(தோழர் தியாகு எழுதுகிறார் 17.2: ஏ. எம். கே. நினைவாக (2) தொடர்ச்சி- தொடர்ச்சி)

கரி படுத்தும் பாடு

காலநிலை மாற்றம் வறுமைக்கும் அடிமை முறைக்கும் காரணமாகி மாந்த வாழ்வைச் சீர்குலைக்கக் கண்டோம். ஆனால் எந்த உயிரினத்தையும் அது விட்டு வைப்பதில்லை. காலநிலை மாற்றம் இப்படியே தொடருமானால் கடல்சார் உயிர்க் கோளங்கள் இந்த நூற்றாண்டு முடிவதற்குள் உலகளாவியச் சிதைவுக்குள்ளாகும் என்று பிரின்சுடன் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது. மூ ஊரிகள் (Dinosaurs) அழிந்த பிறகு ஏற்படும் பேரழிவாக இஃதமையும். புவி வெப்பமாகும் வேகத்தைக் கட்டுப்படுத்தத் தவறினால் புவிக் கோளத்தின் உயிரினங்களில் மூன்றிலொரு பங்கு 2050க்குள் துடைத்தழிக்கப்படும் என்று உயிரியல் பல்வகைமைக்கான மையம் கணித்துள்ளது.

இந்த அழிவுப் பயணத்தைத் தடுத்து நிறுத்த என்ன செய்யப் போகிறோம்? இதற்கு “நோய்முதல்” என்ன என்று தெரிந்தால்தான் அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் புரிய முடியும். அந்த நோய்க்குப் பெயர் ஓர் ஈரெழுத்துச் சொல்: கரி! ஆம், கார்பன்! அது படுத்தும் பாடுதான் இப்படி நம்மை அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளது.

மாந்தர்கள் தலையிடுமுன்பே புவி சூடாகத் தொடங்கி விட்டது. இலட்சம் ஆண்டு முன்பு தொடங்கிய கடைசிப் பனியூழியிலிருந்து சற்றொப்ப 25 ஆயிரம் ஆண்டுகள் முன்பு புவிக்கோளம் வெளிப்பட்டுக் கொண்டிருந்த போதே இந்தச் செயல்வழி தொடங்கி விட்டது. இயற்கையாக நிகழ்ந்து கொண்டிருந்த இந்த வெப்பமாதலின் வேகத்தை செயற்கையாக உயர்த்தியதுதான் மனிதர் செய்த குற்றம். இந்தக் குற்றத்தின் கருவிகள்: நிலக்கரி, கன்னெய்(பெற்றோல்), எரிவாயு! ஒரே சொல்லில்,! கரி!(கார்பன்)

தொழிற்புரட்சியின் வைகறைப் போதில் இந்தப் போ(க்)கிப் பண்டிகை தொடங்கிற்று. ஒரு நாள் பண்டிகை அன்று. பல்லாண்டுக் கணக்கில் தொடர்ந்து உலகின் வாழ்வைக் கரியடுப்பில் பொங்கல் வைத்து விட்டது முதலாண்மையம். ஈட்டம் (இலாபம்), மென்மேலும் ஈட்டமே (இலாபமே) அதன் வழிபாட்டுக்குரிய தெய்வம்! இரத்தக் காட்டேரியாக இருக்குமோ?

புதைபடிவ எரிபொருள் வகைகளைக் கட்டின்றிப் பயன்படுத்தியே ஆலைச் சக்கரங்கள் சுழன்றன, ஊர்திகள் ஓடின, இல்லங்கள் கதகதப்பாகின. காற்றுவெளியில் பெருமளவில் கரியீருயிரகை (carbon dioxide) முதலான பசுங்குடில் வாயுக்கள்  கலந்தன. மக்கள்தொகைப் பெருக்கம் ஒரு புறம், தொழிற்பெருக்கம் மறு புறம்! வளர்ச்சியே தாரக மந்திரமாகி விட்ட கடந்த 300 ஆண்டுகளில் இந்த உமிழ்வுகள் பன்மடங்கு பெருத்து விட்டன.

இது நமக்கே தெரியும் போது உலகத் தலைவர்களுக்குத் தெரியாமலிருக்குமா? அவர்களுக்கே தெரியா விட்டாலும் அறிவியலரும் சூழலியலரும் தெரியப்படுத்துவார்கள் அல்லவா? அதனால் ஏற்பட்ட பயன் யாது? பார்ப்போம்.  

தொடரும்

தரவு: தாழி மடல் 16