01 9

நூற்றாண்டு விழா நாயகர் தமிழறிஞர் 

முனைவர் பேரா. சி. இலக்குவனார் 

 

‘’தமிழில்லா வீட்டுக்கு நான் போக மாட்டேன்’’ என்பார் அறிவியக்கக் கவிஞர் சாலை இளந் திரையன்.
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே-அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
என்று பாரதி பாடினான்.
தமிழைத் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தினான். இப்படிப் பல்வகைச் செல்வமும் எழில் நலமும் படைத்த  செம்மொழியான தமிழ், எண்ணற்ற இன்சுவை இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டு தனிச்சிறப்புடைய சிறப்பும் பெற்று. உலகிலேயே முதல் கழகம் கண்ட பெருமையைக் கொண்டிலங்குகிறது.

இத்தகைய தமிழை வளர்க்க, உய்விக்க தனது வாழ்நாளை முழுதும் செலவிட்ட மொழிப்போர் மறவர் முனைவர் சி. இலக்குவனார் ஆவார்கள்.

தமிழர் மலர்ச்சியே தமிழின் மலர்ச்சி. தமிழின் மலர்ச்சியே தமிழரின் மலர்ச்சி. மொழியும் வாழ்வும் ஒரு காசின் இரு புறங்கள் போன்றவை. ஆதலின் இன்பத் தமிழை வளர்ப்போம். இனிய வாழ்வினைப் பெறுவோம்!” என்று தமிழ் எழுச்சியின் மூலவராக விளங்கிய பேராசிரியர் சி. இலக்குவனார் இயம்பிச் சென்றுள்ளதை நினைவில் வைப்போம்.

நற்றமிழ் பரப்பி. தண்டமிழ் வாரியில் மொண்டுமொண்டு திசையெலாம் பொழிந்த தீந்தமிழ்க் கொண்டல் நூற்றாண்டு இது!
சலுகை போனால் போகட்டும் என்
அலுவல் போனால் போகட்டும்
தலைமுறை ஒரு கோடி கொண்ட-என்
தமிழ் விடுதலை ஆகட்டும்!
என்ற புரட்சிக் கவிஞரின் பாட்டியக்கத்திற்கு எடுத்துக் காட்டாக இருந்தார் சி. இலக்குவனார்; ஏளனமாகப் பேசப்பட்டு வந்த தமிழை உயர்ந்தியவர்; மொழிப்போர் மறவர் எனப் போற்றப் பெறுபவர் இவர்.

தம் பெற்றோரால் வைக்கப் பெற்ற இலட்சுமணன் என்ற பெயருக்குரியவர்  ‘தமிழர் தலைவர் தந்தை பெரியார்’ என்ற நூலின் ஆசிரியர் சாமி. சிதம்பரனாரின் அறிவுரையின் படி ‘இலக்குவன்| ஆனவர். தமிழர்க்குப் பெயர் தமிழில்தான் இருக்க வேண்டும் என்று வழி காட்டிய முதல் தமிழறிஞர். இன்றைய தமிழர் நாட்டின் முதல்வராக இருக்கும் முதல்வர் மு. கருணாநிதி. இவரிடம் தமிழ் பயின்றார்.

இவரது புதல்வர்களான பொறியாளர் திருவேலன், முனைவர் மறைமலை, ஆட்சித் தமிழறிஞர் திருவள்ளுவன்  போன்றோர் தந்தையின் தமிழ்த்தொண்டு, பேச்சு. படைப்பு மூன்றையும் போற்றிப் பேணிப் பரப்புரை செய்து வருகின்றனர். 22 தமிழ் நூல்களும், 10 ஆங்கில நூல்களும் இவர் எழுதி வெளிவந்துள்ளன. ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’ எனும் தமிழ் நூலும் ‘Tholkappiyam  in English’ என்ற ஆங்கில நூலும் சிறப்பான நூல்களாகக் கருதப்படுகின்றன.

தமது இறுதிக்காலம் வரை ‘சங்க இலக்கியம்’, ‘இலக்கியம்’, ‘திராவிடக் கூட்டரசு’, ‘குறள்நெறி’, Dravidian Federation போன்ற இதழ்களை ஆசிரியராக, வெளியீட்டாளராக இருந்து நடத்திய இதழாளர் என்ற பெருமையும் இவருக்குண்டு. ஒரு தமிழ்ப் பேராசிரியர் தனது கையிருப்பைக் கரைத்துச் இதழ்களை நடத்தி யிருக்கிறார் என்று அறியும்போது வியக்க வைக்கிறது.

முத்தமிழ் வளர்த்தவர்களுக்கு முதலிடம் தந்து, போற்றிப் பாராட்டி மகிழும் ‘கண்ணியம்’ உரிய நேரத்தில் மலரஞ்சலி செலுத்தித் தனது மொழிக்காப்பு உணர்வை நிலை நிறுத்தியுள்ளது.

மொழியை வளர்ப்பதிலும் இனமான உணர்வை உயர்த்துவதிலும்.

ஓயாது உழைத்த மொழிப் போர் மறவர் பேராசிரியர் சி. இலக்குவனார் புகழ்  போற்று வோம்!
தமிழர்களாகிய நாம் தமிழ் வளர்த்துச் சாகாப் புகழ்பெறுவோம்!

    – நவீன்குமார்

  • கண்ணியம்