தோழர் தியாகு எழுதுகிறார் 3
(தோழர் தியாகு எழுதுகிறார் 2 தொடர்ச்சி)
தோழர் தியாகு எழுதுகிறார் 3
காமத்தின் உடலியலும் காதலின் குமுகியலும்
சில ஆண்டுகள் முன்னதாகச் சூனியர் விகடனில் ‘காதல் படிக்கட்டுகள்’ என்ற கட்டுரைத் தொடர் வெளிவந்தது. காதலைச் சிறப்பித்தும் அவரவர் காதல் பட்டறிவைச் சொல்லியும் எழுத்தாளர்கள் / கலைஞர்கள் / பாவலர்கள் / அரசியல் தலைவர்கள் எழுதினார்கள். குமுக நோக்கில் காதல் என்பதை மனத்திற்கொண்டு நானும் எழுதியிருந்தேன். இது காதல் பற்றிய நல்லதொரு தொகுப்பு. இது பல்வேறு காதல் பார்வைகளின் பூங்கொத்து.
இந்தப் பார்வைகளில் ஒன்று: காதல் என்பதெல்லாம் வெறும் சுரப்பு நீர்களின் ஆட்டமே தவிர வேறில்லை என்பதாக இருந்தது. இதுதான் காதல் பற்றிய ‘பகுத்தறிவுக் கொள்கை’ என்ற கருத்து சிலருக்குண்டு. இதன் பொருள்: காதல் வேட்கை என்பது வெறும் காம வேட்கையே தவிர வேறல்லவாம்! இந்த நோக்கில் காதல் விடுமையும் பாலியல் விடுமையும் ஒன்றுதானாம்!
பாலியல் விடுமையும் காதல் விடுமையும் ஒன்றல்ல; காதல் விடுமை குமுக நலனுக்குகந்தது என்று மார்க்குசியம் போற்றுகிறது. காதலினால் இன்பம் உண்டு, காதலிப்போர்க்கு மட்டுமல்ல, அவர்கள் வாழும் குமுகத்துக்கே இன்பமும் நன்மையும் உண்டு. நம் காலத்தில் சாதியொழிப்பில் காதலுக்குள்ள பங்கினைப் போற்றுகின்றோம்.
அதே போது பாலியல் விடுமையைக் குமுகத்துக்குப் பகை (சமூக விரோதம்) என்று மா இலெனின் சாடக் கண்டோம்.
பாலியல் விருப்பமும் வேட்கையும் இயற்கை சார்ந்தவை. குமுக அமைப்புகளைப் பொறுத்தவை அல்ல. ஆனால் இயற்கையிலிருந்து எழும் பாலியல் வேட்கை குமுகத் தன்மையால் செம்மையுறும் போதுதான் காதல் என்ற உயர்நிலை அடைகிறது. இதைத்தான் கிளரா செட்கினிடம் மா இலெனின் எடுத்துரைக்கிறார்.
இரண்டாவதாகப், பண்பாட்டு வாழ்வில் காதலுக்குரிய தனியிடத்தை மறுத்து அதனைப் பொருளியல் நலன்களின் வெளிப்பாடாகக் கருதும் கொச்சையான வகுப்புப் பார்வையும் (வருக்கப் பார்வை) மார்க்குசியத்தின் பெயரால் கூத்தடிக்கிறது.
“திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை, வருக்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்று தோழர் மாவோ கூறியதாகத் திருமண அழைப்பிதழிலேயே அச்சிட்டுத் தங்கள் மனத்தில் பட்டதையெல்லாம் மாவோ தலையில் கட்டும் போக்கும் உள்ளது. அவர் எங்கே எப்போது சொன்னார்? என்ற கேள்விக்கு விடை கிடைக்காது. முதலாண்மை அமைப்பில் எல்லா உறவுகளும் காசுபண உறவுகளாகச் சீரழிந்திருப்பது மெய். ஆனால் அதை மறுத்து வெல்வதுதான் காதல்நெறி. சாதிய அமைப்பில் சாதியை மறுக்கும் காதல் திருமணங்கள் போல், முதலாண்மை அமைப்பிலும் முதலாண்மை அமைப்பை மறுக்கும் காதல் திருமணங்களுக்கு உறுதியான இடமுண்டு.
சாதியமைப்பில் சாதித் திருமணங்களும் முதலாண்மை அமைப்பில் முதலாண்மைத் திருமணங்களும் தவிர்க்கவியலாதவை என்று சொல்வதற்கு மார்க்குசியம், பகுத்தறிவு, முற்போக்கு எல்லாம் எதற்கு?
தாகம் தணிக்கத் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும். பாலியல் வேட்கையும் தணிக்கப்படத்தான் வேண்டும். ஆனால் இதற்குக் குமுக வரையறைகள் உண்டு, கடைப்பிடிக்க வேண்டிய விழுமியங்கள் உண்டு. நீர் அருந்துவதையே எடுத்துக் கொள்வோம். இயல்பான சூழலில் இயல்பான மாந்தர் எவரும் சாக்கடையில் படுத்துக் கொண்டு குட்டையில் தேங்கிக் கிடக்கும் அழுக்கு நீரை அள்ளிப் பருகுவதுண்டா? (நம் கழக(டாசுமாக்) குடிமக்களை மறந்து விடுங்கள்.) அல்லது பலரும் கவ்விக் குடித்து எச்சில் பட்டுப் பிசுபிசுக்கும் கோப்பையில் தண்ணீர் குடிப்பதுண்டா? இந்தக் கேள்வியைக் கேட்டு விட்டு உவமைக்குள் அடைபடாமல் இலெனின் சொல்கிறார்:
“குமுகக் கூறுதான் அனைத்திலும் முதன்மையானது. நீர் பருகுதல் அவரவர்க்கே உரியது. ஆனால் காதல் ஈருயிர்கள் தொடர்பான ஒன்று; இதிலிருந்து ஒரு மூன்றாவது உயிரும் பிறக்கிறது. இவ்வாறு குமுக அக்கறைக்குரியதாகிறது. குமுகாயத்தின் பால் ஒரு கடமையும் பிறக்கிறது.”
இல்வாழ்க்கை பண்பும் பயனும் உடைத்தாவது இணையரின் நலனுக்கும் குமுக நலனுக்கும் தேவை. குமுகக் கடமையும் குமுகப் பொறுப்பும் இல்லாமல் எப்படியும் யாரோடும் காமப்பசியைத் தணித்துக் கொள்வதற்கான பாலியல் விடுமையைக் காதல் விடுமையாக மார்க்குசியர் ஒப்பார். மா இலெனின் இந்தச் செய்தியை கிளாரா செட்கினிடம் சாற்றக் கேளுங்கள்:
“ஒரு பொதுமையனாக (கம்யூனிசுட்டாக) எனக்கு இந்தக் கோப்பைத் தண்ணீர்க் கோட்பாட்டிடம் எள்முனையளவும் பரிவு கிடையாது. ‘காதலில் மனநிறைவு’ என்ற நளினமான பெயர் சூடி வந்தாலும் அதனை ஏற்பதற்கில்லை. எப்படிப் பார்த்தாலும், இந்தக் காதல் விடுதலை புதியதும் அன்று, பொதுமையும் அன்று. உங்களுக்கு நினைவிருக்கும், மீப்புனைவு இலக்கியத்தில் இது ‘இதயத்தின் விடுதலை’ என்று போதனை செய்யப்பட்டது. முதலாண்மை நடைமுறையில் தோல் விடுதலை ஆகி விட்டது. இன்றைக் காட்டிலும் அந்தக் காலத்தில் அது கூடுதல் திறமையுடன் போதனை செய்யப்பட்டது. நடைமுறை எப்படி என்று என்னால் கணிக்க இயலாது. நான் எனது குற்றாய்வின் வழி துறவு போதனை செய்ய நினைக்கவில்லை. இல்லவே இல்லை. பொதுமை என்பது துறவைக் கூட்டி வராது. அது வாழ்க்கையின் மகிழ்வை, வாழ்க்கையின் வலுவைக் கூட்டி வரும். மனநிறைவான காதல் வாழ்வு அதற்குத் துணை செய்யும். ஆனால் பாலியல் செய்திகளில் இப்போது பரவலாகக் காணப்படும் மீத்துடிப்பானது வாழ்க்கைக்கு மகிழ்வும் வலிவும் தராமல், அவற்றைப் பறித்துக் கொள்ளவே செய்யும் என்பதே என் கருத்து. புரட்சிக் காலத்தில் இது மோசம், படுமோசம்.”
காதலைப் போற்றுவதில் தடையில்லை! காதலில் காமத்துக்குரிய இடத்தை அறிந்தேற்பதிலும் தடையில்லை. அதனைக் குமுகியலற்ற வெறும் உடலியல் தேவையாகக் கருதுவதுதான் கேடு! இளைஞர்களின் வாழ்க்கையில் எல்லா வகையிலும் மகிழ்வு நிறைந்திருக்க வேண்டும், பாலியல் வகையிலும் கூட! இலெனின் சொல்லி விட்டாரே, நாம் வாழ்க்கையை வெறுத்த துறவிகள் அல்லோம். ஆனால்…. நாளை பார்ப்போம்.
தரவு: தியாகுவின் தாழி மடல் 3
Leave a Reply