90therikkaadu

ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்

வைகைப்படுகையில் செங்காற்றால் உருவான

தெற்றிக் காடுகளும்

 காற்றில் அதிகக் கந்தகம் இருந்தால் வெளிப்படுத்தும்

நாகலிங்க மரங்களும்

  பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழன் நிலத்தை 5 பிரிவுகளாகப் பிரித்துக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அழைத்தான். பாலை நிலம் போன்று அதே வேளையில் பாலை நிலம் அல்லாத நிலம்தான் தெற்றிக்காடுகள்.

  தேனிமாவட்டத்தில் கள்ளிக்காடு, தெற்றிக்காடு, கோயில்காடு, பனங்காடு எனக் காடுகள் உள்ளன. இக்காடுகளில் பண்டைய காலத்தில் சிங்கம், புலி, கரடி, பருவிலங்கு (காண்டாமிருகம்) எனப் பல வலம் வந்துள்ளன. இந்த வனவிலங்குகளால் அப்பகுதிமக்கள் துன்புறுத்தப்பட்டனர். இதற்காகப் புலி, சிங்கம், பருவிலங்கு (காண்டாமிருகம்) முதலான வனவிலங்குகளை வேட்டையாடி உள்ளனர். இதற்குச் சான்றாக முதலக்கம்பட்டி என்ற ஊர் உள்ளது. முதவா என்றால் தெலுங்கில் புலி என்று பெயர். முதவா காமு(நாயக்கர்) என்பவர் இப்பகுதியில் கொடுஞ்செயல் புரிந்த புலியை அழித்துக்கொண்றுள்ளார். இதன் அடையாளமாக அழைக்கப்பெற்ற முதவாநாயக்கன்பட்டி என்ற ஊர் காலமாற்றத்தால் முதலக்கம்பட்டி என்று அழைக்கப்படுகிறது. அதற்குச் சான்றாகக் கல்வெட்டு ஒன்று உள்ளது.

  இயற்கையின் அருட்கொடையான பூமியின் நிலப்பரப்பில் எப்பொழுதும் நிலத்தடி நீரைத் தேக்கி வைத்திருக்கும் காடுகள்தான் தெற்றிக்காடுகள். வைகை நதிப்படுகையில் இத்தகைய தெற்றிக் காடுகள் உள்ளன. தேனி மாவட்டத்தில் தேவாரம், சிலமரத்துப்பட்டியில் தொடங்கி ஆண்டிப்பட்டி கணவாய் வழியாகத், தென்மேற்கு பருவக்காற்று வீசும். அதே போல ஆடிமாதம் செங்காற்று(செங்காத்து) அதிக அளவில் வீசும். இந்தச் செங்காற்று(செங்காத்து) வானத்துக்கும் பூமிக்கும் இடைப்பட்டுச் சுருண்டு சுருண்டு மண்களை அள்ளிக்கொண்டு சுழன்று சுழன்று வீசி மணல்களை அள்ளித்தூவிக்கொண்டு ஆண்டிப்பட்டி கணவாயில் தடுத்துநிறுத்தப்பட்டு மணல்களைக் குவியல், குவியலாகப் போடும். இவ்வாறு மணல்குவியல் குவியலாக அமைந்திருக்கும் மணல்குன்றுகள் பார்ப்பதற்கு பாலைவனத்தில் உள்ளது போல வரிவரியாகப் பாலைநிலமாகக் காட்சியளித்தாலும், மணல்குவியல்களுக்கு இடையே மழைக்காலத்தில் நின்ற தண்ணீர் இயற்கையாக மனிதனால் உருவாக்கப்பட்ட குளம் அல்லது குட்டை போன்று காட்சியளிக்கும்.

  பொதுவாக அதிக அளவில் வெப்பம் இருந்தாலும், அதிக அளவில் காற்று அடித்தாலும் கிணறு, ஏரி, குளம், குட்டைகளில் நீர் குறைந்து காணப்படும். ஆனால் இந்தத் தெற்றிக்காடுகள் அமைந்திருந்த பகுதிகளில் நீர் நிலத்தடியில் இறங்காமல், வெப்பம் மற்றும் காற்றால் உறிஞ்சப்படாமல் இருக்கும். ஆண்டிபட்டி கணவாயைச்சுற்றி செம்மண் மேடுகளும், சிறு குன்றுகளும் ஒருபுறம் ஆண்டிப்பட்டி முதல் வருசநாடு வரையும், மறுபுறம் ஆண்டிப்பட்டி முதல் தேவாரம் வரையும் அமைந்திருக்கும். இந்த நிலப்பகுதி கல்வெட்டுகளில் தெற்றி என்ற மேட்டு நிலத்தைக் குறிக்கிறது. புவியியல் வல்லுநர்கள் கூற்றுப்படி இந்த நிலத்தில் அமைந்திருக்கும் தேரிக்காடுகள் அகலாங்கு (அட்சரேகை) 8000 பாகை-9030 பாகை வடக்கிலும், நெட்டாங்கு (தீர்க்கரேகை) 77018 பாகை-79000 பாகை கிழக்கிலுமாக, ஏறத்தாழ 400அயிரைப்பேரடி(கிலோமீட்டர்) பரப்பில் இந்த தேரிக்காடுகள் அமைந்திருப்பதாகக் கூறுகின்றனர்.

  தேரிக்காடுகள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் உருவாகி இருந்திருக்கவேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதற்குச் சான்றாக வருசநாடு, கடமலைக்குண்று பகுதிகளில் பழங்கால மனிதர்கள் இறந்த பின்னர் அவர்களுக்குப் பயன்படுத்திய கல்திட்டைகள், கற்படுக்கைகள் ஏராளமாக அமைந்துள்ளன. நுண்கற்கருவிகள் மற்றும் புதிய கற்காலக் கருவிகள் பயன்படுத்திய மக்களும் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. போடி நாயக்கனூர் ஓடைப்பகுதியில் நுண்கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. சிலமலைப் பகுதிகளில் ஒரு புதிய கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன.

  தொல் பழங்காலத்தின் அடுத்த கட்டம் பெருங்கற்படைக்காலம் ஆகும். இக்காலத்தில் இரும்பின் பயன்பாட்டை மக்கள் அறிந்திருந்தனர். இதனை இரும்புக்காலம் அல்லது மாழை(உலோக)க் காலம் என்றும் கூறுவர். இப்பகுதியைப் பொருத்தவரை கி.மு. 500 இல் இக்காலம் தொடங்குவதாகக் கருதலாம். மேலும் பெரிய பெரிய கற்களைக் கொண்டு மக்கள் ஈமச்சின்னங்களை இக்காலத்தில் அமைத்ததால் இதனைப் பெருங்கற்படைக்காலம் எனக்கூறுவர். கல்திட்டை, கல்பதுக்கை, கற்குவை, முதுமக்கள் தாழிகள் எனப் பலவகையான வடிவங்களில் ஈமச்சின்னங்கள் அமைக்கப்பட்டன. முதுமக்கள் தாழிகளினுள் இரும்புக்கருவிகளும், சூதுபவள மணிகளும் வைக்கப்பட்டுள்ளன. சூதுபவள மணிகள் செய்வதற்கான மூலக்கருவிகள் குசராத்து பகுதியிலிருந்தே கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

  மேற்குமலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பெரியூர், சின்னூர், பெரியகுளம் அருகில் உள்ள அகமலைப்பகுதி ஆகியவற்றில் இந்தகைய கற்படுக்கைகள், கற்திட்டைகள் உள்ளன. இதே போன்று இடைக்கற்கால ஆயுதங்கள், கருவிகள், மதுபானக்கிண்ணங்கள், குறிஞ்சி நிலப்பகுதியில் பாலை நிலத்தில் காணப்படும் குறியீடுகளை காமயகவுண்டன்பட்டி பகுதியில் உள்ள மலைப்பகுதியில் ஓவியமாக வரைந்துள்ளனர். இவற்றையெல்லாம் ஆய்வு மேற்கொள்ளும்போது கடல்கோளால் இப்பகுதிகள் இடமாறியிருக்கலாம் எனக் கருதவும் ஆய்வுக்குரிய செய்தியாகவும் உள்ளது.

  இந்த தேரிக்காடுகள் உருவாக மேற்குத்தொடர்ச்சி மலைகளே முதன்மையான காரணமாக அமைந்துள்ளன. மேற்குமலைத்தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள ஆண்டிப்பட்டிக் கணவாய் மிகவும் முதன்மையான ஒன்றாகும். தேவாரம், போடி பகுதிகளில் வேகத்தில் வீசுகிற காற்று மேற்குமலைத்தொடர்ச்சி மலையைக் கடந்து செல்ல ஒரே வழியாக ஆண்டிபட்டிக் கணவாய்தான் உள்ளது. அது கடந்து வருகிற பாதை எங்கும் பரந்து சிதறிக் கிடக்கிற செம்மணல் துகள்களை வாரிச்சுருட்டி எடுத்துச் செல்கிறது. அவ்வாறு செல்லும்போது மேலும் செல்லாமல் கணவாய் தடுத்து நிறுத்துவதால் அவ்வாறு எடுத்துச்செல்லப்படும் மணல்கள் குன்றுகளாக அமைந்திருக்கின்றன..

  இவ்வாறு கற்கால மனிதர்கள் வசிப்பிடம், இறந்த பின்னர் இறந்தவர்கள் மேல் அமைக்கப்படும் கல்திட்டைகள், முந்திரிக்காடு, பணப்பயிர் என பல்வேறு வளர்ச்சிநிலைகளை உருவாக்கி அமைந்துள்ளது.. இன்று மனிதனுக்கு மிகவும் இன்றியமையான மின்சாரத்தைக் காற்றாடிகள் மூலம் உருவாக்குவதற்கு தேரிக்காடுகள் முதன்மையான பங்கு வகிக்கிறது. இருப்பினும் காற்றாலைகளால் தேரிக்காடுகள் அழிக்கப்பட்டு வரு கின்றன.

  காற்றில் அதிகக்கந்தகம் இருந்தால் வெளிப்படுத்தும் நாகலிங்க மரப் பூக்கள். தெற்றிக்காடுகள் அமைந்துள்ள நீர்நிரம்பிய பகுதிகளான குளம், கண்மாய், அணைக்கட்டு, ஆறு, வாய்க்கால் அருகில் ஏராளமான நாகலிங்க மரங்கள் உள்ளன. சிவலிங்க வடிவிலான இலைகளும், மேற்குப்பகுதியில் நாகப்பாம்பு படம் எடுத்தது போன்றும் இயற்கையாகவே அமைந்துள்ளதால் இதனை நாகலிங்கப்பூக்கள் என அழைக்கிறார்கள். ‘Couroupita guianensis’ என்ற தாவரவியல் பெயர்கொண்ட நாகலிங்க மலரில் ஐந்து இதழ்கள் இருக்கும். நாகலிங்கப்பூவை தெலுங்கு மொழியில் நாகமல்லி, மல்லிகார்ச்சுனம், கானல் பால் மரம், சல்பூல், கைலாசுபதி என்று பலவகையாக அழைக்கிறார்கள். ‘பிரேசில் கொட்டை’(Brazil nut) என்ற குடும்பத்தைச்சார்ந்தது. இந்த நாகலிங்கப்பூக்கள் மரத்தின் இலைகளை அரைத்து மென்று தின்பதால் பல்வலிக்கு மருந்தாகவும், பட்டைகளையும், காய்களையும் பக்குவப்படுத்தி நச்சுக் காய்ச்சலுக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம் என்கிறது சித்தமருத்துவம். மற்ற தாவரங்களைப்போல் பருவகால மாற்றங்கள் கிடையாது. எப்போதும் பசுமையாகக் காட்சியளிக்கும். இந்த மரத்தில் ஒரே நாளில் ஆயிரம் மலர்கள் வரை பூக்கும்.

  ஒவ்வொரு பழமும் ஒரு கால்பந்து அளவுக்கு இருக்கும். அதில் 65 முதல் 550 விதைகள் வரை இருக்கும். இவை முதிர்ச்சி அடைய 12 லிருந்து 18 மாதங்கள் வரை ஆகும். இந்த மரம் மற்ற மரங்களை விட மாசுக்கட்டுப்பாட்டின் தன்மையைக் காட்டும் குறியீட்டுக் கருவியாகவும் கருதப்படுகிறது. காற்றில் அதிகமான கந்தகம் இருந்தால் அதன் இலைகளை உதிர்த்து வெளிப்படுத்தும்.

  அனைத்து வகையான மரங்களும் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தல மரமாக(தலவிருட்சமாக)ப் பேணப்பட்டு வருவதையும் அந்த மரத்தின் பெயரை ஒட்டியே ஆலயமும் அமைந்திருக்கும் என்பதையும் நாம் அறிவோம். ஆனால் இம்மரம் எந்தக் கோயிலிலும் தல மரமாக அமைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பெருமை வாய்ந்த தேரிக்காடுகளும், இயற்கையாக உள்ள காற்றில் அதிகக்கந்தகம் இருந்தால் வெளிப்படுத்தும் கருவியாகவும், மருத்துவ குணமிக்கதாக உள்ள நாகலிங்க மரங்களும் மனிதனின் ஆணவத்தால் அழிந்து வருகின்றன. இப்பொழுது காற்றாலை மூலம் மின்சாரம் எடுப்பதற்கு மரங்களையும், தேரிக்காடுகளையும் அழிப்பது பல ஆயிரம் ஆண்டுகளின் காலச்சுவட்டைத் தடயம் இல்லாமல் அழித்து வருங்காலத் தலைமுறையினர் காணஇயலாமல் செய்வதாகும்.

 90vaiagaianeesu_name

 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இதுதான் சூதுபவளமணி :

சூதுபவள மணிகள்

சூதுபவள மணிகள்