சங்கத்தமிழ் நகரம் முசிறியே

கேரளாவில் உள்ள ‘பட்டணம்’

“சங்க இலக்கியங்களில் புகழப்படும் துறைமுக நகரம் முசிறி. அதுதான், தற்போது, கேரளாவில் உள்ள பட்டணம்,” என்கிறார், அங்கு அகழாய்வு செய்தவர், கேரளாவின், ‘பாமா’ தொல்லியல் கல்வி நிறுவன இயக்குநர், முனைவர் பி.செ.செரியன். அவர், ‘தினமலர்’ நாளிதழுக்கு அளித்த பேட்டி:

உங்களைப்பற்றியும், உங்கள் அகழாய்வுபற்றியும் கூறுங்கள்?

நான், கேரளாவில் உள்ள, ‘பாமா’ என்ற, தொல்லியல் சார்ந்த நிறுவனத்தின் இயக்குநராக உள்ளேன். 2006இல், மத்தியத் தொல்லியல் துறையிடம், அகழாய்வு செய்வதற்கான இசைவு பெற்றேன். ஏற்கெனவே, 2004இல், நான் செய்த கள ஆய்வில், கொடுங்கலுார், பரனுார், பட்டணம் முதலான அமைதியான ஊர்களில், சங்கக் காலச் சான்றுகள் கிடைத்தன. அதனால்தான், பட்டணத்தில் அகழாய்வு செய்யத் தீர்மானித்தேன்.பட்டணத்தில், 2006 முதல், 2016 வரை, 10 முறை, அகழாய்வு செய்துள்ளேன்.

இந்தியப் பல்கலைகள் மட்டுமின்றி, ஆக்சுபோர்டு, உரோம் முதலான, உலகின் புகழ்பெற்ற பல்கலைகள்-அருங்காட்சியக வல்லுநர்களுடன் இணைந்து, அகழாய்வில் ஈடுபட்டேன்.

பட்டணத்துக்கு, நீங்கள் இவ்வளவு முதன்மை தரக் காரணம் என்ன?

உலகில் மிகவும் வளமான நாடுகளாக கருதப்பட்ட, உரோம்  முதலான அனைத்து நாடுகளுடன், வணிகத் தொடர்புடைய துறைமுக நகராக, முசிறி இருந்துள்ளது. இதற்குச், சங்க இலக்கியங்களிலும், உரோமானிய இலக்கியங்களிலும் சான்றுகள் உள்ளன. இது, இப்போதைய கேரளா, எர்ணாகுளம் மாவட்டத்தின் மேற்குக் கடற்கரை, பெரியாற்றின் டெல்டா பகுதியில், பரவூருக்கு அருகே, 2 புதுக்கல் தொலைவில் உள்ளது.

சரி, அதை மெய்ப்பிக்கும் வகையில், நீங்கள் கண்டெடுத்த தொல்பொருட்கள் எவை?

உரோமானியர்கள், கிரேக்கர்கள், பழமது(ஒயின்) போன்ற மதுபானங்களைக் கெடாமல் சேமித்து வைக்க, ‘ஆம்போரா’ என்ற, மண் குடுவைகளைப் பயன்படுத்தினர். அந்தக் குடுவைகள், பட்டணம் பகுதியில் அதிகம் கிடைத்துள்ளன.

பெரிய மனிதர்களின் சமூகத் தகுதியை வெளிப்படுத்த, அழகு சாதனமாக வைக்கப்பட்ட மண்பாண்டங்கள், நறுமணப்புகை பரப்பும் சாடிகளும் கிடைத்தன. மேலும், சீன மட்பாண்ட(செராமிக்கு)  வகைப் பாத்திரங்கள், தாவர விலங்கியல் பரவலுக்கான மரபுச்சான்றுகள், சங்கக்கால சேர, உரோமானிய நாணயங்கள், பானை ஓடுகள்(‘டெர்ரா சிகிலேட்டா’), பலவித மணிகள் எனப், பல ஆயிரம் தொல்பொருட்கள் கிடைத்து உள்ளன. கீழடியில் கிடைத்தது போல், செங்கல் அமைப்புடன் கூடிய கட்டடங்கள், கூரை ஓடுகள், செம்பு, தந்தம் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட பொருட்களும் கிடைத்துள்ளன.

பட்டணத்தில் கிடைத்த, பொருட்களின் கால அளவைக் கணித்தீர்களா?

ஆம். அவை, கி.மு., 300 முதல் 500 வரை இருக்கலாம் என, கணிக்கப்பட்டுள்ளது. அவை, அனைத்துக்குமான தரவுகளை, சங்கக் காலத் தமிழ் இலக்கியங்களில் மட்டுமே, காண முடிகிறது.

கிடைத்த தொல்பொருட்களில் இருந்து, நீங்கள் கருதும் கலை, பண்பாட்டு அடையாளம் குறித்து?

 தமிழர்கள், 2,000 ஆண்டுகளுக்கு முன், தனித்த  கலை, பண்பாட்டு அடையாளத்துடன் வாழ்ந்துள்ளனர். அங்குப், பெண்களுக்குப் பெரும் சமூகப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சீனா, ஐரோப்பிய நாடுகள், மேற்காசிய நாடுகள், சிப்ரால்டர், சுபெயின், ஆப்பிரிக்கா முதலான பல்வேறு பகுதிகளுடன் வணிகம் செய்துள்ளனர். பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதியாகி உள்ளன. இதற்கான சான்றுகள், எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. குறிப்பாகத், தென் சீனப் பகுதியான, எப்பூரில் நடத்திய அகழாய்வில், பட்டணத்தில் கிடைத்தது போன்ற பொருட்கள் அதிகம் கிடைத்துள்ளன. எகிப்தின் கூம்பறை (பிரமிடு) உள்ள இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில், 7 பாரம் (டன் )எடையுள்ள, தமிழகத்தின் குறுமிளகு, மண் பாத்திரம் ஒன்றில் கிடைத்தது. அதேபோல, தேக்கு, தேங்காய் சிரட்டை, பருத்தி பொருட்கள் முதலானவையும் கிடைத்தன. பட்டணத்தில், மிகவும் நாகரிகமடைந்த மக்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக, கழிப்பறைகள் கட்டப்பட்டு, மூன்று குடுவைகள் போன்ற பகுதிகளுக்குப்பின், பூமியின் மேற்பரப்பிற்கு கெடுதல் ஏற்படாத வகையில் கழிவுகளை வெளியேற்றி உள்ளனர். ‘அமலன்’ எனப், பிராமி எழுத்தில், குறிக்கப்பட்ட பானை ஓடு கிடைத்தது. அது, சமணர் அல்லது புத்த மதத்தைச் சார்ந்தவரின் பெயராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

மற்றபடி, சமய, மத அடையாளம் ஏதும் அங்கு கிடைக்கவில்லை. இதனால், தமிழர்கள், புத்த மதப்பரவலுக்கு முன், வளமான பண்பாட்டுடன் வாழ்ந்துள்ளது தெரிகிறது.

உங்களின் ஆய்வு முடிவுகளால், நீங்கள் சொல்ல விரும்புவது?

பண்டைய தமிழகம் என்பது, தற்போதைய தமிழகம் மட்டுமல்ல. ஆந்திரா, கருநாடகாவின் தென்பகுதி, புதுச்சேரி, கேரளா மற்றும் தற்போதைய தமிழகத்தை உள்ளடக்கி இருந்துள்ளது. தற்போது, தமிழகத்தைத் தவிர, மற்ற மாநிலங்களில், தங்களின் முன்னோர்கள் பற்றிய புரிதலும், வரலாற்று அணுகுமுறையும் இல்லை. அனைவரும் அண்ணன், தம்பிகள் என்பதைத்தான், இந்த மாநிலங்களின் பல்வேறு இடங்களில் கிடைக்கும், தொல்லியல் சான்றுகளின் ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. தென் மாநிலங்களின் வாழ்வியல் சொல்லும் வளமான சான்றுகளாகச் சங்கக் கால இலக்கியங்கள் உள்ளன.

தென் மாநில முதல்வர்கள் இணைந்து, தொல்லியல் ஆய்வுகளை நடத்த வேண்டும். ஒருங்கிணைந்த முடிவுகளைத், திறந்த மனத்துடன் பதிவு செய்ய வேண்டும். அது, தென் மாநிலங்களின் தனி அடையாளத்தைக் காட்டுவதாக இருக்கும். மேலும், உலகின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கும், சங்கக்காலச் சான்றுகளுடன் ஒப்பீட்டாய்வுக்கும் முயல வேண்டும்.

ஒப்பீட்டு அகழாய்வு செய்ய, நீங்கள் பரிந்துரைக்கும் இடங்கள்?

 தென் சீனாவின் குவான்சான், எப்பூ, தெற்கு மலாய் தீபகருப்பத்தின் காவோ சாம் காகோ, ஓமனின் கோர் ரோரி, இலங்கையின் மந்தை, அனுராதாபுரம், இந்தியாவின் தம்பரலிப்டி, அரிக்கமேடு, காவேரிப்பட்டிணம், பரிகாசா முதலான 60க்கும் மேற்பட்ட இடங்களின் அகழாய்வு முடிவுகளை, ஒப்பீட்டாய்வு செய்ய வேண்டும். அதை, க் கேரளா, ஆந்திரா, கருநாடக மாநிலப் பாடப்புத்தகங்களிலும் சேர்க்க வேண்டும். அதுதான், நதிநீர் முதலான சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும்.

நமது  செய்தியாளர், தினமலர், 04.11.2018

http://www.dinamalar.com/news_detail.asp?id=2138039

 

இதையும் காண்க: https://www.sahapedia.org/interview-pj-cherian