திரைத்துறையினரின் தமிழ்க்கொலைகளைத் தடுத்து நிறுத்துக! : தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 20 : இலக்குவனார் திருவள்ளுவன்
திரைத்துறையினரின் தமிழ்க்கொலைகளைத் தடுத்து நிறுத்துக! : தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 20
மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள துறை திரைத்துறை. திரைத்துறையின் மூலம் நல்லனவும் ஆக்கலாம்; அல்லனவும் புரியலாம். திரைப்படங்களைப் பார்த்துத் திருந்தியவர்களும் உண்டு; தன்னம்பிக்கை பெற்றவர்களும் உண்டு; சீரழிந்தவர்களும் உண்டு.
கலை மக்களுக்காகத்தான். அப்படியானால் திரைக்கலை என்பது மக்கள் வளர்ச்சிகானதாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய திரைக்கலை என்பது மக்களை, மக்களின் மொழியை அழிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டியது மக்களின் கடமையும் அரசின் கடமையுமாகும்.
தமிழ்நாட்டுத் திரைப்பட நிறுவனங்களின் பெயர்கள் பெரும்பாலும் தமிழில் இல்லை. எடுத்துக்காட்டிற்காக முதலிடத்தில் இருக்கக்கூடிய நிறுவனங்களின் பெயர்களைப் பார்ப்போம். அவை வருமாறு:
ஏவிஎம், லைக்கா, ரெட் செயண்டு மூவிசு, சன் பிக்சர்சு, ஆசுகார் பிலிம்சு, வி க்ரியேசன்சு. ஃச்டுடியோ கிரீன், டிரீம் வாரியர், 2d எண்டர்டைன்மெண்ட், தேனாண்டாள் பிலிம்சு, ஏஜிஎசு எண்டர்டைன்மெண்ட், மெட்ராசு டாக்கீசு, ஒண்டர் பார் ஃபிலிம்சு, சக்தி பிலிம் ஃபேக்டரி., முதலிய பலநிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடலாம்.
தத்தம் நிறுவனங்களின் பெயர்களைக் கூடத் தமிழில் சூட்டாதவர்கள் தங்கள் திரைப்படங்களின் பெயர்களுக்கு மட்டும் தமிழ்ப்பெயர் சூட்டுவார்களா என்ன? தங்கள் திரைப்படங்களின் கதைப்பாத்திரங்களுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டுவார்களான என்ன? எல்லாமும் ஆங்கிலமாகவோ பிற மொழிப் பெயர்களாகவோ இருக்கின்றன. தமிழ்த் திரைப்படங்களின் விளம்பரங்கள் ஆங்கிலத்தில்தான் வருகின்றன. தமிழ்த் திரைப்பாடல்களை ஆங்கில எழுத்துகளில் வெளியிடுகின்றனர். தமிழ்த் திரைப்படங்களைத் தமிழர்கள் பார்க்கத்தானே வெளியிடுகின்றனர். அப்புறம் ஏன், எல்லாமே ஆங்கிலமாக உள்ளன. திரைப்படக் கதைப்பாத்திரங்களின் பெயர்கள் தமிழாக இருந்தால் வஞ்சகனாக முடிப்பார்கள். தமிழைப் போக்கும் திரைக்கலைஞர்கள் என்று திருந்துவார்கள்?
கதைப்பாத்திரங்கள் பெயர்களை இந்தி சமற்கிருதப் பெயர்களாக வைப்பவர்கள், திரைப்படத்திற்கும் இந்திப்பெயர் சூட்டும் துணிவிற்கு வந்துவிட்டார்கள். சில நாள் முன் ஒரு திரைப்படம் வந்துள்ளது. அதனை நாட்டியப்பெண் இயக்குநர் ஒருவர் இயக்கியுள்ளார். பெண் இயக்குநர்கள் குறைவுதான். எனினும் அனைவருமே பாராட்டிற்குரியவர்களாகத்தான் உள்ளனர். இப்படத்தின் இயக்குநரையும் திரை இயக்கத்திற்காகப் பாராட்டத்தான் வேண்டும். பொதுவாக நாட்டிய இயக்குநர்கள் நடன இசைவு என்ற பெயரில் இழிகாம அசைவுகளைப் பயிற்றுவித்து அவர்கள் மூலம் அவற்றைப் பார்க்கும் சிறுவர் சிறுமியர் உள்ளங்களையும் பாழ்படுத்துகிறார்கள். அவர்களுக்குக் கடுமையான சிறைத்தண்டனை விதித்தால் கலையுலகம் உருப்படும்; மக்களும் தீய பாதையில் செல்ல மாட்டார்கள் என்பர் மன்பதை நல ஆய்வாளர்கள்.
அத்தகைய துறையில் பணியாற்றும் இந்நாட்டிய இயக்குநர் இந்திப் பெயரைப் படத்திற்குச் சூட்டியதன் மூலம் தமிழ்க்கொலை புரிந்துள்ளார். அப்படத்தின் பெயர் ‘குமரிமாவட்டத்தின் தக்சு’ (thugs of kumari maavattam)என்பது. இப்படத்தின் மூலப்படம் மலையாளப்படம் என இயக்குநர் சொல்லாவிட்டாலும் அந்த உண்மையைத் திரைத்துறையைச் சார்ந்தவர்களே வெளிப்படுத்தி வருகிறார்கள்.
‘சுவாதன்த்ரிம் அர்த்த ராத்திரியில்’ என்பதே இம்மலையாளப் படம். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் இப்போது எடுக்கப்பட்டு வெளிிடப்பட்டுள்ளது.
‘thugs’ என்னும் சொல்லின் பொருள் ‘கொலை, கொள்ளைக் கூட்டாளி’ என்பதாகும். சட்டத்திற்கு எதிரான செயல்களைச் செய்யும் மோசடிப் பேர்வழிகளையும் கொள்ளை யடிப்பவனையும் கொலை புரிபவனையும் இவ்வாறு குறிப்பிடுவார்கள். இந்திச்சொல்லான இதுதான் ஆங்கிலத்தில் குறிக்கப்படுகிறது. மூலத்திரைப்படத்தின் பெயர் அவ்வாறு இல்லாதபோது தமிழில் அவ்வாறு சூட்டுவானேன்? தெலுங்கில் ‘கொனசீமாவின் thugs’ எனப்பெயர். கொனசீமா என்பது ஆந்திராவில் கோதாவரி ஆற்றின் கிளையாறுகளுக்கிடையே உள்ள தீவுக்கூட்டமாகும். இவ்வாறு இரு மொழிகளில்தான் இந்திச் சொல்லைப் பயன்படுத்திப் படப்பெயர்களைக் குறித்துள்ளனர். கன்னடத்தில் கதைப்பாத்திரத்தின் பெயரில் ‘சூலியட்டு 2’ எனச் சுட்டியுள்ளனர்.
மலையாளப்படம் வந்த 2018இலேயே இந்தியில் இந்தோசுதானின் தக்சு(Thugs of Hindostan) எனப்படம் வந்துள்ளது. இந்துத்தான் என்பதைத்தான் இந்தோத்தான் என்கின்றனர். இப்பொழுது தக்சு என்ற பெயரில் மற்றொரு இந்திப்படம் வந்துள்ளது.
மக்களறியாத இந்திச் சொல்லைத் திணிக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் பெயர்களைச் சூட்டியுள்ளார்கள் என்று நன்கு தெரிகிறது. அவ்வப்பொழுது நம் கவனத்திற்கு வரும் ஆங்கிலப்பெயர் குறித்து எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம். “இதை மட்டும் ஏன் எதிர்க்கிறீர்கள்? அதை எதிர்க்கவில்லையா?” என்பதுபோல் சிலர் கேட்பர். உண்மையில் நாம் ஓரிரண்டைக் குறிப்பிட்டாலும் எல்லாப் பிறமொழிச்சொல் அல்லது சொற்களில் சூட்டியுள்ள எல்லாத் திரைப்படத்தையும்தான் எதிர்க்கிறோம். அவ்வப்பொழுது இவ்வாறு எழுதினால் பயனில்லை. சிலர் நம் வேண்டுகோளை ஏற்றுத் திருத்திக் கொண்டார்கள். புதியதாக வரும் உதவி, துணை, இணை இயக்குநர்கள், இயக்குநர்கள் பலர் தமிழ் உணர்வாளராக உள்ளனர். தமிழ்ப்பெயர்களையே படங்களுக்குச் சூட்டுகின்றனர். அவர்களுக்குப் பாராட்டுகள். ஆனால், இவை போதா!
எனவே, பொதுவாகவே எங்கும் தமிழ் இருக்கவும் அதன் மூலம் மொழி, இனப்படுகொலையைத் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்கொலைத் தடுப்புச் சட்டம் ஒன்றை இயற்றி, நம் செந்தமிழைக் காக்க வேண்டும். அரசு தரும் உதவிகள், நல்கைகள், விருதுகள், பரிசுள் முதலியன பட நிறுவனம், படம், படப்பாத்திரங்கள், பட விளம்பரங்கள், பட அறிவிப்புகள், படப்பாடல்கள், பட உரையாடல்கள், யாவும் தமிழாக இருப்பனவற்றிற்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். படப்பணி விவரங்களில் பெயர்கள் கிரந்த எழுத்துகளின்றியும் தமிழ் முதல் எழுத்துகளுடனும் இருந்தால் மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்.
சங்க இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் தெற்கே குமரி முதல் வடக்கே இமயமலை வரை பரவியிருந்த தமிழ் நிலம் இன்றைக்குச் சுருங்கிப்போனதன் காரணம் என்ன?
“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்”
பழந்தமிழ்நாட்டின் எல்லையாக இருந்ததைப் புலவர் காரிகிழார் குறிப்பிட்டுள்ளார்(புறநானூறு, 6). இந்நெடிய பரப்பை நாம் போர்க்களத்தில் இழக்கவில்லை. மொழிக்கலப்பால் இழந்துள்ளோம். தமிழ்மொழியிலிருந்து பல மொழிகள் பிறந்துள்ளன என்று பெருமை பேசிப் பயனில்லை. தமிழ் மொழி தமிழர்களின் மொழிக்கலப்பால் தன் ஆட்சிப்பரப்பை இழந்த அவலத்திற்கு உள்ளானது என்பதை உணர வேண்டும். குறுகிறய நிலப்பகுதியாக மாறிய தமிழ்ப்பரப்பை மேலும் நாம் குறுக்க வேண்டுமா என எண்ணிப் பார்க்க வேண்டும். மொழிக்கொலைகளுக்கு முற்றப்புள்ளி வைக்க வேண்டும். மொழிக்கொலைகளை விரைவுபடுத்தும் ஊடகத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும். மொழிக்கொலைகளின் முன்னோடியான திரைக்கலைத் துறையை நற்றமிழ் நாடும் நற்றுறையாக மாற்ற வேண்டும்.
மக்கள் தமிழைச்சிதைக்கும் படங்களைப் புறக்கணிக்க வேண்டும். கலைஞர்கள் அத்தகைய படங்களில் பணியாற்றுவதில் இருந்து விலக வேண்டும். பட நிறுவனங்கள் அத்தகைய படங்களை உருவாக்கக் கூடாது. அப்படி எதுவும் வந்தால் பட வெளியீட்டாளர்கள் அவற்றை வாங்கக்கூடாது. திரையரங்கினர் அவற்றைக் காட்டக்கூடாது என்று உறுதிப்பாடு வேண்டும். இயக்குநர்கள், கதையாசிரியர்கள், உரையாடலாசிரியர்கள், திரைத்துறையில் செல்வாக்கைச் செலுத்தும் நாயக நாயகிகள், தமிழ் உணர்வுடன் செயல்பட வேண்டும். இதற்கெல்லாம் வழிகாட்டியாக அரசு விளங்க வேண்டும். தமிழ்நாட்டு அரசாங்கம் தமிழ் காக்கும் பணிகளில் ஈடுபட்டால் இவை தாமாகவே நடந்து விடும்.
முதல்வர் மு.க.தாலின் இதில் கருத்து செலுத்தினால் அவர் புகழ் தமிழுலகம் உள்ள வரையும் நிலைக்கும். செய்வாரா?– இலக்குவனார் திருவள்ளுவன்
சரியாகச் சொன்னீர்கள் ஐயா! முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் இப்படிப் படங்களின் தலைப்புகள் தமிழில் வைப்பதை ஊக்குவிக்கத் “தமிழில் தலைப்பு வைக்கும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு” என்று அறிவித்தார். ஆனால் “தலைப்பை மட்டும் தமிழில் வைத்து விட்டுப் படத்தின் கதை எப்படி இருந்தாலும் பருவாயில்லையா?” எனச் சச்சரவு எழுந்தது. அதனால் அடுத்து வந்த செயலலிதா அவர்கள் ஆட்சியில் தலைப்பு மட்டுமில்லாமல் படத்தின் கதையும் தமிழ்ப் பண்பாட்டுக்கு முரணில்லாமல் இருக்க வேண்டும் என்று அந்த நெறி இறுக்கப்பட்டதோடு அதிக வன்முறை, இழிகாமக் காட்சிகள் கொண்ட படங்களுக்கு வரிவிலக்குக் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் திரைப்படங்களில் வன்முறையும் இழிகாமமும் குறையும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் நடப்பது வேறு! தங்கள் கதையில் வன்முறையும் இழிகாமமும் அதிகமாக இருந்தால் எப்படியும் வரிவிலக்குக் கிடைக்காது என்பதை அறிந்து கொண்ட திரைப்பட இயக்குநர்கள் அப்படிப்பட்ட படங்களுக்குத் தலைப்பை மட்டும் தமிழில் வைப்பானேன் என்று மீண்டும் அயல்மொழித் தலைப்புகளைச் சூட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
ஆக இதன் மூலம் அரசு உணர வேண்டியது யாதெனில், நம் மக்களைச் சலுகை கொடுத்தெல்லாம் திருத்த முடியாது தண்டனை கொடுத்துத்தான் திருத்த முடியும் என்பதுதான். எனவே அரசு இனியும் வரிவிலக்கெல்லாம் தராமல் “தமிழில் தலைப்பு இல்லாத, தமிழ்ப் பண்பாட்டுக்குப் புறம்பான படங்களுக்குத் திரையரங்க வெளியீட்டு ஒப்புதல் கிடையாது” என்று அறிவிக்க வேண்டும்.
ஆனால் இப்படிச் செய்தாலும் இணையத் தொலைக்காட்சி (OTT) மூலம் படங்களை வெளியிடுவார்கள். எனவே கலை, பண்பாடு, மொழி ஆகியவை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிற நாடு என்பதால் பொழுதுபோக்கு மற்றும் ஊடகத்துறையின் முழுக் கட்டுப்பாடு மாநில அரசுகளின் கையிலேயே ஒப்படைக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும்!