திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர் பாலா
கவிஞர் பாலா என அழைக்கப்பெறும்
பேராசிரியர் இரா.பாலச்சந்திரன்
பிறந்த நாள் : மார்கழி 30, 1977 / சனவரி 13, 1946
நினைவு நாள் : புரட்டாசி 06, 2040 / செப்.22, 2009
பெற்றோர்: மா.இராமதாசு – ஞானாம்பாள்
மனைவி: மஞ்சுளா
மகள்: பிரியா
மகன்: கார்த்திக்கு
பிறப்பிடம் – கல்வி
கவிஞர் பாலா மார்கழி 30, 1977 / 1946 ஆம் ஆண்டு சனவரி 13 ஆம் நாள் சிவகங்கையில் பிறந்தார்; சிவகங்கை அரசர் உயர் நிலைப்பள்ளியில் படித்தார்; பள்ளிப்பருவத்தில் சிவகங்கை நூலகத்திற்குச் சென்று நூல்களைப் படிப்பார; நாளும் ஒரு நூல் படிப்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார்; படிக்கும் பழக்கத்தோடு இலக்கியக் கூட்டங்களுக்கும் செல்வார்; காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்; திருப்பதி வெங்கடேசுவரா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.
பணியும்-வானம்பாடியும்
இவர் சேலம் இராசிபுரம் அரசுக்கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார். அப்போது கோவையிலிருந்து வெளிவந்த வானம்பாடிகளின் ‘நீ’ தொகுப்பு அறிமுகமானது. புதுக்கவிதைகளை எழிலாக உரைப்பதிலும் வாசிப்பதிலும் சுவைக்க வைப்பதிலும் ‘வானம்பாடிகள்’ புதிய சிகரங்களைத் தொட்டனர்.
புதிய சிந்தனைகள்உடன் புதுக்கவிதை இயக்கத்தைத் தமிழில் வானம்பாடிகள் தொடங்கிவைத்தனர். வானம்பாடிகளின் கவிதைகள் நேரடியாகப் பேசின. உண்மைகளைத் தெளிவாக உரைத்தனர். வானம்பாடி இயக்க மையமாக, புவியரசு, அக்னிபுத்திரன், சிற்பி, மேத்தா, கங்கை கொண்டான் ஆகியோர் இருந்தனர்.
‘சுவடு’ இதழ் தொடக்கம்
கவிஞர் பாலா வானம்பாடிகளிலிருந்து பிரிந்தார். நவீன தமிழ்க்கவிதைப் படைப்பிற்காகவும் இலக்கியத் திறனாய்விற்காகவுமே ‘சுவடு’ இதழைத் தொடங்கினார். இலக்கியத் திறனாய்வுகளே இலக்கியச் சிற்றிதழ்களின் பெரும் பக்கங்களை அடைத்துக் கொண்டன. இதில் இடம் பெற்ற திறனாய்வாளர்களைப்பற்றியே தமிழ் இலக்கியத் திறனாய்வாளர்கள் என்றொரு நூலைச் சுவடு இதழ்க் கட்டுரைகளிலிருந்து தொகுக்கும் அளவிற்குச் ‘சுவடு’ பேசப்பட்டது. நல்ல நேர்மையான தகவல்கள் நிறைந்த சிறந்த திறனாய்வுகளைச் ‘சுவடு’ வழங்கிவந்தது.
சாகித்ய அகாதெமிக் கருத்தரங்கம்
சாகித்ய அகாதெமியில் தமிழ் அறிவுரைக் குழு ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். பாலா தமிழ்மொழிக் குழு ஒருங்கிணைப்பாளராக 2002ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டுவரை பணியாற்றினார். அதில் பணியாற்றிய போதுதான் சாகித்திய அகாதெமி எளியவர்களுக்கும் அறிமுகமானது.
கவிஞர் மீராவின் அஞ்சலிக் கூட்டம் நடந்தது. அந்தச் சமயத்தில் அதுவரை ஐந்து நட்சத்திர விடுதிகளிலேயே நடந்துவந்த அகாதெமிக் கருத்தரங்கம் முதன் முதலாகச் சிவகங்கையில் உள்ள இவரது வீட்டு வாசலில் தெருவில் மேடையமைத்து மக்கள் மத்தியில் நடந்தது. அதில் கலந்து கொண்ட அனைவரும் மிகவும் நெகிழ்ந்து பாராட்டினர்.
கவிஞர்கள் அறிமுகம்
இவர் எழுதிய ‘கவிதைப் பக்கம்’ வார இதழ்த் தொடரிலும், ‘புதுக்கவிதை ஒரு புதுப் பார்வை’ திறனாய்வு நூலிலும், இவர் அறிமுகப்படுத்திய சிறந்த புதுக்கவிதைகள் ஏராளம். இவர் முன்னுரை கொடுத்தும் முன்னிலைப்படுத்தி மேடையேற்றியும் அறிமுகப்படுத்திய கவிஞர்கள் ஏராளம்.
முகவுரையும்-தொகுப்பும்
மு.மேத்தாவின் ‘கண்ணீர்ப் பூக்கள்’ தொகுப்புக்கும் முன்னுரை தந்தவர் கவிஞர் பாலா. மு.மேத்தாவின் ‘கண்ணீர்ப் பூக்கள்’ 25ஆம் பதிப்பு கண்டு அருந்திறல் படைத்த நூல். சிற்பியின் 70-ஆவது அகவையில் ‘சிற்பி-கவிதைப் பயணங்கள்’ எனத் தெரிவுசெய்த கவிதைகளைத் தொகுத்துத் தந்தார்; கவிஞர் மு.மேத்தாவின் கவிதைகளைத் தெரிவுசெய்து தொகுத்தளித்தார்.
கட்டுரையும்-நூல்களும்
பாரதியிடம் மிகவும் பற்றுக்கொண்டவர் பாலா. இவர் தந்த ஒப்பிலக்கிய நூல் ‘பாரதியும் கீட்சும்’, ‘சர்ரியலிசம்’ போனறவை சிறந்த தமிழ்த் திறனாய்வுக் கட்டுரைகள். ஆங்கிலம் தமிழ்மொழிகளில் ஏறத்தாழ 20 நூல்களை எழுதி உள்ளார். ஏராளமானவர்களை எழுதவைத்தவர்.
மொழிபெயர்ப்பு
இராசம் கிருட்டிணன் புதினங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். சர்ரியலிசம், புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை, பாரதியும்-கீட்சும், கவிதைப் பக்கம், தமிழ் இலக்கிய விமர்சகர்கள், முன்னுரையும் பின்னுரையும், திண்ணையும் வரவேற்பறைகளும், இன்னொரு மனிதர்கள், நினைவில் தப்பிய முகம், முதலான கவிதை – திறனாய்வு நூல்களுடன், மீரா, மேத்தா, சிற்பி ஆகியோரின் தமிழ்க்கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
ஆசிரியராகப் பணிபுரிந்த இடங்கள்
இவர் இராசிபுரம், தஞ்சாவூர், மன்னார்குடி, புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் உள்ள அரசுக் கல்லூரிகளில் ஆங்கில இணைப் பேராசிரியராகப் பணியாற்றி, நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆங்கிலத்துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றார். கொல்கத்தா சாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் ஒப்பாய்வுத்துறையில், வருகைதரு பேராசிரியராக இருந்தார்.
மறைவு
கவிஞர் பாலா புரட்டாசி 06, 2040 / செப்.22, 2009 அன்று தமது 63ஆம் அகவையில் மறைந்தார்.
தொகுப்பு: முருகு வள்ளி
அன்பார்ந்த திருமிகு திருவள்ளுவன்,
நண்பர் பாலா அவர்களுக்கான நினைவேந்தல் பதிவுக்கு நன்றி. என் இனிய தோழராக,
கவிதை மற்றும் திறனாய்வுக் களங்களில் பல புதுமைகளை முன்னிறுத்தியவராக பாலா
வாழ்ந்தார். நாங்கள் இருவரும், பேரா க.செல்லப்பன் அவர்களிடம் முனைவர் பட்ட
ஆய்வு மாணவர்களாக இருந்த போது, பாலாவுடன் ஏற்பட்ட அணுக்கமும், நாங்கள்
பரிமாறிக் கொண்ட கருத்துகளும் இன்றும் நினைவில் கொண்டு மகிழத்தக்கவை.
இலக்கியம் சார்ந்த நோக்குகளில், எங்களிடையே வேறுபாடான பார்வை இருந்தாலும்,
எந்தக் கருத்தினையும் வரவேற்று உற்சாகப்படுத்துவார்.
நல்ல நண்பர், பண்பாளர்.
நினைவில் என்றும் உறைபவர்.
பதிவைத் தொகுத்து அளித்த அம்மையார் முருகு வள்ளி அவர்களுக்கும் நன்றி.
அன்புடன்
பெ.சந்திர போசு
சென்னை.