தமிழ்க்காப்புக் கழகம்:

தேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கக் கருத்துரை

 எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு.

சமற்கிருதம், இந்தி ஆகிய மொழிகளின் பன்முகத் திணிப்புகளால் இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள தமிழ் முதலிய தேசிய மொழிகள் அழிவுப்பாதைக்குத் தள்ளப்படுகின்றன என்பதை நினைக்கையிலே நெஞ்சு பதைகின்றது, அதைச்சொல்ல வாய் துடிக்கின்றது. இந்த நிலையில்தான் நான் பேசத்தொடங்குகின்றேன்.

தமிழ்க்காப்புக் கழகத்ததின் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவர் அவர்களே! இந்த தேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்தகொண்டு, சமற்கிருதம், இந்தி ஆகிய மொழிகளின் பன்முகத் திணிப்புகளால் இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள தமிழ் முதலிய தேசிய மொழிகள் அழிவுப்பாதைக்குத் தள்ளப்படுகின்றன என்னும் கருப்பொருள் பற்றி மிகச் சிறந்த விழிப்புணர்வு   உரையாற்றி பெருமை சேர்த்திருக்கின்ற அறிஞர் பெருமக்களே! இந்த விழாவைக் கண்டு கேட்டு உணர்ச்சி வயப்பட்டிருக்கின்ற ஏனைய தமிழ்ச் சொந்தங்களே!  உங்கள் அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கத்தை முதற்கண் தெரிவித்துக்கொள்கின்றேன்.

                நம் தாய்மொழியாம்  தமிழ் மொழியின் சிறப்புகளைப்பற்றி பலரும் பேசினார்கள். உலகின் முதல் மாந்தன் தமிழன்தான்; முதன் மொழியும் தமிழேதான்; மூதறிஞர்கள் நெறிமுறைகள் கண்டறிந்ததும் இந்தத் தமிழ் மண்ணில்தான்; நான்மறையை உலகிற்குத் தந்தமொழி தமிழ்மொழிதான் என்னும் இந்த உண்மையை அறியாத சமற்கிருத இந்தி மொழி வெறியர்கள் யார், அவர்களின் பின்புலம் என்ன, அவர்களின் முன்னோர்கள் யார், என்னும் உண்மையை அவர்கள் அறிந்து கொள்வார்களேயானால் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவர்கள் இந்த உண்மையை அறிந்துகொள்ளும் நிலையில் உள்ளனரா என்பதுதான் கேள்விக்குறி!

அன்புத் தமிழ் நெஞ்சங்களே! உண்மையை சற்றே சிந்தித்துப்பாருங்கள். உலகில் மாந்த இனம் தோன்றிய இடம் ஆதி மனிதன் தோன்றி வளர்ந்ததாக வரலாறு கூறும் குமரிக்கண்டம். இங்குத் தோன்றிய ஆதி மனிதன்தான் சுற்றுப்புறச் சூழலில் பார்த்த பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் அவற்றின் செயல்களைக்கண்டு காக்கா என்றும், கிளி என்றும் குயில் என்றும், குரங்கென்றும், குதிரை என்றும் பெயரிட்டு அழைக்கத் தொடங்கினான். நமது உடலுறுப்புகளுக்கு அவற்றின் செயல்பாடுகளின் அடிப்படையில்,  வாங்கிக்கொள்வதை வாய் என்றும் முந்தியிருப்பதை மூக்கு என்றும், எய்தப்பயன்படும் உறுப்பை செய் என்றும் கை என்றும் காற்றுபோல் கடக்கப்பயன்படும் உறுப்பைக் கால் என்றும், உறவுப்பெயர்களை அம்மா என்றும், அப்பா என்றும், அண்ணன் என்றும், தம்பி என்றும்,  அக்காள் என்றும், தங்கை என்றும் தாத்தா என்றும், பாட்டி என்றும் பெயரிட்டு வாழத்தொடங்கினான். அண்மையில் உள்ளவற்றை இது, இவன், இவள்,  இவர், இங்கே என்றும் தொலைவில் உள்ளவற்றை அது, அவன், அவள், அவர், அங்கே என்றும் உயரே உள்ள பொருள்களை உகரச்சுட்டெழுத்துகொண்டும் அழைக்கத் தொடங்கினான். இவ்வாறு சொற்களாகத் தொடங்கிய மொழி சொற்றொடராகி இயலாகி, இசையாகி, நாடகமாய் வளரத் தொடங்கியது. இவ்வாறாகத் தமிழ் மொழி வளர வளர தாய்த்தமிழ் மண்ணில் மக்கள் தொகை பெருகலாயிற்று. மக்கள் பெருக்கால் உந்தப்பட்ட மக்கள் வாழ்வைத்தேடித் தாய்மண்ணில் வளர்ந்திருந்த மொழி அறிவோடு பண்பாட்டுக் கூறுகளோடு உலகின் பல பகுதிகளுக்குப் பரவிச் செல்லத் தொடங்கி, சென்ற இடங்களில் குடியேறத் தொடங்கினர். குடியேறிய இடங்களில் தாய்மண்ணிலிருந்து  கொண்டுசென்ற மொழி அறிவைக்கொண்டு தங்களுக்கென ஒரு மொழியை உருவாக்கிக் கொண்டனர். தமிழ்ப் பண்பாட்டைத் தழுவித் தங்களுகென ஒரு பண்பாட்டை வளர்த்துக்கொண்டனர். எனவே உலக மக்களின் பண்பாடு தமிழ் பண்பாட்டைத் தழுவியதாக இருப்பதையும், உலக மொழிகளின் சொற்களின் வேர் தமிழாக இருப்பதையும் காண்கின்றோம். இவ்வாறு உலகில் உருவான மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாகத் தமிழ் உள்ளதை மொழியியல் அறிஞர்கள் நிறுவியுள்ளனர்.

இவ்வாறு வெளிநாடுகளில் குடியேறிய ஆதி தமிழன் கி.மு. 1500- ஆம் ஆண்டுகளில் மத்திய ஆசிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வாழ்வைத் தேடி நாடோடிக் கூட்டமாய்  மலைமொழிப் பேச்சுடனே நிலைதேடி வந்தார்கள். ஆரியராய் இம்மண்ணில் அடிவைத்தனர் அந்நியர்கள். அன்று, செந்தமிழ்ச் சீருடைய  சிறப்புமிகுப் பைந்தமிழன் இந்தியத் திருமண்ணில்  எங்கும் குடியிருந்தான். வந்தாரை வரவேற்கும் வாசமிகு  தமிழனவன் தந்தான் தனதுரிமை தடம்தேடி வந்தோர்க்கு. அந்நியனாய் வந்தவனோ ஆளத்தொடங்கி இங்கு அழித்திட்டான் தமிழ்ப்பண்பை அவன் வகுத்த குலப்பிரிவால். ஆரியரும்  தமிழருடன்  அருகிப் பழகியதால் அன்றாட வாழ்விலவர் ஆதிக்கம் பெருகிற்று. ஆரியரின்  ஆட்சிக்கு ஆட்பட்டான்  தமிழ்மகனும். ஆரியர்க்கோ தேவையவர் ஆட்சிக்கு அறநூல்கள்; அதற்கான நூற்பொருளும் அன்றில்லை ஆரியர்பால். ஆரியரின் தேவைகளை ஆக்கிப் படைத்திடவே அறனறிந்து மூத்த அறிவுடைத் தமிழ்ப்புலவோர், செய்தனர் அவர் மொழிக்குச் சிறப்பான எழுத்துருவும்; சமைத்தனர் சமற்கிருதம் சமயநூல் ஆக்கிடவே. சங்கத் தமிழ்நூல்கள் சாற்றைப் பிழிந்தெடுத்து ஆக்கினர் சமற்கிருத அறநூல்கள் ஆரியர்க்கே. தான்சமைத்த மொழியெனலால் தான்வடித்த நூலெனலால் தமிழ்மகனும் தடம்புரண்டான், தனையிழந்தான், அவனான். வடமொழிக்குத் துணைநின்றான் வந்தவழி மறந்துவிட்டான். வருணாசிரமத்தின் வடிகாலாய்ச் செயல்பட்டான். வடமொழிக் காதல் ஆட்சியினர் தென்புலத்தை ஆண்டதனால் வடமொழியின் தாக்கமது வாட்டியது தமிழ்மொழியை. மக்கள் வழக்காற்றில் மாசுற்ற தமிழிங்குப் பக்கக் கிளைவிட்டுத் தெக்கண மொழிகளென தமிழோடு மலையாளம் கன்னடம் தெலுங்கென்று துளுவும் சேர்ந்திங்கு துளிர்த்தன பலமொழிகள். இந்த வழக்காற்றில் இருந்ததனால் தமிழ்மக்கள் சொந்தத் தனித்தமிழில்  சொல்லாற்றும் நிலையிழந்தார். கந்தலாய் வடமொழியைக் கலந்துப் பேசலுற்றார். கடவுள் மொழியென்று கண்மூடித் தனமாக வடமொழி வழிபாட்டில் வலைப்பட்டார் வழக்குற்றார். இந்த நிலைகளைய இனியதமிழ் காக்க வந்தார்கள் அறிஞர்பலர் வரிசையாய் இம்மண்ணில். பரிதிமால் கலைஞரவர் பாரில் அவதரித்தார். பார்போற்றும் மறைமலையும் பாரில் வந்துதித்தார். திருவிக உருவானார்  திருத்தமிழைப் போற்றுதற்கு. பாரதியும் தோன்றியொரு தாசனையும் படைத்திட்டார். முப்பால் தமிழுக்கு மொழிவேந்தர் பாவாணர் தப்பாமல் அவதரித்தார் தனித்தமிழை வளர்த்திடவே. இந்த வரிசையிலே வந்த பாவேந்தர் வாழ்ந்த காலத்தில் பரங்கியரின் ஆதிக்கம். பரங்கியரின் ஆட்சியிலே பதப்பட்ட தமிழரெலாம் கரங்கொண்டார் ஆங்கிலத்தை கருத்தழிந்தார் தமிழ்மறந்தார். நாள்தோறும் நாள்தோறும் நலிந்தழியும் தமிழினத்தை மீட்கத் துடிதுடித்தார்  மிடுக்குடனே பாவேந்தர். ‘முதல்மாந்தன் தமிழன்தான். முதன்மொழியும் தமிழேதான். மூதறிஞர் நெறிமுறைகள் கண்டதிந்தத் தமிழ்மண்தான். நான்மறையை உலகிற்குத் தந்தமொழி தமிழ்மொழிதான்’ என்று பல உண்மைகளை எடுத்துரைத்த பாவேந்தர் தீந்தமிழை உயிரென்றார், தெவிட்டாத கனியென்றார். அமுதென்றார், நிலவென்றார், மணமென்றார், மதுவென்றார், அறிவுக்குத் தோளென்றார், பிறவிக்குத் தாயென்றார். உயிரனையத்  தமிழ்மொழியின் உயர்வறியா தமிழ்மக்கள் உறங்கும்  நிலையறிந்து உள்ளம் நெருப்பாகி நெஞ்சு பதைபதைத்தார் நிலைநீக்கக் கவிபடைத்தார். தமிழியக்கம் பாடியிவர் தமிழற்கு ஆணையி;ட்டார், ’பண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை அனைத்தையுமே படைத்திடவே  துடித்தெழுவீர்! தொண்டு செய்வீர் துறைதோறும் துறைதோறும் தமிழுக்கு!’ என்றுரைத்தார். தமிழ்நாட்டைத்  தமிழ்நாடாய்க் காணத் துடிதுடித்தார். ‘தமிழ்மொழியைத் தமிழாகப் பேச வேண்டும்; தமிழில்தான் எத்துறையும் ஆள வேண்டும்; தமிழ்வழியே கற்பித்தல் நிகழ வேண்டும்; தமிழாலே ஆலயத்தில் தொழுதல் வேண்டும்; தமிழரெலாம் தமிழ்ப் பெயரைத் தாங்க வேண்டும்’ என்று பல கனவு கண்டார்; எழுச்சிக் கவிபடைத்தார். என்ன செய்தோம் நாமிங்கு  ஏனில்லை மாற்றமிங்கு! அரங்குகளில் பேசுகின்றோம் அடைந்த பயனுமென்ன! அதிகாரம் கொண்டுள்ளோம் ஆனாலும் செய்ததென்ன! அதிகாரம் உள்ளவர்கள் நினைத்தால் நிலையுயரும்; துணைவேந்தர் செயல்பட்டால் துறைகள் தமிழாகும்; ஆட்சியர்கள் செயல்பட்டால்  ஆட்சிமொழித் தமிழாகும்; கற்றறிந்து பெரும்பொறுப்பில் பணிபுரியும் வல்லுநர்கள் உற்றதமிழ் உணர்வினராய் உயர்தமிழைப் போற்றுவரேல் மற்றபிற மக்களெலாம் மலர்ந்திடுவர் தமிழர்களாய். ஆங்கிலத்தைப் பயின்றுபணி ஆற்றிவரும் அறிஞரெலாம் தங்களது தனிப்பண்பு தமிழ்ப்பண்பே எனப் போற்றி தயங்காமல் செயல்பட்டால்  தழைக்கும் நல்ல தமிழுலகம் இப்புவியில் தானாய்த் தோன்றும். கற்றறிந்த தமிழுலகே கடிதே வாரீர்! நற்றமிழர் பாவேந்தர் பற்றுடனே கண்ட கனவை யெல்லாம் ஒற்றுமையாய் செயல்பட்டு வெல்வோம் என்று உறுதிமொழி கொள்வோம் நாம் உவந்து வாரீர்!

’எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்:
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே’

என்று பாடிச்சென்றுள்ளார் பாவேந்தர். ஆனால் இன்று தமிழர்களின் நிலை என்ன? சிந்தித்துப் பாருங்கள். சமற்கிருதம், இந்தி ஆகிய மொழி வெறியர்களின் அடியொற்றி வாழ்பவர்களாக இருக்கின்றார்கள் தமிழகத்தை ஆண்டுவரும் இன்றைய தமிழர்கள். அவர்களுக்கு நடுவணரசின் துணை வேண்டும். அவர்கள் தன்மானத்தை இழந்து தமிழர்களின் உரிமைகளை அடகுவைத்து தங்கள் பதவியை தக்கவைத்துக்கொள்ள துணிந்து விட்டார்கள். தமிழக மக்களோ சமற்கிருத வழிபாட்டில் தங்களை இழந்து தமிழ் நெறியை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

பா.ச.க. வின் உண்மை நிலையைத் தமிழர்கள் அறிந்துகொள்ளவில்லை. பா.ச.க. வின் நோக்கமே இந்திய நாட்டில் இந்தியையும் சமற்கிருதத்தையும் ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் செயல்படுத்தித் தமிழை அழித்துத் தமிழர்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதுதான்.  என்றைக்குப் பா.ச.க. வினர் இந்திய ஆட்சியைக் கைப்பற்றினார்களோ அன்றே இந்திய நாட்டின் பிற மொழிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டன. அவர்களின் உண்மை நோக்கத்தை உணராத மக்கள் அவர்களை ஆட்சியில் அமர்த்தி விட்டார்கள். இப்பொழுது தமிழக அரசைத் தங்கள் பக்கம் ஈர்த்துத் தமிழக மக்களை ஏமாற்றித் தமிழகத்தில் தங்கள் ஆட்சியை நிறுவத் தலைப்பட்டுள்ளார்கள்.  

தமிழ்ச் சொந்தங்களே! விழித்தெழுங்கள்! சமற்கிருத, இந்தி மொழி வெறியர்களின் ஆட்சி தமிழ் மண்ணில் அடி வைக்க இடம் கொடுக்காதீர்கள்! வருகின்ற தேர்தலில் உங்கள் உரிமையை நிலைநாட்டுங்கள்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழகம்! வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்.

– முனைவர் மு.பொன்னவைக்கோ

முன்னைத் துணைவேந்தர், பாரதிதாசன் பல்கலைக்கழகம்