தேர்தல் கணக்குகள் சரியே! விடைகள் தவறாகும். – இலக்குவனார் திருவள்ளுவன்
தேர்தல் கணக்குகள் சரியே!
விடைகள் தவறாகும்.
கட்சிகள் எண்ணிக்கை குறைய வேண்டும். அவற்றின் முதற் கட்டமாகக் கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டும் என்று பேரா.சி.இலக்குவனார் கூறியுள்ளார். அவர் சொன்னது, ஓரளவேனும் ஒத்துப்போகும் கொள்கைகளின் அடிப்படையில் கூட்டணி அமைப்பது. ஆனால், செல்வ வளத்தைப் பெருக்க அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையிலேயே கூட்டணி அமைவதால் நாட்டு நலனுக்கு எதிராக அமைகிறது.
தனித்துப் போட்டியிடுவதை விடக் கூட்டணி அமைப்பதால் சில வெற்றிகளையாவது சந்திக்கலாம்; தோல்வி யடைந்தாலும் கணிசமான வாக்குகளைப் பெறலாம் என்று கருதுவதாலேயே கட்சிகள் கூட்டணி அமைக்கின்றன.
வெற்றிதான் இலக்கு என்னும் பொழுது அதை நேர் வழியில் பெற வேண்டும்; ஒத்த கருத்து உள்ளவர்களுடன் இணைந்து பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தைத் தவற விட்டு விடுகின்றனர். இலக்கும் நேர்மையானதாக இருக்க வேண்டும். அதை அடையும் வழியும் நேர்மையானதாக இருக்க வேண்டும் என்பதே தமிழர் நெறி. எந்த வழியிலேனும் நினைத்ததை முடிக்க வேண்டும் என்பதே ஆரிய நெறி. மகாபாரதத்தில் கண்ணன் அதைத்தான் செயல்படுத்திக் காட்டியுள்ளான்.
அறநெறியிலிருந்து விலகி வாழும் அரசியல்வாதிகளிடம் அந்த முறையைத்தான் நாம் எதிர்பார்க்க முடியும். எனவே, கூட்டணி முறை குறித்து ஊடகங்களும் மக்களும் எதிராகக் கூறுவது தேவையற்றதே!
பாசக கூட்டணியில் என்ன தவறு? முதலில் அதிமுக பாசக -வுடன் கூட்டணி வைத்ததைப் பார்ப்போம்.
ஒவ்வொரு கட்சியின் கூட்டணிகள் குறித்துப் பிற கட்சிகள் அக்கட்சியின் பழைய நிலைப்பாடுகளையும் கட்சித்தலைவர்களின் பேச்சுக்களையும் சொல்லி எதிர்க்கின்றன. ஆனால் அவ்வாறு எதிர்த்துக் குறை கூறுபவர்களும் அவ்வாறு தடம் புரண்டவர்கள்தாம். அவ்வாறிருக்க அவர்களுக்குச் சொல்லும் தகுதி இல்லை. எனினும் மக்களின் மறதியைப் பயன்படுத்தித் தவறாகப் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, கட்சிகள் கூட்டணி அமைந்த வகை குறித்து அலசுவதை நிறுத்த வேண்டும். தமிழ், தமிழ் மக்கள், தமிழ்நாடு நலன் சார்ந்த கொள்கைகளை வலியுறுத்தி அவற்றின் அடிப்படையில் பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.
இன்று பாசகவை எதிர்க்கும் கட்சிகள் பலவும் நேற்று அதனுடன் கூட்டணி வைத்தவையே! அதிகாரச் சுவையிலும் ஆதாயம் அடைந்தவையே! நாளையும் கூட்டணி வைக்கலாம். எனவே, அதனுடன் கூட்டணி வைத்ததைக் காலத்தின் கட்டாயம் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்்
ஆனால், குசராத்தைப்பற்றிய பொய்யான படப்பிடிப்பை மக்களிடம் அவிழ்த்து விட்டு, ஏராளமான பொய்களின் மூலம் தேர்தலில் அறுவடை செய்த கட்சிதான் பாசக. கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதும் கூட்டணிக் கட்சிகளை அவமதித்துப் புறக்கணித்த கட்சிதான் அது.
அதனால் புறக்கணிக்கப்பட்டவர்களே மீண்டும் அதனுடன் எப்படித்தான் நட்பு பாராட்டுகிறார்களோ என்றுதான் தெரியவில்லை. மத வெறி, சமக்கிருத வெறியால் மட்டுமல்ல, தமிழக நலன்களுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படும் அதனைத் தமிழக மக்கள் வேரறுக்க எண்ணுகிறார்கள். அப்படி இருக்க கூட்டணிப் பேரத்தில் அமைச்சர் பதவியும் அடங்கும் என்பதுதான் வியப்பாக உள்ளது. பாசக மீளவும் அரசு அமைக்கும் என எப்படி நம்புகிறார்கள் என்றுதான் புரியவில்லை.
அதிமுகவைப் பொறுத்தவரை ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும். எனவே, சிறு குறையும் நேராமல் கவனமாக இருக்க வேண்டும். அ.ம.மு.க.விற்கு உள்ள வரவேற்பால் அது பெறும் வெற்றியும் வெற்றி பெறா இடங்களில் பெறும் வாக்குகளும் அதிமுகவிற்கு அடிக்கும் சாவு மணியாகும். எனவே, அதனை முறியடிப்பதற்காக எதனையும் பொருட்படுத்தாது பேரளவு கூட்டணி வைத்த எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர் செல்வமும் பாராட்டிற்குரியவர்களே!
அரசியலில் “இன்றைய நண்பன், நாளைய பகைவன், இன்றைய பகைவன் நாளைய நண்பன்” என்பதை மறந்து கண்டபடிப் பேசுகிறார்கள். என்றாலும் இதைப் பொருட்படுத்தாது எதிர்த்தவர்கள் இணைகிறார்கள். கருத்து மோதல் உறவாக மாறினால் தவறில்லை. ஆனால், ஆட்சியை அகற்ற ஊழல் பட்டியல் உட்பட பலவற்றைத் தெரிவித்த பா.ம.க. அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. பாசக ஆதரவுடன் அதிமுக வலிமையான பேரத்திற்குள் அதனைக் கட்டிப் போட்டு விட்டது. பா.ம.க. தி.மு.க.உடனும் பேரம் பேசியதைக் குற்றமாகக் கூறுகிறார்கள். வணிகம் என்று வந்தபின்னர் எது ஆதாயமானது எனப் பார்ப்பதுதானே இயற்கை. எனவே, அதனைக் குற்றமாகச் சொல்ல முடியாது.
நேற்றைய கூடா நட்பு. இன்றைய வாடா நட்பு. அதுதான் தி.மு.க.-பேராய(காங்.)கட்சிக் கூட்டணி. மத்திய மாநில ஆளுங்கட்சிகளின் எதிரான இக்கட்சியினருக்கு வேறு வழியில்லை.
ஈழத்தமிழர்களின் படுகொலைகளுக்கு நீதி கேட்ட ம.தி.மு.க. பேராயக் (காங்.)கட்சிக்கு மாற்றாகப் பாசகவைக் கடந்த தேர்தலில் ஆதரித்தது. எனினும் எப் பயனும் இல்லை. தான்தோன்றித்தனமான ஆணவப்போக்கில் அக்கட்சி நடந்து கொள்வதாக எண்ணியதாலும் மக்கள் மன்றங்களில் கட்சியின் குரல் முழங்காமல் கட்சி நடத்திப் பயனில்லை என்பதாலும் தி.மு.க.- பேராயக் (காங்.)கட்சிக் கூட்டணியில் ஐக்கியமாகி விட்டது. கடந்த முறை மக்கள் நலக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. ஒற்றைத் தொகுதியையே அல்லாடிப் பெறவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. எனவே, ம.தி.மு.க.வின் கூட்டணிச் சேர்க்கைக்கு அதனைக் குறைகூறிப்பயனில்லை. அந்த நிலைக்குத் தள்ளிய மக்களை வேண்டுமென்றால் குறை கூறலாம்.
இவ்வாறு கட்சிகளின் கடந்த கால நிலைப்பாடும் இன்றைய செயற்பாடும் முரணாகத்தான் உள்ளன. ஆனால், இதைப்பற்றி நிலை மாறிய கட்சிகளே குறை சொல்வதுதான் வேடிக்கை. இத்தகைய பேச்சை நிறுத்தி விட்டு இனி என்ன செய்யப் போகிறார்கள் என்று பரப்புரை மேற்கொள்வதே சிறந்தது. எத்தனை ஆண்டுகள் இந்தக் கூட்டணி இருக்கும் என்று ஒப்பந்தம் போட்டாலும் நலலதுதான். ஆனால், அடுத்த தேர்தலிலேயே தங்களை மாற்றிக்கொள்ளப்போகும் கட்சிகளால் அது முடியாது.
தோல்விகளைத் தவிர்க்கவும் தோல்வியைடந்தாலும் மதிப்பிற்குக் கேடு வராத வகையில் வாக்குகளைப் பெறவும் நாடாளுமன்றத்தில் குரல் ஒலிக்கவும் இடைத்தேர்தலில் மக்கள் செல்வாக்கைக் காட்டவும் தங்களுக்கு ஏற்றது எனக் கருதும் வகையில் கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன.
மக்கள் கட்சிகள் அடிப்படையில் வாக்காளர்களைத் தேர்ந்தெடுக்காமல் வேட்பாளர்களின் செயற்பாடுகள் அடிப்படையில் தக்க வேட்பாளர்களை மக்கள் மன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆதாயங்களுக்கேற்ப, ஆதரவையும் எதிர்ப்பையும் முடிவெடுக்கும் கட்சித் தலைமைகள், நாட்டு நலன் அடிப்படையில் ஒன்றிணையும். கட்சிகளின் கூட்டணிக் கணக்கில் எதிர்பார்க்கும் விடைகளை அளிக்காவிட்டால்தான் அடுத்தேனும் நல அரசியலை நாம் காண முடியும்.
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு. (திருவள்ளுவர், திருக்குறள் 791)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை -அகரமுதல
Leave a Reply