ஏ. எம். கே. நினைவாக (3)

(தோழர் தியாகு எழுதுகிறார் 18 : கரி படுத்தும் பாடு))

காக்கி மனப்போக்கு

பொன்னப்ப(நாடா)ர் நெல்லை மாவட்டத்துக்காரர். ஆயுள் சிறைத் தண்டனை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில்தான் சில ஆண்டுகள் கழித்து முடித்தார். பிறகு திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அடைக்கலமும் இருளாண்டியும் சிவலிங்கமும் மற்றவர்களும் அந்தச் சிறையிலிருந்து தப்பிச் சென்ற போது பொன்னப்ப (நாடா)ர் அங்குதான் இருந்தார்.

சில ஆண்டுகள் கழித்து அவர் ஏதோ சிறைக் குற்றத்துக்காகத் திருச்சியிலிருந்து கடலூருக்கு மாற்றப்பட்டார்.

திருச்சி சிறையிலிருந்து தப்பிச் சென்ற மற்றவர்களெல்லாம் பிடிபட்ட பிறகும் பிடிபடாமலிருந்தவர் அடைக்கலம். ஒரு முறை சந்தேக வழக்கில் சிக்கி, அடைக்கலம் வேறு பெயரில் விசாரணைக் கைதியாகக் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர்தான் அடைக்கலம் என்று அதிகாரிகளுக்குத் தெரிந்து, அவரைக் கொண்டு போய் எவ்வளவு அடி அடித்தும் அவர் தன்னை அடைக்கலம் என்று கடைசி வரை ஒப்புக் கொள்ளவே இல்லை.

என்றாலும், அவர்தான் அடைக்கலம் என்று உறுதி செய்து விட்டார்கள். அடியினால் மூளை கலங்கியதா அல்லது வெறும் நடிப்பு தானா என்று தெரியவில்லை. அடைக்கலம் மனநோயாளியாக்கப்பட்டு, தனிக் கொட்டடியில், நிருவாணமாய் அடைக்கப்பட்டார். திருச்சிக்குச் சிறை மாற்றம் செய்யப்பட்ட பிறகும் பித்தர் கொட்டடியில்தான் ஆடையின்றி அடைபட்டிருந்தார்.

கடலூர் சிறையில் அடைக்கலத்தைக் காட்டிக் கொடுத்ததே பொன்னப்ப நாடார்தான் என்று சிறைக் கைதிகளிடையே பரவலாகப் பேசப்பட்டது. அது மெய்யோ பொய்யோ … அதிகாரிகளுக்கு அவர் நெருக்கமானவராகவே இருந்தார். முன்கோபக்காரரான அவர் ஒரு தண்டனைக் காவலராகவும் இருந்தார்.

சிறை வாழ்க்கையில் பொன்னப்ப நாடார் என்ற பெயர் பொன் நாடாராகச் சுருங்கியிருந்தது. எல்லாரும் அவரை அப்படித்தான் அழைத்தனர்.

பொன் நாடாருக்கும் சமூகவுணர்வுக்கும் ரொம்ப தூரம். ஆனால் தன் சொந்த நலத்துக்காகச் சிறை அதிகாரிகளை எதிர்க்கத்தான் வேண்டும் என்றால் தயங்காமல் எதிர்ப்பார்; மூர்க்கமாகவும் முரட்டுத் தனமாகவும் எதிர்ப்பார். அவருடைய சொந்த நலம் நியாயமானதாகவோ சட்டப்படியானதாகவோதான் இருக்க வேண்டும் என்பதில்லை. சிறைக்குள் நடைபெறும் கஞ்சா வியாபாரம் போன்ற சமூக விரோதக் காரியங்கள் அனைத்திலும் அவருக்குப் பங்கு இருந்தது.

சிறை நிருவாகத்தை எதிர்த்துக் கைதிகள் போராடும் போதெல்லாம் பொன் நாடார் அதிகாரிகளின் பக்கம் நிற்பார்.

ஏ.எம்.கே. சிறையில் செய்து கொண்டிருந்த காரியங்கள் எதுவும் பொன் நாடாருக்குப் பிடிக்கவில்லை. இதனால் சிறை அமைதி கெடும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். சிறை அமைதியாக இருந்தால்தானே அவரைப் போன்றவர்கள் அமைதியாக ஞானப்பழம் – அதுதான் கஞ்சா – விற்கலாம். அமைதியாக மற்றக் கைதிகள் உணவைத் திருடிப் பங்கு போட்டுக் கொள்ளலாம். அமைதியாக எல்லா அயோக்கியத்தனங்களும் செய்யலாம்!

பொன் நாடாரும் இன்னும் ஓரிரு தண்டனைக் காவலர்களும் சேர்ந்து ஏ.எம்.கே.யிடம் சென்று மிரட்ட வேண்டும் என்று கூட ஒரு திட்டம் இருந்தது. பூனைக்கு யார் மணி கட்டுவது? என்ற கேள்விக்கு விடை காண முடியாததால் அந்தத் திட்டம் கடைசி வரை நிறைவேறவே இல்லை.

இந்த நிலையில் பொன் நாடாருக்கும் ஒரு சிறை அதிகாரிக்கும் கடுமையான பூசல் உருவாயிற்று. கஞ்சா வியாபாரம் தொடர்பான கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட விவகாரம்தான் என்று சொல்லப் பட்டது. பூசல் முற்றி ஒரு கட்டத்தில் பகிரங்கமாக வெடித்து விட்டது.
வாய்ச்சொல் முற்ற, சிறை அதிகாரி பொன் நாடாரைக் கெட்ட வார்த்தை சொல்லித் திட்ட, பதிலுக்கு நாடாரும் திட்ட, சண்டை வந்து விட்டது. சோதனையிடுவதன் பேரால் நாடார் மேல் அந்த அதிகாரி கைவைக்க, நாடார் கோபமாய்த் தட்டி விட்டார்.

யோவு, என்னை நீ சோதனை போட்ருவியாலே? நீ அவ்வளவு யோக்கியனாலே? நீ பண்ற திருட்டுத்தனம்லாம் எனக்குத் தெரியும்லே? காக்கிச் சட்ட போட்ருக்கியே, அதுக்குள்ளருக்க ஒடம்புல்லாம் கைதி சோறுதான்லே! ஒழுங்கா போய்டு… திரும்ப என்மேல கை வைத்தால் முறிச்சுப் போட்டுடுவேன். தெரிஞ்சுக்கலே!”

மீறிக் கை வைத்த அதிகாரியை பொன் நாடார் அடித்தே விட்டார்.
காவல் துறையானாலும் சிறைத் துறையானாலும், காக்கிச் சட்டைக்கென்று ஒரு மனப்போக்கு உண்டு. அவர்கள் மற்றவர்களைக் கூசாமல் அடிப்பார்கள். அதுவே இயல்பானது என்று கருதிக் கொள்வார்கள். அவர்களுக்கு அப்படி ஒரு பிறப்புரிமையே இருப்பது போலத்தான்! ஆனால் தங்கள் மீது மற்றவர்கள் கைவைத்து விட்டாலோ மிருக வெறி கொள்வார்கள். ஆத்திரம் கண்களை மறைக்க, எதுவும் செய்யத் துணிவார்கள். நியாய அநியாயம் எல்லாம் பார்க்க மாட்டார்கள்.

பொன் நாடாரிடம் அடி வாங்கிய சிறை அதிகாரி மற்ற அதிகாரிகளிடம் தகவல் சொன்ன போது, அவர்கள் கடுங்கோப முற்றார்கள். “கைதி நாய்க்கு இவ்வளவு திமிரா?” என்று பொருமினார்கள். கண்காணிப்பாளரின் அறையில் கூடிப் பேசினார்கள்.

இரவு பத்து மணி சுமாருக்கு பொன் நாடார் நெடுமாட த்திற்குக் கொண்டு வரப்பட்டார். கண்காணிப்பாளர் மட்டும் அவரது அறையில் இருந்தார். சிறை அலுவலர், துணை அலுவலர், உதவி அலுவலர்கள், முதன்மைத் தலைமைக் காவலர், சேமத் தலைமைக் காவலர் ஆகியோரோடு ஒருசில காவலர்களும் நெடுமாடத்தில் இருந்தார்கள்.

அவர்கள் பொன் நாடாரைச் சுற்றி நின்று மூர்க்கமாய் அடிக்கத் தொடங்கினார்கள். பொன் நாடார் போட்ட எதிர்ப்புக் கூச்சல் அவர்களை மேலும் ஆத்திரம் கொள்ளச் செய்தது. தடியால் அடித்தார்கள், கையால் குத்தினார்கள், காலால் உதைத்தார்கள், உருட்டிப் புரட்டி நொறுக்கினார்கள்.

தொடரும்
தரவு: தாழி மடல்