்னும் இந்நூல் 24 பக்கங்களைக் கொண்டது; சிறியது; ஆனால், ஆய்வியல் நுட்ப நோக்கில் பெரியது; அரியது; உலகிற்கே உரியது.
இந்நூல் நூலாசிரியர் முனைவர் கு.மோகராசு அவர்களின் அளவற்ற ஆய்வியல் நுட்பத் திறனை அருமையாக — ஆழமாக — அழகாக அறைகிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் சில ஆய்வியல் நுட்பத் திறன்சார் கண்டுபிடிப்புகள் 4 மட்டும் தரப்படு கின்றன.
- களவு வாழ்வினில் காதலர் இருவர்
உளக்கூற் றல்லால் பிறர்கூற் றிலவே [ப.11].
- சாதி மதம்இனம் நாடிவற் றோடே
ஓதிய கல்வி ஓங்கிய செல்வம்
மேதினி யிற்பிற வேற்றுமை ஏதும்
காதற் குத்தடை ஆதற் கில்லை. [ப.12].
- மெய்யுறு புணர்ச்சி
அகப்பொருட்கு ஆகும்; அறப்பொருட்கு ஆகாது [ப.14].
- பெண்மடல் விலக்கல் பெண்மைக்குப் பெருமை [ப.14].
12.0.0.0. புதிய ஆய்வு முடிவுகள் / கோட்பாடுகள்:
காமத்துப் பாலில் திருவள்ளுவர் செய்த மாற்றங்களும் புரட்சிகளும்:
சங்க இலக்கிய அகப்பொருள் பாடல்களில் தங்கியிருந்த பொருந்தாத அகப்பொருள் நெறிகளையும் மரபுகளையும் ஆழந் தராய்ந்தார் ஐயன் திருவள்ளுவர்.
அவற்றில் ஆழ்ந்திருக்கும் பொருந்தாத அகப்பொருள் நெறிகள், மரபுகள் ஆகிய கசடுகளைக் கழித்தார். அவற்றை விழிப்புணர்வுடன் தூய்மை மிக்கனவாக ஆக்கித் தந்தருளினார்.
சில மாற்றங்களையும் புரட்சிகளையும் செதுக்கித் தூய, அகப்பொருள் நெறிகளாகவும் மரபுகளாகவும் உலகப் பொதுமை யியல் சார்ந்த பாங்கில் பகர்ந்தார் பொய்யா மொழியார்.
திருவள்ளுவrர் அகப்பொருள் நெறி
காமத்துப்பாலை அறிந்து, உணர்ந்து ஆராய்ந்த நூலாசிரியர் முனைவர் கு.மோகனராசு அவர்கள், திருவள்ளுவர் செய்த மாற்றங்களாகவும் புரட்சிகளாகவும் கண்டறிந்த ஆய்வு முடிவுகளாக இந்நூலில் 20ஐ வழங்குகிறார். அவற்றுள் 11 மாற்றங்களையும் புரட்சிகளையும் மட்டும் இங்கு மொழிவாம். .
- அகத்திணைப் பாடலை — காமத்துப்பாலை முதன்முதல் குறள் வெண்பாவில் பாடியவர்.
- காமம் என்பதன் பொருண்மையைப் பல கோணங்களில் உயர்த்தி, அதன்மூலம் காதலின் பொருண்மையையும் அதன் மூலம் உயர்த்தியமை.
- அன்பின் ஐந்திணை உணர்வுகளை மட்டுமே அகப்பொருளின் பாடுபொருளாகக் கொண்டமை.
- காதலர் இருவரின் முதல் சந்திப்புக்கு ஊழைக் காரணம் ஆக்காமை.
- தலைமக்களின் உள்ள உணர்வுகளை மட்டுமே அகப்பொ ருள் ஆக்கியமை.
- களவில் மெய்யுறு புணர்ச்சியைத் தவிர்த்தமை.
- பெண்ணுரிமையைக் குறிக்கோளாகக் கொண்ட பெண்களை அகப்பொருள் தலைமக்கள் ஆக்கியமை.
- “ஒருவனுக்கு ஒருத்தி” என்னும் கோட்பாட்டை ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும் கோட்பாடு ஆக்கியமை.
- ஊடற் பொருண்மையில் பரத்தமையின் காரணமாக அமையும் ஊடலை முற்றிலும் தவிர்த்தமை.
- பெண்ணை ஆணுக்கு நிகரான அறிவு உள்ளவளாகப் படைத்தமை.
11.மலரினும் மெல்லிது காமம்; சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார் [குறள்.1289]
என்னும் குறளுக்கு எடுத்துக்காட்டான வாழ்க்கை நெறியைக் கொண்ட தலைமக்களை, அகப்பொருள் மாந்தர் ஆக்கியமை..
(தொடரும்)
பேராசிரியர் வெ.அரங்கராசன்
முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர்
கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி
கோவிற்பட்டி — 628 502, கைப்பேசி: 9840947998
மின்னஞ்சல்: arangarasan48@gmail.com
Leave a Reply