திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5
(திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் 4 இன் தொடர்ச்சி)
திருவள்ளுவர்: 5
இனித் தொல்காப்பியம் முதற்சங்கக் காலத்து ஆக்கப்பெற்று இடைச்சங்கத்தாருக்கு இலக்கணமாயிற் றென்பது தமிழரெல்லார்க்கும் ஒப்ப முடிந்ததொன்று. கடைச் சங்கக் காலத்தினும் தொல்காப்பியம் ஆட்சியிலிருந்ததாயினும் அதன் விதிகளுக்கு மாறுபட்ட வழக்குகள் அச்சங்க நூல்களிற் பயிலக் காண்கின்றோம். உதாரணமாக: மொழிக்கு முதலாகாதென்று தொல்காப்பியம் விதந்து விலக்கிய சகரத்தை முதலாகக்கொண்ட தமிழ்மொழிகள் பல கடைச்சங்க இலக்கியங்களிற் பயிலக் காண்கின்றோம். வள்ளுவர் நூலில் வடசொல்லாய்வந்து வழங்கும் சமன், சலம் என்ற இரண்டொன்று தவிரத் தனித்தமிழ்ச் சகர முதன்மொழிகள் காணல் அரிது. இதனால், தொல்காப்பிய விதிகள் சில வழக்கிழந்த கடைச்சங்கக் காலத்துக்கு முன்னரே அவ்விதிகள் பிறழாமற் பேணப்பெற்ற இடைச் சங்கப் பழங்காலத்தையடுத்தே வள்ளுவரின் குறள் எழுந்திருக்கவேண்டுமென்று ஊகிப்பதும் இழுக்காது.
சாணக்கியம் முதலிய ஆரியநீதிநூல்களினின்று அறங்களைத் திரட்டி வள்ளுவர் நூல் செய்திருக்க வேண்டுமென்றும், ஆதலால், சாணக்கியர் முதலியோருக்கு வள்ளுவர் பிற்காலத்தவரா யிருக்க வேண்டுமென்றும் சிலர் கூறுகின்றனர். இதற்குப் பரிமேலழகர் 662-ஆம் குறளின் விசேடக் குறிப்பில் “வியாழ வெள்ளிகளது துணிபுதொகுத்துப் பின் நீதிநூலுடையார் கூறியவாறு கூறுகின்றமையின்” என்று எழுதியுள்ள வாக்கியத்தை ஆதாரமாக்கி, அவ்வாக்கியத்திற் கண்ட ‘பின் நீதிநூலுடையார்’ என்ற சொற்றொடர் சாணக்கியர் முதலாயினாரைச் சுட்டுவதாகக் கொள்கின்றனர். இதுவே பரிமேலழகர் கருத்தாயின் அவர் விசதமாக்கியிருப்பர். அன்றியும், பின் னீதிநூலுடையார் யாரேயாயினும் அவர் தம் வழி நூல்களுக்குக் குறள் சார்புநூலாகும் என்னுங் கருத்தைப் பரிமேலழகர் இவ்வாக்கியத்தாற் குறித்ததாக ஏற்படுமாறில்லை. ஆழச்சிந்தித்தால் வியாழ வெள்ளிகளின் நீதி நூல்களுங்கூடக் குறளுக்கு முதனூலெனப் பரிமேலழகர் இவ்வாக்கியத்திற் சுட்டிலரென்பது தெற்றென விளங்கும். வியாழ வெள்ளிகளின் துணிபுகளைத் தொகுத்த ஆரியநீதி வழி நூலுடையார் முறைக்கும் குறளாசிரியர் அறம்வகுத்த முறைக்கும் எடுத்துக்கொண்ட குறட் பொருள்பற்றியுள்ள ஒப்புமையை இவ்வாக்கியத்தாற் கூறியதன்றி, ஈண்டுப் பரிமேலழகர் காலமுறையால் முதல் வழி சார்புநூல்களாமாறு வகுத்துக்கூற வந்தாரில்லை. இவ்வாறே பிற இடங்களிலும் குறட்கருத்துக் களோடு வடநூலுடையார் கொள்கைகளின் ஒப்பும் மாறுபாடும் பரிமேலழகர் எடுத்துக்காட்டிச் செல்லுதலும் கவனிக்கத்தக்கது.
சங்கத்தார் பாடியதாகக் கொள்ளப்படும் திருவள்ளுவ மாலைச் செய்யுட்கள்பல குறளை ஆரியமறைகளுக்கு ஒப்பதும் மிக்கதுமாமென்று விசதமாகப் பாராட்டுகின்றன். வேதங்களுக்கு மிகப்பிந்திய மனுவாதி வடமொழி நூலொன்றுமே குறளுக்கு முதனூலாகாதென்னுங் குறிப்பும் திருவள்ளுவமாலைச் செய்யுட்களிற் காணலாம். இவ்வாறு மனுவாதி வடமொழி அறநூலுடையாரே வள்ளுவருக்கு முதனூலுடையராகாத போது, அவரைப் பின்பற்றிய மிகப் பிற்பட்ட கேவலம் நீதிநூலுடைய சாணக்கியராதியர் வள்ளுவருக்கு வழிகாட்டிகளாவது எப்படியோ?
மேலும், நீதி அறத்தில் அரசனால் வற்புறுத்தப்படும் ஒரு கூறேயாமாகலின், அறநூல்களினின்று நீதிநூல்களைப் பிரித்துத் தொகுக்க லாவதன்றிக் கேவலம் நீதிநூல்களினின்று அறநூல்க ளியற்றப்படுமாறில்லை. பரிமேலழகரே பலவிடத்தும் நீதிநூலின் வேறாய அறநூல்களுண்மையைச் சுட்டியுள்ளார். திருக்குறள் அறநூலாகவே, அறத்தின் ஒரு பகுதியான நீதிகளை மட்டுங்கூறும் வடமொழி நூல்களின் வழிநூலாக வள்ளுவர் குறளை இயற்றினார் என்பது பொருந்தாக்கூற்றாம்.
இன்னும், ஆரிய தருமசாத்திரமுறை வேறு, தமிழற நூன்மரபு வேறாகும். இருமுறைகளையும் ஒத்துணர்ந்த வள்ளுவர் திருக்குறள், தமிழ் மரபுவழுவாது பொருளின் பகுதிகளான அகப்புறத் துறையறங்களை மக்கள் வாழ்க்கை முறைக்காமாறு ஆராய்ந்து அறுதியிட்டு வடித்தெடுத்து விளக்கும் தமிழ்நூல். தமிழ்மரபும் ஆரியர் சம்பிரதாயமும் அறிந்த பரிமேலழகர் தம் குறளுரையில் ஆங்காங்கே இவ்விருபெருவழக்குக்களின் இயையும் முரணும் எடுத்துக் காட்டிச் சொல்லுமழகு பாராட்டத்தக்கது. இதை விட்டுத் திருக்குறள், சாணக்கியராதி வடமொழி நீதி வழி நூல்களுக்குப்பின் அவறறின் சார்புநூலாக எழுந்ததென்பர் தமது ஆரியமதிப்பும் காதலும் வெளிப்படுத்துவதன்றிச் சரிதவுண்மை துலக்குபவராகார். தமிழிற் பெருமையுடைய அனைத்தும் ஆரிய நூல்களினின்று திரட்டப்பட்டிருப்பதாகக் காட்டி மகிழ்வார் சிலர்க்கன்றி, நடுநிலையாளருக்கு வள்ளுவர் குறள் தமிழில் தனி முதலற நூலேயாகுமென்பது வெள்ளிடைமலையாம்.
(தொடரும்)
Leave a Reply