(தோழர் தியாகு எழுதுகிறார் 3 தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார் 4

இளமையின் தேவை: துறவா? துய்ப்பு வெறியா?  

இளையோரிடம் வளர்ந்து வரும் கோப்பைத் தண்ணீர்க் கோட்பாடும்,  பாலியல் விடுமை ஆர்வமும் குறித்து கிளாரா செட்கினுடன் உரையாடும் மா இலெனின் இந்தப் போக்குகளை மார்க்குசிய நோக்கில் குற்றாய்வு செய்யக் கண்டோம்.

‘இலெனினுக்கு வயதாகி விட்டது, அதனால்தான் இப்படிச் சிந்திக்கிறார்’ என்று கிளாரா எண்ணி விட மாட்டார் என்பதை இலெனின் அறிந்தவரே என்றாலும் “நான் வாழ்க்கையை வெறுத்து விட்ட துறவி அல்ல” என்று அறிவித்துக் கொள்கிறார். இளம் வயதினரின் நலனிலும் குமுக நலனிலும் புரட்சியின் நலனிலும் அக்கறை கொண்டு விளக்குகிறார்:

“தோழரே, கேளுங்கள்! குறிப்பாகச் சொன்னால் இளம் வயதினருக்கு வாழ்க்கையின் மகிழ்ச்சியும், ஆற்றலும் தேவை. நலம்பயக்கும் விளையாட்டு, நீச்சல், ஓட்டம், நடை… ஒவ்வொரு வகை உடற்பயிற்சியும் தேவை. பன்முக அறிவுத் துடிப்பு தேவை, கற்றல், படித்தல், ஆராய்தல், இயன்ற வரை பொதுவாக இருக்க வேண்டும். அது பாலியல் சிக்கல்கள் குறித்தும், “முழு அளவுக்கு வாழ்ந்து பார்ப்பது” என்பார்களே அது குறித்தும் நிலைபேறுடைய கோட்பாடுகளையும் உரையாடல்களையும் இளையோர்க்கு வழங்கும். நலமிகு உடல்கள்! நலமிகு உள்ளங்கள்! பிக்குவாகவும் இருக்கத் தேவையில்லை இயான் துவானாகவும்(John Duane) இருக்கத் தேவையில்லை. இரண்டுக்கும் இடையில் செருமானிய பிலித்தியன்களின் போக்கும் தேவையில்லை.” 

பிக்கு என்றால் புரிகிறது. துறவியாக இருக்க வேண்டியதில்லை என்கிறார். தான் இயூவான்(Don Juan) என்பது பெண் வேட்டைக்கான இசுபானியத் தொன்மம். தீராத விளையாட்டுப் பிள்ளை! ‘பிளேபாய்’! [பிலித்தியர்கள் என்ற சொல்லை இலெனின் எதிர்மறைக் குறிப்பாக ஆள்வது இங்கே மட்டுமன்று. விவிலியத்தில் பாலத்தீனர்களை இப்படிக் குறிப்பதாகத் தெரிகிறது. அவர்கள் ஒருபுறம் இன்ப நாட்டம் கொண்டவர்களாகவும் மறுபுறம் அறிவுக்கூர்மை அற்றவர்களாகவும் இருந்ததாக ஒரு கருத்து நிலவிற்று. இனக் காழ்ப்பிப்னால் எழுந்த தப்பெண்ணமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்களைக் குறிக்கும் சொல்லாக இது ஐரோப்பிய மொழிகளில் நுழைந்து விட்டது. இக்காலத்தில் இந்தச் சொல்லை யாரும் இவ்வாறு ஆள்வதில்லை. ஆனால் பழைய இலக்கியத்தில் இச்சொல் வரும் போதெல்லாம் மொழி பெயர்ப்பாளர்களுக்குத் தலைவலிதான்! ஒருசிலர் பிலித்தியர்கள் என்பதை அற்பவாதிகள் என்று தமிழாக்கம் செய்வதுண்டு. மரமண்டைகள் என்றும் சொல்லலாம். நான் பிலித்தியர்கள் என்றே சொல்லி விடுகிறேன். இப்போது வழக்கொழிந்து விட்டது என்பதால் பாலத்தீனர்கள் யாரும் இந்தச் சொல்லாட்சிக்கு மறுப்புச் சொல்லவில்லை எனத் தோன்றுகிறது.] 

கிளாராவிடம் எதிர்மறை எடுத்துக்காட்டாக இளம் தோழர் ஒருவரை (பெயர் குறிப்பிடாமல்) இலெனின் சுட்டுகின்றார்:

“அந்த இளம் தோழனை ____ உங்களுக்குத் தெரியும் அல்லவா? அருமையான இளைஞன்! படுசுட்டியான திறமைசாலி! ஆனால் அவனால் நன்மை ஏதும் விளையப் போவதில்லை என்பது என் அச்சம். இன்று ஒரு காதல், நாளை ஒரு காதல் என்று மாற்றிக் கொண்டே செல்கிறான். இஃது அரசியல் போராட்டத்துக்கு சரிவராது. புரட்சிக்குச் சரிவராது.”

பெண்களைப் பற்றியும் பேசுகிறார்:

“சொந்த முறையிலான காதல் நாட்டங்களை அரசியலோடு குழப்பிக் கொள்ளும் பெண்களை நம்பி நிற்க முடியுமா? போராட்டத்தில் உறுதியாகத் தாக்குப் பிடிப்பார்களா? என்னால் உறுதியளிக்க முடியாது. ஒவ்வொரு பெண்ணையும் துரத்திக் கொண்டும், ஒவ்வொரு  பெண்ணிடமும் சிக்கிக் கொண்டும் தத்தளிக்கும் ஆண்களும் கூட இப்படித்தான்! இல்லை, இல்லை, புரட்சிக்கு இந்தப் போக்கு ஒத்துவராது.”

இதைச் சொல்லி விட்டு இலெனின் துள்ளி எழுந்தார், மேசையை ஓங்கித் தட்டினார், சிறிது நேரம் அறையை அளப்பது போல் நடந்தார். புரட்சிக்கு என்ன தேவை? யார் தேவை? என்பதை அழுத்தந்திருத்தமாகச் சொல்லத் தொடங்கினார். கிளாரா அந்தக் காட்சியையும் சொற்களையும் நினைவுக் குறிப்புகளாகப் பதிகிறார்.

(நாளை பார்ப்போம்)

தரவு: தியாகுவின் தாழி மடல் 4