திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 4/4 – வெ.அரங்கராசன்
(திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 3/4 தொடர்ச்சி)
முனைவர் கு.மோகனராசின் திருவள்ளுவர் அகப்பொருள் நெறி
நூலாய்வுக் கட்டுரை – 4/4
13.0.0.0. நலம் நடைநலம்:
ஒரு நூலை / ஆய்வு நூலை மிகக் கடினப்பட்டு, நூலாசிரியர் நெய்கிறார். அந்நூல் ஆய்ஞர், அறிஞர், கற்றார், கல்லார், சுவைஞர் என அனைவரிடமும் சென்று அகத்துள் பதிய வேண்டும்.
அவ்வாறு செலச்செல்வதற்கு நூலின் நடை நலம் மிக இன்றியமையாதது. அப்போதுதான், நூலாசிரியரின் ஆய்வுக்கும் அரிய உழைப்புக்கும் ஆன்ற பயன் ஊன்று நிலை தோன்றும்.
இதன் நடை எல்லோருக்கும் புரியும்படியான எண்பொருளவாகச் செலச்சொல்லும் தண்தமிழ் நடை. கடினமான நூற்பாக்களை எளிமையாக நுவலும் ஏற்புடைய நடை. தெளிவு மிக்க தீந்தமிழ்த் தனிநடை, பொலிவு மலிந்த நடை; போற்றலுக்கு உரிய பொற்றமிழ் நடை.
13.1.0.0. அகச்சான்றுகள் — 8 மட்டும்:
- அறம், பொருள், இன்பம் என்னும் பாகுபாட்டில் அறத்தின் பொருளும் உண்டு. இன்பமும் உண்டு. பொருளில் இன்பமும் உண்டு. அறமும் உண்டு. இன்பத்தில் அறமும் உண்டு. பொருளும் உண்டு.
இது எளிய நடைக்கு உரிய அகச்சான்று [பக்.4].
- சுருங்க அமைந்து விரிந்த பொருளதாய் [பக்.9].
இது அடிமுரண் எதுகை.
- தீட்டிய அகப்பொருள் காட்டிய தலைமக்கள் [பக்.10].
இது அடி எதுகை.
- தினைநிலைப் பெயரும் துணைநிலைப்பெயரும்
சினைநிலைப் பெயரும் அணிகலப் பெயரென [பக்.10[.
இது எதுகை.
- அன்பின் ஐந்திணை அடிப்படை யாயினும். [பக்.10].
இது உயிரின மோனை.
- களவு வாழ்வினில் காதலை இருவர் [பக்.11].
இது வல்லின மோனை.
- மடல்ஊர் நினைப்பை மனத்தினில் எழுப்பும். [பக்.14].
இது மெல்லின மோனை.
- விழியினை நிறுத்தி, வியத்தலும் இரங்கலும் [பக்.9].
இது இடையின மோனை.
14.0.0.0. நூற் பயன்:
ஒரு நூல் / ஆய்வு நூல், ஆக்கப் பயன் சார்ந்த நோக்குடன் சிறத்தல் வேண்டும். அந்த வகையில் முனைவர் கு. மோகனராசு அவர்கள், அளித்திருகும் இத்திருக்குறள் அகப்பொருள் நெறி யின் பயன்பற்றி,
“இந்த நூல் முயற்சி முதலாவது என்றாலும் முதன் மையானது. நுண்ணியது; திண்ணியது; இனிக் காமத்துப் பால் கற்பார்க்கு / ஆய்வார்க்கு வழிகாட்டியாக அமைய வல்லது [பக்.8]
என முன்னுரையில் மொழிந்துள்ளார்.
15.0.0.0. நூல் உருவாக்கத்தில் நூலாசிரியரின் உழைப்பு:
இந்நூல் 24 பக்கங்களைக் கொண்ட சிறிய நூல்தான். இதனை நெய்தற்கு நூலாசிரியர் முன்னெடுத்த மேலான முயற்சி பெரியது. அவரது அயர்ச்சி, தளர்ச்சி அறியா முயற்சியை
அருமை உடைத்[து]என்[று] அசாவாமை வேண்டும்;
பெருமை முயற்சி தரும் [குறள்.611]
என்னும் குறட் பாவினை நம் முன்னர்க் கொண்டுவந்து நிறுத்து கிறது. இதுபற்றி நூலாசிரியர்,
“திருவள்ளுவர் அகப்பொருள் நெறி என்னும் பெயரிலான இந்த நூல், 133 நூற்பாக்களை உலகோர்க்கு வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன். ஒரு சிறுபணியை நிறைவாகச் செய்த மனநிறைவு கொள்கிறேன்.
பணி சிறியது என்றாலும் உழைப்பும் அதனாலாய பயனும் மிகப் பெரியது என்பது உறுதி.[பக்.8].”
என முன்னுரையில் பொன்னுரையாக மொழிந்துள்ளார்.
16.0.0.0. நன்றி உணர்வு:
ஒரு நூலை எழுதி முடித்தபின், அதனை நூலாக உருவாக்கல் வேண்டும்; வெளியிடவும் வேண்டும். அதற்கு மற்றவர்களது உதவிகளும் தேவை. அவ்வகையில் இந்த நூலுக்கு உதவியர்களுக்கு மறக்காமல் முன்னுரையில் நூலாசிரியர் நன்றி நவின்றுள்ளார்.
இதனை,
“நூலாக வெளியிட முன்வந்துள்ள மணிவாசகர் பதிப்பத்தார்க்கு — குறிப்பாக, பதிப்புச் செம்மல், பேராசிரியர் முனைவர் ச.மெய்யப்பன் அவர்களுக்கும் திரு இராம. குருமூர்த்தி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். [பக்.8]”
என அவர் குறித்துள்ளமை, அவரது நன்றி அறிதலை நன்குணர்த்தும். நன்றி மறப்பது நன்றன்று [குறள்.108] என்னும் குறட் தொடரை, அவர் வாழ்வியல் ஆக்கிய ஆழ்தன்மையை அருமையாகவும் அறிவிக்கிறது.
17.0.0.0. நிறைவுரை:
திருவள்ளுவர் அருளிய அறத்துப்பாலும் பொருட்பாலும் -உலக மாந்தர்கள் அனைவர்க்கும் பொருந்தும் பொது நெறி என அனைவரும் எடுத்துரைப்பர். ஆனால், முன்னர்க் குறித்தவாறு காமத்துப்பாலை வடவர் நெறி என்பார் உரையாசிரியர்கள்; தமிழர் நெறி என்பார் தமிழறிஞர்கள்.
காமத்துப்பாலும் “உலக மாந்தர்கள் அனைவர்க்கும் பொருந்தும் பொது நெறியே” என்பதை நிலைநாட்டும் வகையில் முனைவர் கு.மோகனராசு அவர்கள் இச்சிறுநூலை முயன்று மெச்சும்படி இயற்றியுள்ளார்.
இதனை நிலைநாட்டும் 13 பதிவுகளை நூல் முழுவதும் –நூ லாசிரியர் ஆங்காங்கே விதைத்துள்ளார். அவற்றுள் 5.
அவை:.
- உலக மாந்தர்க்கு உயர்நெறி வழங்க எண்ணிய திருவள்ளுவர் [பக்.4]
- உலக மாந்தர் அனைவர்க்கும் ஏற்புடைய அகப்பொருள் மரபுகள் எனத் தாம் கண்டவற்றையும் கொண்டவற்றையும் ஒருங்கிணைத்துத் திருவள்ளுவர் கண்ட மூன்றாம் பாலே காமத்துப்பால் [பக்.5].
- திருக்குறள் ஓர் உலகப் பொதுமறை [பக்.5].
4. உலகியல் வழக்கே உயிர்ப்புடைத் தாகி[பக்.10].
5. உயர்காதல் உணர்வே உலகத் துணர்வு [பக்.10].
அறத்துப்பாலையும் பொருட்பாலையும் உலக மாந்தர்கள் அனைவர்க்கும் பொருந்தும் பொது நெறி என உலகம் முழுவதும் கொண்டுசெல்லும் முன்னெடுப்புகள் பலரால், பல அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அதுபோல் காமத்துப்பாலையும் உலகம் முழுவதும் கொண்டு செல்லும் முன்னெடுப்புகள் பலரால், பல அமைப்புகளால் மேற் கொள்ளப்படல் வேண்டும். அப்போதுதான் உலகம் முழுவதும் உயிர்க் காதல், உயர்காதல் உலா வரும். உயரிய இல்லற வாழ்க் கை நல்லற முறையில் வாழ்வு பெறும்.
காமத்துப்பாலை உலகம் முழுவதும் உலா வரச் செய்தலே திருவள்ளுவருக்கும் திருவள்ளுவர் அகப்பொருள் நெறி என் னும் நூலை நெய்த நூலசிரியர் முனைவர் கு.மோகனராசு அவர்களுக்கும் நாம் செலுத்தும் நன்றிக் கடன்.
18.0.0.0. துணைநூற் பட்டியல்:
18.1.0.0. மோகனராசு கு., முனைவர், திருவள்ளுவர் அகப்பொருள் நெறி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, ஏப் பிரல் 2004.
– பேராசிரியர் வெ.அரங்கராசன்
முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர்
கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி
கோவிற்பட்டி — 628 502, கைப்பேசி: 9840947998
மின்னஞ்சல்: arangarasan48@gmail.com
Leave a Reply