தேர்தல் ஆணையத்தின் கொடுங்கோன்மை!

தேர்தல் ஆணையத்தின் அறமுறையற்ற செயல்பாடுகளைக் கொடுங்கோலாட்சியின் செயல்பாடுகளுடன்தான் ஒப்பிட முடியும்.

மக்களாட்சியின் அடையாளமாகத் திகழ்வது தேர்தல். தேர்தலில் போட்டியிடுவோருக்குரிய மக்களாட்சிக் கடமைகளை ஆற்ற உதவ வேண்டியது தேர்தல் ஆணையத்தின் அடிப்படைப் பணி. ஆனால் கட்சிகளுக்கேற்றவாறு மாறுபட்ட அளவுகோல்களைக் கொண்டு சூழ்நிலைகளை ஆராய்ந்து தனக்குரிய கடமையிலிருந்து தவறுவதே தேர்தல் ஆணையத்தின் பணியாக உள்ளது. நடுநிலையாளர் என்ன சொல்லுவார்கள் என்ற அச்சம் இன்றித் துணிந்து தவறுகளைச் செய்கிறார்கள் என்றால் இதனை எங்ஙனம் செங்கோன்மையாகக் கூற முடியும்?

ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளுக்கு ஓர் அளவுகோலையும் எதிரணியில் உள்ள கட்சிகளுக்கு மற்றோர் அளவுகோலையும் தேர்தல் ஆணையம் பின்பற்றுவது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால், இது குறித்து அது கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஒரு வேளை அவ்வாறு தெரிந்தால்தான் தங்களின் அடிமைப்பற்று ஆள்வோருக்குப் புரியும் என எண்ணுகிறதோ என்று தெரியவில்லை. அ.தி.மு.க., பா.ச.க. கூட்டணிக்கட்சிகளுக்கு அவர்கள் வேண்டும் சின்னங்களை ஒதுக்குவதற்கு மனம் இருக்கும்  தேர்தல் ஆணையத்திற்குப் பிற கட்சிகளுக்கு வேண்டியவாறு சின்னங்களை ஒதுக்க மனம் வரவில்லை.

இளைஞர்களை ஈர்த்து வளர்ந்து வரும் கட்சியாக நாம் தமிழர் கட்சி உள்ளது. அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடும் இக்கட்சிக்குக் கடந்த முறை பெற்றிருந்த மெழுகுவத்திச் சின்னத்தை ஒதுக்குவதே முறையாகும். ஆனால், மறுத்து விட்டது.

ஒரு கட்சி அங்கீகாரத்தை இழந்தாலும் 6 ஆண்டுகள் வரை பழைய சின்னத்தில் போட்டியிடலாம் என விதி உள்ளது. ஆனால், பரவலான செல்வாக்கு உள்ள ம.தி.மு.க.விற்கு அதன் பழைய சின்னமான பம்பரம் அல்லது அதற்கு முந்தைய சின்னமான குடை தர மறுத்து விட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகாரம் பெறாக் கட்சி என்றாலும் பதிவு செய்யப்பட்ட நல்ல எதிர்காலம் உள்ள கட்சி. அக்கட்சி கேட்ட நட்சத்திரச் சின்னமோ மோதிரம் சின்னமோ  தந்திருக்கலாம். ஆனால் மறுக்கப்பட்டு விட்டது.

அமமுக, பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் பொதுவான சின்னம் ஒன்றை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது

விதி என்பது மக்களுக்காகத்தான். இரு வேறு கட்சிகள் குறிப்பிட்ட சின்னம்தான் வேண்டும் என்று வேண்டாத பொழுது ஒரு குறிப்பிட்ட கட்சி விரும்பும் பொதுவான சின்னத்தை வழங்கலாம். அவ்வாறு விதியில்லை எனில், அதற்கேற்றப விதியை அமைத்துக் கொள்ள வேண்டும்.  இதனால் யாருக்கும் எந்தத் தீமையும் விளையப்போவதில்லை. மக்களாட்சிக்கும் கேடு இல்லை.

தேர்தல் ஆணையத்தின் பணி தேர்தலை நடத்துவது மட்டுமல்ல. போட்டியிருவோருக்குரிய சம வாய்ப்பை ஏற்படுத்துவதும் நடுவுநிலைமையுடன் செயல்படுவதும்தான். ஆனால், அவ்வாறு இந்தியத் தேர்தல் ஆணையம் செயல்படுதில்லை என்பதற்கு அடுக்கடுக்கான அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் சான்றாகின்றன.

மற்றொரு சான்று. மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் பொழுது ஐந்நூறாயிரம் மக்கள் அங்கே கூடுவர்.  எனவே, தேர்தல் நாளை மாற்றியமைக்க வேண்டினர். ஆனால், வாக்குப்பதிவு நேரத்தைக் கூட்டி விட்டு,  தேர்தல் நாளை மாற்ற மறுத்து விட்டது.

மதுரை வாக்காளர்களுக்கு வேண்டுமென்றால் வாக்குப்பதிவு நேரம் கூட்டுவது ஓரளவு உதவியாக இருக்கலாம். நாட்டின் பிற பகுதிகளிலிருந்து அங்கே வந்து கூடும் வாக்காளர்கள் எங்ஙனம் வாக்களிக்க இயலும்? குறிப்பாகப் பெரும் எண்ணிக்கையில் உள்ள மதுரை மாவட்டத்தைச் சுற்றியுள்ள தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களும் வாக்களிக்க இயலாமல் போகிறது.

தென்மாவட்ட மக்கள் மிகுதியாக வருவர்.  அவர்கள் வாக்கு ஆளுங்கட்சிக் கூட்டணிக்கு எதிரானது என அவர்கள் வாக்களிக்க இயலாத வண்ணம் தேர்தலை மாற்ற மறுத்துவிட்டதாக மக்கள் கருதுகின்றனர். ஆனால், இது குறித்துத் தேர்தல் ஆணையம் கவலைப்படவில்லை.

நாடாளுமன்றத் தேர்தல், ஏப்பிரல்11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.  மே 5 முதல் இரம்லான் மாதம் தொடங்க உள்ளதால், நாடாளுமன்றத் தேர்தலை ஒருமாதத்திற்குத் தள்ளிவைக்க வேண்டும் என்று  மம்தா பானர்சி, கெசுரிவால்  முதலான சிலர்  தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்தனர். அதுபோல் ஏப்பிரல் 18இல் தூய வியாழன் வருவதால் தமிழகத்தேர்தலைத் தள்ளி வைக்கக் கிறித்துவச் சமயத்தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தனர். இவற்றின் வேண்டுகோள்களைத் தேர்தல் ஆணையம் புறக்கணித்தது. ஆண்டுதோறும் மத நிகழ்வுகள் உள்ளமையாலும் அந்தந்தப் பகுதி சார்ந்தே இவை நிகழும் என்பதால் இதனைச் சரி எனலாம். ஆனால், சித்திரைத் திருவிழா நடப்பது மதுரை என்றாலும் நாடு முழுவதும் உள்ள இறையன்பர்கள் திரளுவதால் இதனைக் கருதிப்பார்த்திருக்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் கொடும் மனப்பான்மைக்கு மற்றுமொரு சான்று; மார்ச்சு 15 அன்று சின்னம் தொடர்பான வழக்கின் கேட்பு உச்சநீதிமன்றத்தில் வருவதைத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தும், அடுத்து 9 நாள் விடுமுறை என்பதால் வேண்டுமென்றே ஆணைய அதிகாரிகள் உச்ச நீதி மன்றம் வரவில்லை. தேர்தல் களத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணியும் விலைமதிப்பற்றது என்பதை அறிந்தும் தேர்தல் ஆணையம் இந்தப் புறக்கணிப்பைச் செய்துள்ளது. சீப்பை ஒளித்துவைத்தாலாவது திருமணம் நிற்காதா என்ற அற்பர்களின் ஆசை போன்று அல்லவா இஃது உள்ளது. விடுமுறை முடிந்து 25/03.09 அன்றும் கேட்பிற்கு முதன்மை அதிகாரிகள் வரவில்லை. எழுத்து வடிவிலான மறுமொழியும் தரவில்லை. இவை யாவும் தேர்தல் ஆணையத்தின் நடுவுநிலைமயற்ற தாக்குதல் என்றுதானே ஆகிறது.

நடுநிலையற்ற தேர்தல் ஆணையத்தின் போக்குகளை முன்பே சுட்டிக்காட்டியுள்ளோம். ஊடகங்களும் அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர். உயர்நீதிமன்றங்களும் உச்ச நீதி மன்றமும் தேர்தல் ஆணையத்தின் நடுவுநிலைமையற்ற போக்கிற்குக் குட்டுகள் வைத்த பின்னும் எப்படித்தான் தங்களை மாற்றிக் கொள்ளாமல் உலா வருகிறார்களோ தெரியவில்லை. எனவே, குடியரசுத்தலைவர் நாடாளுமன்றம் இல்லாச் சூழலில் ஆட்சித்தலைமையின் கருத்திற்கு முதன்மை அளிக்க வேண்டா என்பதால் இப்போதைய தேர்தல் ஆணையர்களை நீக்க வேண்டும். கட்சித்தலைமைகளிடம் பரிந்துரை பெற்றுத் தக்கவாறான புதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தை மாற்றி யமைப்பதுதான் தேர்தல்கள் நடுவுநிலைமையுடன் நடப்பதற்கு வழிகோலும். எனவே,

தேர்தல் ஆணையர்களை நீக்குக!

புதிய ஆணையர்களை நியமித்திடுக!

கெடுவல்யான் எனப(து) அறிகதன் நெஞ்சம்

நடுஒரீஇ அல்ல செயின். (திருவள்ளுவர், திருக்குறள் 116)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை