திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 6
(திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் 5 இன் தொடர்ச்சி)
திருவள்ளுவர்:6
2.வள்ளுவர் குடிப்பிறப்பு
திருவள்ளுவர் ‘ஆதி’ என்னும் புலைமகளுக்கும் ‘பகவன்’ என்னும் பார்ப்பனனுக்கும் பிறந்த எழுவரில் இளையவர் அன்று சில்லோர் சொல்லும் கதையினை நல்லோர் பலரும் நம்புகின்றார். இக்கதையுரைப்போர், ” ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வ’ மாகையால் வள்ளுவர் தம் முதற் குறளில் ‘. . . . . ஆதி பகவன் முதற்றேயுலகு’ எனுந் தொடராற் றம் ‘தந்தை தாய்ப்பேணியுள்ளார்”என்று கூறித் தம்கோள் நிறுவிவிட்டதாக எண்ணி மகிழ்கின்றனர். இக்கதைக்கிவர்விருப்பும், இவர் விருப்புக்கிக் கதையுமே ஆதாரமாவதன்றிப் பிறிது பிரமாணம் காட்டக் காணேம். முதலில் நாயனார் கடவுள் வழிபாட்டு முதற்குறளிற் றம் பெற்றோரை உலகோற்பத்திக்கு முதற் காரணராகச் சுட்டத் துணிவாரா என்பது சிந்திக்கத்தக்கது. இனி இப்பெயருடையார் நாயானாரின் முதற் குரவரென்பதைப் பிறிது சான்று கொண்டு நிறுவியபின்னன்றே இக் குறளிலக்குரவர் பெயரைக் குறிக்க ஆசிரியர் கருதினரா எனு மாராய்ச்சி எழவேண்டும். ஐயமகற்ற ஆராயுங்கால் ஐயப்படுவதனையே ஆதரவாக்கொண்டு ஒரு சித்தாந்தம் செய்வது தருக்க முறையாமா? முதற்குறளிற் கண்ட ஆதி’-‘பகவன் எனுஞ்சொற்கள் குறளாசிரியரின் பெற்றோரைக் குறிக்குமாவென்று விசாரிக்குமுன், அப்பெயருடைய பெற்றோருண்டெனக் கண்டறிய வேண்டியது முதற்கடனன்றோ? குறட் சொற்களையே கொண்டு அப்பெயரிய பெற்றோருண்டெனவும், அப் பெற்றோருண்மையைச் சங்கையற்ற பிரமாணமாகக் கொண்டு குறள் மொழிகளவரையே குறிக்குமெனவும் அநுமானிப்பது பிடிவாதிகளின் அபிமான வாதமாகலாம்; ஆனால் உண்மை காணும் வாதமுறையாகாதென்பது வெளிப்படை.
இனிப் பகவன் என்பது இவர் தந்தையின் பெயரென்பதற்கு யாதொரு நூலாதரவுமில்லாததோடு, அதற்கு மாறாக “யாளி, கூவற் றூண்டு மாதப் புலைச்சி, காதற் காசனி யாகி மேதினி, யின்னிசையெழுவர்ப் பயந்தன ளீண்டே”எனும் ஞானாமிர்த நூலடிகளால் வள்ளுவரின் தந்தை’யாளிதத்தன்’எனும் வேதியன் என்றொரு கதையும் கேட்கின்றோம். இவ்விரு கதைகளில் விலக்குவ தெதனை? வேண்டுவதெது? இன்னும், பகவன் எனும் சொல் தமிழிலும் இருக்கு வேதத்திலும் அவ்வுருவிற் பயில்வதன்றிப் பாணினியாதி வையாகரணிகளின் விதிப்படிக்கும் வேதத்துக்குப் பிந்திய வடமொழி நூல்களிலும் ‘பகவன்’ எனும் பிரயோகம் காணலரிது. ‘பகவான்’ என்பதே சரியான ஆரியச்சொல்லாகும். இதனாற் குறளாசிரியர் பாணினிக்கு முற்பட்டவரெனத் துணிதற் கிடமாவதன்றிக் கடைச்சங்கக் கடைக்கால வேதியனொருவனுக்குப் ‘பகவன்’ எனும் பெயருண்மை அசம்பாவிதமாகும். எனைத்தானும் இக்கதைக்குக் கதைப்பவர் காதலன்றிப் பிறிது பிரமாணமில்லை. பேரூரில்லாத பலர் பிற்காலத்திற் பாடி வைத்த தனிப்பாடல்களையொரு பொருட்படுத்திப் பண்டைச் சரிதங்கள் துணிவது, ஏதவிளைவுக் காதாரமாகுமன்றி, உண்மை தெளிவதற்குதவு மாறில்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பின்னிருந் திறந்த நச்சினார்க்கினியார், பரிமேலழர்களைக் கூட்டிவைத்துப் போட்டி செய்வித்தும், காளிதாசன், போசராசன் பவபூதிகளைச்சேர்த்தவர் தம்முட் சல்லாபச் சண்டை யுண்டுபண்ணியும் வழங்கிவரும் பல கதைகளையும் தனிச் செய்யுட்களையும் கேட்கும் நாம், அனையதொரு பொறுப்பற்ற நாடொடிகளின் கதையை நம்பி அறத்தேவரைப் பறைப்புலையராக்கத் துணிவது எவ்வாறு கூடும்?
இன்னும், இக்கதைக்குப் பண்டைச் சங்கப்பாட்டுக்களிலேனும் பழைய பிற பனுவல்களிலேனும் ஓராதாரமும் பெறாமையோடு, குறட்பழஞ்சுவடிகளெதனிலு மிக்கதையின் சார்பான தனிச்செய்யுட்க ளெழுதப் படாமையையும் கவனிக்க வேண்டும். திருவள்ளுவ மாலை முழுதையும் தொன்று தொட்டு வரன்முறையேவந்த குறட் சுவடிகளிலெழுதி வருவானேன்? வள்ளுவரும் அவருடன் பிறந்த பிள்ளைகளும். தாதைவாகையால் வேதனைப்படும் ஆதியன்னையைத் தெருட்ட அவர் பிறந்தவுடன் சேனைப்பால் தானுமறியாச் சிறுகுதலை வாய் திறந்துபதேசித்த தெய்வக் கவிகளை அச்சுவடி பெயர்த்தெழுதிவந்தோர் புறக்கணித்துக் களைந்து கழிக்கக் காரணந்தானென்னோ? குறளுக் குரைகண்ட பண்டிதர் பதின்மரும் இவ் வரலாற்றுக் கவிகளைச் சுட்டாதொழிவானேன்? பிற்காலத்திற் பக்தி வினயத்துடன் குறணூலை ஆராய்ந்து பதிப்பித்து வெளிப்படுத்திய நல்லூர் ஆறுமுகநாவலர். திருத்தணிகைச் சரவணப் பெருமாளையரனைய அரிய தமிழ்ப் பெரியாரும் திருவள்ளுவமாலைச் செய்யுட்களை மட்டுந் தழுவிப் பிறவற்றை நழுவவிட்டிருப்பதும் சிந்திக்கத்தக்கதன்றோ? நக்கீரரையும் கம்பரையும் தமிழகத்திற் றலைநின்ற அறிஞரனைவரையுமே வேதியர்குருதி பாதி விரவப்பெற்றதாற் பெருமையுற்றரெனப் பல கதைகட்டி, அக்கலப்பற்ற தனித்தமிழருள்ளே தகவுடையரில்லையென் றொன்றைப் பொருளெச்சமாகச் சுட்டித் தம்முட்டாம் மகிழும் சில நவீனவிற்பனரின் கற்பனைத் திறத்தையன்றே ஆதிபால் எழுவரை ‘வேளாவேதியன்’ காதலற்றுக் கடமையிற் றந்த கதை நின்று நிதர்சனமாக்குகின்றது.
[கதைப்பவர் காட்டுங் கவிதைகளிரண்டு]
இனித் “தேவை வள்ளுவ னென்பானோர் பேதை” யெனும் திருவள்ளுவமாலைச் செய்யுளடியையும், “மெய்த்த திருவள்ளுவனார் வென்றுயர்ந்தார், கல்விநலந்-துய்த்த சங்கத் தார்தாழ்ந்தார், சோமேசா” என்ற மாதவச் சிவஞானமுனிவரின் சோமேசர் முதுமொழி வெண்பாவையும் எடுத்துக்காட்டி, இவற்றால், திருக்குறளாசிரியரின் புலைக் குலப் பிறப்பு நாட்டப்படுவதாய்க் காட்டுவாரும் சிலருளர்.
முதலில் திருக்குறளின் சிறப்புப் பாயிரச்செய்யுட்கள் சங்கப்புலவராற் பாடப்பெற்ற செய்தியே சங்கையறத் தெளியப்பட்டதொன்றில்லை. வள்ளுவரால் வெல்லப்பட்ட சங்கப் புலவர் நாற்பத்தொன்பதின்மர் மட்டும் தம் பிழைக்கிரங்கிக் குறளையும் அதனாசிரியரையும் புகழ்ந்து பாடி இருந்தால், ஒருவாறு அது நாம் கேட்கும் கதை வரலாற்றோடு பொருத்தங் கொள்ளும். ஆனால் சங்கப் புலவரொடு அசரீரி, சிவபிரான், கலைமகள், மூங்கையரான உருத்திரசன்மர் முதலியோரும், அச்சேறி வெளிவராத சில குறட்சுவடிகளில் இன்னும் பலரும் பாடினதாய்க் காணப்படும் பல பாக்களையும் திரட்டிக் குறட் சிறப்புப் பாயிரமாக்கி வைத்திருப்பதைச் சிந்திப்போர்க்குத் திருவள்ளுவமாலைச் செய்யுட்களை வள்ளுவராற் பொற்றாமரை யிற்றள்ளப்பட்ட சங்கப்புலவர் தம் பிழை பொறுக்கப் பாடின கதையின் உண்மை சங்கைக்கிடமாகும். அதனுடன் அச்செய்யுட்களை நிதானித்துக் கவனிக்குங்கால், தோற்ற சங்கப்புலவர் மனங் கசிந்து அத்தருணம் தத்தமுளத் துதித்த கருத்தை, அப்படியே வெளியிட்டதான கதைக்கு முரணாக, ஒருவர் அல்லது ஒருசிலரே முன் சாவதான யோசனையுடன் பாடித் தொகுத்த பான்மையினை அப்பாக்களே நிரூபிக்கின்றன. வென்றுயர்ந்த வள்ளுவரைப் புகழ வந்த சங்கப்புலவரின் பாக்கள் திருக்குறளியல்பும் பெருமையும் மட்டும் குறிக்க வேண்டுவதியல்பாகவும், திருவள்ளுவமாலைச் செய்யுட்களை யுற்றுநோக்கு வார்க்கு அவை திருத்தமாகப் பொருத்தங்காட்டுங் குறிப்புடன் எண்ணித் துணிந்து பாடிவைத்த பாட்டுக்களென விளக்கமாகும். மேலும், கதையின் படி பங்கமுற்ற சங்கப் புலவர் குறையிரந்தியற்றின தனிப்பாக்கள் குறளுக்குச் சிறப்புப் பாயிரமாமாறில்லை; சிறப்புப்பாயிரம் செய்தற்குரியர்” தன்னாசிரியர் தன்னோடு கற்றோன், தன் மாணாக்கன் தகுமுரை காரன்” என்றின்னோருள் ஒருவரே யாகலானும், சங்கத்தாரும் இன்னோர் வகையில் யாருமாகாமையானும் என்க. திருவள்ளுவமாலை குறணூலின் சிறப்புப்பாயிரமென வழங்கப்பெறுதலால் அதனைச் சங்கப் புலவர் செய்தனரெனுங் கொள்கை உறுதி பெறுமாறில்லை. இவ்வுண்மை யெதுவாயினு மாகுக. தற்காலம் அதனைச் சங்கையற்றதெனக் கொள்ளினும், அதனால் வள்ளுவர் புலையராமாறு தெளிதற்கில்லை. அவரைப் புலையராக்குவார் அதற்கு எடுத்து உரைக்கும் மேற்கொட்செய்யுள் இது:
“அறம்பொரு ளின்பம்வீ டென்னுமிந் நான்கின்
திறந்தெரிந்து செப்பிய தேவை-மறந்தேயும்
வள்ளுவ னென்பானோர் பேதை; அவன்வாய்ச்சொற்
கொள்ளாரறிவுடையார்” (திருவள்ளுவமாலை-1)
எனும் மாமூலர் பெயர்கொண்ட இந்தச் செய்யுளுக்கு “அமானுசியமான அரிய விழுமிய குறளற நூலையாக்கிய கடவுட்டன்மை வாய்ந்த தேவரை வள்ளுவனெனும் பெயர் கொண்டதொரு கேவலம் மனிதனாகவுட் கொண்டு பேசுவானுளனாயின், அவன் நாயனாரின் தெய்வீகத் தன்மையறியமாட்டாத அறிவீனன்” என்று குறிப்பதே பொருளாகும். திருவள்ளுவமாலைக்கு உரைகண்ட திருத் தணிகைச் சரவணப்பெருமாளையரவர்களும், பிறர் மதமாக “ஒலிக்குறிப்பினாலே சாதியிழிவு தோன்ற வள்ளுவனென்பான் எனினு மமையும்”எனப் பிற்குறிப்பிற் சுட்டினரேனும், தம் முன்னுரையில் “அறமுதலாக. . . . . . வேதப் பொருளாகிய நான்கனது கூறுபாட்டைத் தெரிந்து. . . . . சொல்லிய தேவனை மறந்தாயினும் ஒரு மனிதனாக உட்கொண்டு வள்ளுவனென்று சொல்லுதற்கு ஒருவனுளனாயின், அவன் அறிவில்லாதவனாவன். . . . அச்சொல்லை அறிவுடையார் கொள்ளார்” என இப்பாட்டுக்குப் பொருள் கூறிப் போதலும் சிந்திக்கத் தக்கது. வள்ளுவச்சொல் அவர் காலத்திற் புலைக்குல வகுப்பின் பெயரெனத் தக்க பிறசான்றால் நாட்டினாலன்றி, இக்கவியில் வள்ளுவனென்பதற்கு இழிகுலத்தோனெனப் பொருள்கொள்ளற்-கவசியமே கிடையாது. அத்தகைய சான்று காட்டப்படாத நிலையில் இப்பொருளுரைப்போர் பிற்காலக் கதையை வைத்தே இக்கவிக்கு இப்பொருள் கூற முயல்வதல்லால், இக்கவி அக்கதைக்கு மேற்கோளாக மாறில்லை யென்பது மலையிலக்காம்.
இனி மாதவச் சிவஞானயோகிகளின் சோமேசர் முதுமொழி வெண்பா சற்றேறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன் எழுந்ததாகும்; அதனுள்:-
மெய்த்த திருவள்ளுவனார் வென்றுயர்ந்தார். கல்விநலம்
துபத்த சங்கத்தார் தாழ்ந்தார், சோமேசா – உய்த்தறியின்
மேற்பிறந்தாராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றுரனைத்திலர் பாடு.
என்னும் வெண்பா வள்ளுவரைப் புலைக்குலத்தவராக்கு வாரால் மேற்கோளாக எடுத்துக் காட்டப்படுகிறது.
(தொடரும்)
Leave a Reply