94vaigaianeesu-name

  பள்ளிப்பருவத்தில் தொடங்கிக் கல்லூரிப்பருவம் வரை என் ஆழ்மனத்தில் தீண்டத்தகாத சொல்லாக இருந்த சொல் ‘துலுக்கப்பயல்’ என்பது. இப்பொழுது நான் பத்திரிக்கைத்துறையில் பணிபுரிந்தாலும் பணித்தோழர்களும் உற்ற நண்பர்களும் நான் இல்லாத இடத்தில் “அந்தத் துலுக்கனை இன்னும் காணோம்” என்று அடையாளப்படுத்தி வருவதை இன்றளவும் கண்டுவருகிறேன். சிறு பருவத்திலேயே இதற்கு விடைகாணும் பொருட்டாக என்னுடைய பாட்டனாரிடம் “முசுலிம்களை ஏன் துலுக்கன் என அழைக்கிறார்கள்” என அடிக்கடிக் கேள்வி கேட்பேன். அவர், விடுதலைப் போராட்ட ஈகையாளி(தியாகி) என்ற முறையில் ஊர், ஊராகச் சென்றவர் என்பதால் துலுக்கக் கவுண்டர், துலுக்க நாச்சியார், துலுக்கானத்தம்மன் என்ற பெயரில் உள்ள கோயில்களைப்பற்றிக் கூறிய ஞாபகம் உண்டு. பசுமரத்தாணிபோலப் பசுமைநினைவுகளோடு துலுக்கன் என்ற சொல்லுக்கு விடைகாணும் பொருட்டுத் தேடலில் ஈடுபட்டேன்.  “ஆட்டுக்கும் மாட்டுக்கும் பின்புறம் வாலு.. அக்கிரமம் பிடித்த துலுக்கனுக்குத் தலையில வாலு” எனத் துருக்கித் தொப்பி அணிந்தவர்களை அழைக்கும் சொலவடை எங்களுடைய ஊரில் உண்டு. இதற்காகப் பல இடங்களில் களஆய்வு மேற்கொண்டு இக்கட்டுரை தொகுத்துள்ளேன்.

  ஆரியர்களின் வேதமாகிய யசூர் வேதம் பின்வருமாறு கூறுகிறது, “ஈசுவரனுடைய முகத்திலிருந்து பிராமணர்களும், புயங்களிலிருந்து சத்திரியர்களும், தொடைகளிலிருந்து வைசியர்களும், பாதங்களிலிருந்து சூத்திரர்களும் முறையே உண்டாயினர்”( யசுர் 30:11) ஆரிய வேதம் மனிதனை பிறப்பின் அடிப்படையில் நான்கு சாதிகளாகப் பகுத்துக் காட்டுகிறது. ஆரியச் செல்வாக்கால், உயர்ந்த சாதிக்காரன், தாழ்ந்த சாதிக்காரன் என்ற பாகுபாடு நிலவியது. இந்தப்பாகுபாட்டிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகச் சமணம் கிறித்தவம் முதலான பல சமயங்களுக்கு மாறினார்கள். அவ்வாறு மாறப்பட்ட சமயங்களில் ஒன்று இசுலாம்.

  உலக அளவிலுள்ள முசுலிம்கள் அல்லாவுடைய வேதத்தைப் பின்பற்றுவது என்றும் அல்லாவின் தூதரான முகமது நபியைப் பின்பற்றுவது என்றும் வாழ்ந்து வருகிறார்கள். இருப்பினும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு தலைவரைத் தேர்ந்தெடுத்து அதற்கு மத்ஃகப் என்ற பிரிவை ஏற்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு பிரிவிற்குமான வழிகாட்டித்  தொகுப்பு வருமாறு:

ஃகனபி மத்ஃகபு: இச்சட்ட தொகுப்பு கி.பி.702 ஆம் ஆண்டில் ஈராக்கில் பிறந்த இமாம் அபூ அனிபா என்ற மார்க்க அறிஞரால் தொகுக்கப்பட்டது. இந்த மத் ஃகபைப் பின்பற்றி இந்தியா, பங்காளதேசம், இரசியா, ஆப்கானித்தான், பாகித்தான், துருக்கி, ஈராக்கு போன்ற நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது.

மாலிக்கி மதஃகபு: இச்சட்டத் தொகுப்பு மாலிக் இப்னு அனசு என்ற மார்க்க அறிஞரால் தொகுக்கப்பட்டது. எகிப்து, சோர்டான் மற்றும் அனைத்து ஆப்பிரிக்க நாடுகளில் பின்பற்றப்படுகிறது.

ஃகாபி மத்ஃகபு: இச்சட்டத் தொகுப்பு முகமது இப்னு இத்ரீசு அஃசாபி என்ற மார்க்க அறிஞரால் தொகுக்கப்பட்டது. இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சோமாலியா, சோர்டான், இலெபனான், சிரியா, பாலத்தீனம், ஏமன் போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகிறது.

ஃகம்பலி மதஃகபு: இச்சட்டத் தொகுப்பு அகமது இப்னு ஃகம்பல் என்ற மார்க்க அறிஞரால் தொகுக்கப்பட்டது. அரேபிய தீபக்கற்பத்தில் உள்ள நாடுகளில் பின்பற்றப்படுகிறது.

(தொடரும்)

வைகை அனிசு
3.பள்ளிவாசல் தெரு
தேவதானப்பட்டி-626 601.
தேனி மாவட்டம்
பேசி: 9715795795