(அகரமுதல 97, புரட்டாசி 3, 2046 / செப். 20, 2015 தொடர்ச்சி)

94vaigaianeesu-name

5

இராவுத்தர் கோயில்

  தஞ்சாவூர் அருகே உள்ள திருவோணம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது பாதிரங்கோட்டை என்ற ஊர். அங்கு இராவுத்தர் கோயில் உள்ளது. அக்கோயிலின் நுழைவு வாயிலில் எட்டடி உயரமுள்ள பிரமாண்டமான குதிரைச் சிலையும், அதன் அருகில் ஐயனார் சிலையும் உள்ளன. கையில் பெரிய வீச்சரிவாள், பெரிய மீசை பயமுறுத்தும் கண்களுடன் ஐயனார் காட்சியளிக்கிறார்.

  ஐயனார் சிலையின் தலையில் முசுலிம்கள் அணியும் குல்லா உள்ளது. இவரைப் பெரிய இராவுத்தர் என்று அழைக்கின்றனர் இப்பகுதி மக்கள். அடுத்த மண்டபத்தில் கொஞ்சம் சிறிய அளவில் வரிசையாக ஐந்து சிலைகள் உள்ளன. அவர்களைச் சின்ன இராவுத்தர்கள் என்று அழைக்கிறார்கள்.

  அடுத்த மண்டபத்தில் ஒரே இருக்கையில் அருகருகே இரு பெண் சிலைகள். ஒரு சிலை முசுலிம் பெண் சிலை. அவர் பெயர் பாப்பாத்தியம்மாள். அடுத்து ஐயனாரின் மனைவி பூர்ணவதியம்மாள்.

  ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் நிறைநிலா நாளன்று ஏராளமான மக்கள் கூடுகின்றனர்.  முசுலிம் ஆண், பெண்கள் நிறைநிலாத் திருவிழாவிற்கு வருகை புரிகின்றனர். அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், கோட்டைப்பட்டினம், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் இருந்து முசுலிம்கள் மல்லிகைப்பூ, சீனி, சுருட்டு, மூக்குப்பொடி, பொட்டலம் இவற்றை இராவுத்தர் சிலை முன்பாக வைத்துவிட்டுத் தொழுகை நடத்துகின்றனர். அக்கோவிலின் பரம்பரை பூசாரி பழனிச்சாமி என்பவர் ஊதுபத்தி கொளுத்தித் தீபாராதனை காண்பித்தபடி இவ்வாறு பாடுகிறார்:-

காந்தமலை அருகே

கடுகுமலை தொழுகையில்

பள்ளி பதினெட்டில்

படுகமலை தொழுகையில்

இருந்தாலும் தாங்கள் தருக்காவிற்கு

வந்தருள்வீர் உச்சியிலிருந்து

உள்ளங்கால் வரை

முன்னாலும் பின்னாலும்

பாதம் முதல் கேசம் வரை

பட்டாணியே உங்கள் காவல்

என்று பாடுகிறார்.

  பாடியவுடன் சருக்கரை திருவுணாவாக் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு சித்திரை முழுநிலா அன்றும் இந்துக்களும், முசுலிம்களும் ஒன்றுகூடி ஒற்றுமையாக வழிபாடு நடத்துகின்றனர். இராவுத்தர் கோயிலில் ஐயனாரும், பெரிய இராவுத்தரும் சிறிய இராவுத்தரும் அருகருகே உள்ளனர். இராவுத்தரின் தாயார் பாப்பாத்தியம்மாளும், ஐயனாரின் மனைவி பூர்ணவதி அம்மையாரும் ஒற்றுமையாக உள்ளனர். (ஆதாரம் தீக்கதிர் 13.11.2014. தஞ்சை பக்கிரிசாமி)

(தொடரும்)

-வைகை அனிசு