sprinkler06

  தேனிப் பகுதியில் நீர்தெளிப்பான் பாசனத்திற்கு உழவர்கள் மாறிவருகிறார்கள்.

  தேனிப் பகுதியில் பல ஆண்டுகளாகப் பயிர்த்தொழிலில் ஈடுபட்டு வரும் உழவர்கள் பெரும்பாலும் சோளம்,கம்பு, மணிலா போன்ற பயிர்களைப் பயிரிட்டு வந்தனர். கடந்த சில வருடங்களாக உரிய மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிணறுகள் எல்லாம் வற்றிவிட்டன. அதனால் உழவர்கள் பயிர்த்தொழிலில் ஈடுபடுவது பெரும் அறைகூவலாக இருந்து வருகிறது.

  தண்ணீர்த்தட்டுப்பாடும், வேலையாட்கள் தட்டுப்பாடும் உள்ள சூழ்நிலையில் வேளாண் பணிகளை மேற்கொள்ள முடியாமல் உழவர்கள் தங்கள் விளை நிலங்களைத் தரிசு நிலங்களாக மாற்றிவிட்டனர். இந்நிலையில் தெளிப்பு நீர்ப் பாசனத்தின் மூலம் பயிர்களைச் சாகுபடி செய்து ஆதாயம் பெறலாம் என எண்ணி வசதிபடைத்த உழவர்கள் நீர்த்தெளிப்பான் பாசனத்திற்கு மாறிவருகிறார்கள். ஆனால் சிறு, குறு உழவர்கள் இந்த நிலையைத் தொடரமுடியவில்லை.

  மேலும் தோட்டக்கலைத்துறை மூலம் இதற்குப் போதிய விழிப்புணர்வும் உழவர்களைச் சென்றடையவில்லை. இதன் தொடர்பாக வேளாண்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,
பின்வருமாறு தெரிவித்தார்.

“தெளிப்பு நீர்ப் பாசனத்திற்காகக் கருவியையும் நல்கை விலையில் உழவர்களுக்கு தற்போது அரசு அளித்து வருகிறது. நிலஉடைமை உழவர்களுக்கு 100   விழுக்காட்டு நல்கையிலும், பிற உழவர்களுக்கு 75 விழுக்காட்டு நல்கையிலும் சொட்டு நீர்ப் பாசனத்திற்கான கருவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

  பொழிவுப் பீச்சி (rain gun), சுழல்தெளிப்பி (sprinkler) என இரண்டு வகையான பாசனக்கருவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

 பொழிவுப் பீச்சி கருவி ஒரு கோல்(மீட்டர்) உயரமுள்ள முக்காலியில் பொருத்தப்பட்டிருக்கும். ஏறத்தாழ 64கோல் பரப்பளவிற்குத் தண்ணீரைத் தெளிக்கும் திறன் கொண்டது. எளிதாக   ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லலாம். ஒரு குறுக்கம்(hectare)நிலத்திற்கு ஒரு பொழிவுப் பீச்சி என உழவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

sprinkler01

 சுழல்தெளிப்பி (sprinkler) கருவி ஏறத்தாழ 24கோல் பரப்பளவிற்குத் தண்ணீரைச் சுழற்சி முறையில்   தெளிக்கும்.  சுழல்தெளிப்பிக் கருவிகள்  உழவர்களுக்கு நல்கையில் அளிக்கப்பட்டு வருகின்றன.

sprinkler02 sprinkler03 sprinkler05

  தெளிப்பு நீர்ப் பாசனத்தின்கீழ் 3 மணி நேரத்திற்குள் ஒரு காணி முழுவதிலுமுள்ள பயிர்களுக்குத் தண்ணீர் தெளித்துவிடலாம். காய்கறி, கீரை, உளுந்து, எள், பூப் பயிர்களுக்குத் தெளிப்பு நீர்ப்பாசனம் உகந்தது. எனவே தண்ணீரைச் சிக்கனப்படுத்திப் பயிர்த்தொழிலுக்கு வழிகாட்டக்கூடிய தோட்டக்கலைத்துறை – வேளாண்மைத்துறை அதிகாரிகள் இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த முயன்றால் உழவர்கள் ஆண்டுமுழுவதும் தங்கள் பயிர்த்தொழிலைத் தொடரலாம்.”

sprinkler04

 இதற்கு மாவட்ட நிருவாகம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என உழவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

vaigaianeesu_name02