வைகை அனீசிற்குக் கண்ணீர் அஞ்சலி : vaikaianeesirku_kanneeranjali02

அன்னையிடம் சென்றாயோ நண்பா!

  அகரமுதல இதழின் படைப்பாளரும் செய்தியாளரும், தொல்லியல், மாந்தரியல், கல்வெட்டியல், முதலான துறைகளின் ஆய்வாளரும் நூலாசிரியரும் கட்டுரையாளரும், தொலைக்காட்சிகள், இதழ்கள் ஆகியவற்றின் செய்தியாளருமான வைகை அனீசு (அகவை 44) ஐப்பசி 20, 2046 / நவ.06 வெள்ளியன்று அகால மரணமுற்றார் என்னும் வருத்தமான செய்தியைத் தெரிவிக்கின்றோம்.

  நேற்று (ஐப்பசி 21, 2046 / நவ.07) யாமம் / இன்று (ஐப்பசி 22, 2046 / நவ.08) வைகறை 1.00 மணியளவில் முனைவர் ஆதிரை முல்லையின் முகநூல் வழியாகச் செய்தி யறிந்ததில் இருந்து வேதனையும் அவர் இவராக இருக்கக்கூடாது என்ற எண்ணமும் ஏற்பட்டது. இன்று காலை முனைவர் ஆதிரை முல்லை அவர்களுடன் பேசி உண்மை யறிந்து வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டோம். கவிஞர் கவிவாணன் தெரிவித்ததாகக் கூறியதால், வத்தலக்குண்டு ஊரிலுள்ள அவருடன் தொலைபேசியில் பேசி விவரம் அறிந்தேன். வடுகப்பட்டிக்கு (மாவட்ட வருவாய் அலுவலர் நடத்திய கூட்டத்திற்கு)ச் செய்தி திரட்டச் சென்றவர் கூட்டம் முடிந்த பின்னர் நண்பர்களுடன் தேநீர்க்கடையில் அமர்ந்து தேநீர் அருந்தி அக்குவளையைக் கீழே வைக்கும் முன்னரே வலிப்பு மாதிரி வந்து மாரடைப்பு ஏற்பட்டதாக வருத்தமான செய்தியைத் தெரிவித்தார். அவரை இழந்து தவிக்கும் அவர் மனைவி ஏழு அகவை மகன்,   ஐந்து அகவை மகள் ஆகியோருக்கு நம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

  வைகை அனீசு, மலைவேடர்கள், விடுதலைப்போராட்ட வீரர்கள்பற்றிய ஆய்வுக் கட்டுரைகள், நாணயம், நிலக்கிழார்/சமீன்தார முறை, இசுலாம் முதலான சமய வழக்கங்கள், சடங்குகள், திருவிழாக்கள், முதலானவைபற்றிய கட்டுரைகள், வரலாற்றுத் துணுக்குகள் எனப் பலவகையிலும் தன் முத்திரை பதித்தவர்.

  தீக்கதிர்-வண்ணக்கதிர்-வார இதழ், குமுதம் தீராநதி மாத இதழ், உயிர் எழுத்து மாத இதழ், காக்கைச்சிறகினிலே மாத இதழ், கிளப்சு டுடே மாத இதழ், புதிய தென்றல் மாத இதழ், மக்கள் போராளி மாத இதழ், பறக்கும் படை மாத இதழ், உரத்த சிந்தனை மாத இதழ், தாமரை மாத இதழ், வளரும் தமிழகம் மாத இதழ், கல்வெட்டு பேசுகிறது மாத இதழ், உங்கள் நூலகம் மாத இதழ், பசுமை உலகம் மாத இதழ், சிவஒளி மாத இதழ், ஃச்மார்ட் மதுரை மாத இதழ், இனிய உதயம் மாத இதழ், மங்கையர் மலர் மாதமிருமுறை இதழ், தளம் காலாண்டு இதழ், நாளிதழ்கள் எனப் பலவற்றிலும் இவரது படைப்புகளும் செய்திகளும் வெளிவந்துள்ளன.

  அகரமுதல மின்னிதழ் தவிரக் கீற்று, சிறகு, தூது, திண்ணை முதலான இணைய இதழ்களிலும் இவரது படைப்புகள் வந்துள்ளன.

  அகரமுதல இதழில் இவரது படைப்புகள், செய்திகளுக்கெனவே குறிப்பிட்ட படிப்போர் வட்டம் உண்டு. அகரமுதல இதழில் வருவன, முகநூல், நட்பு வளையம், சுட்டுரை(டுவீட்டர்) முதலானவற்றிலும் பல்வேறு குழுக்களிடையேயும் பகிரப்படும். முனைவர் இராசம் அம்மையார் முதலான வெளிநாட்டுத் தமிழறிஞர்களும் இவரது கட்டுரைபற்றிய பாராட்டை வெளிப்படுத்தியுள்ளனர். (இவ்வாறு பலர் உள்ளமையால் எடுத்துக்காட்டிற்காக ஒருவரை மட்டும் குறிப்பிட்டேன்.) ஆனால், இவ்வாறு பிற தளங்களில் பகிர்வதற்கு முன்னரே, அகரமுதல தளத்தில் இவரது படைப்புகளை நேரடியாகப் படிப்போர் உள்ளமை இவரது படைப்பின் சிறப்பாகும்.

  வைகை அனிசு முகநூல் மூலம் அறிமுகமாகித் தொலைபேசி வழியாக ஐயங்கள் கேட்டு நண்பரானார். அவரது படைப்புகள், செய்திகள்வந்த பின்னரே, அவர் 20 ஆண்டுகளாக ஊடகத்தில் பணியாற்றுவதை அறிந்தேன்.

  சில திங்களுக்கு முன்னர் அவர், நாகப்பட்டினம் முதலான   நகரங்களுக்குச் சென்று, தகவல் திரட்டி தொல்லியல், நிலவுடைமை குறித்து நூலாக வெளியிடும் வண்ணம் தொடர் கட்டுரைகள் தருவதாகக் கூறினார். அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்று, “அதுவரை செல்லும் பகுதிகளுக்குரிய வேறு செய்திகளை அனுப்புங்கள்; நூலில் இடம் பெறப்போகும் சில செய்திகளையும் அனுப்பினால் நூலுக்கு அறிமுகமாகும்” என்றேன். அதனால், நாகை, புதுச்சேரி தொடர்பான செய்திகளையும் அனுப்பினார். இத்தகைய தொகுப்பு நூல் ஒன்றினை முனைவர் ஆதிரை முல்லைக்கு அணிந்துரைக்காக அனுப்பியுள்ளார். அவர் அதனை எழுதி முடிக்கும் முன்னரே காலன் இவர் வாழ்வை முடித்து விட்டான்.

  தொடக்கத்தில் இவரது செய்திகள் வந்த பொழுது நண்பர் ஒருவர், “தேனி மாவட்டச் செய்திகளாக வெளியிடுகிறீர்களே” என்றார். “ஊழல் பற்றி இவர் எழுதும் தேனி மாவட்டம் தொடர்பான செய்திகள், நாடெங்கும் நடைபெறும் நிகழ்வுகள்தாம். எனவே, அதைப்பொதுவாகப் பார்க்க வேண்டும்” என்றேன். உண்மையிலேயே இவர் வெளிப்படுத்திய அவலங்கள் நாடெங்கும் நடைபெறுவனதான். அவற்றைத் துணிவாக எழுதி அனுப்புவார். இத்துணிவையும் பலர் பாராட்டியுள்ளனர்.

 ஊழல் செய்திகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களையும் தொடர்பான துறை அதிகாரிகளையும் அகரமுதல இதழ்சார்பில் சென்று சந்தித்துத் தொடர் நடவடிவடிக்கை எடுக்குமாறும் தனித்தனியே அகரமுதல இதழ் சார்பில் மடல்கள் அனுப்புவதாகவும் கூறினேன். “சரி” என்றார். அதற்குள் அவரது அன்னையார் (ஓய்வு பெற்ற ஆசிரியர் மும்தாசு பேகம்) (ஆடி 31, 2046 / ஆகத்து 16, 2015) காலமானதால் சற்று நிறுத்தி வைத்தோம்.

 இவருடைய ஒளிப்படத்தைக் கேட்ட பொழுதெல்லாம் அனுப்புவதாகக் கூறி அனுப்பவில்லை. “படம் எடுத்தால் வாணாள் குறையும் என்ற இசுலாமியர் நம்பிக்கையால் அனுப்பவில்லையா” என்றதற்கு “ஆமாம்” என்றார். “நீங்கள் பிறரைப் படம் எடுக்கின்றீர்களே! அவர்களின் வாணாள் குறையாதா?” என்றேன். “நான் இதுவரை அவ்வாறு எண்ணவில்லை. என் படத்தைப் பின்னர் அனுப்புகின்றேன்” என்றார். அகரமுதல இதழ் சார்பில் அடையாள அட்டை அளிப்பதற்காக அவரது படத்தைக் கேட்க இருந்த சூழலில் அவர் படமான செய்தி அதிர்ச்சி யளிக்கிறது.

  இவர் மறைவு ஆறாத்துயரம் அளிப்பதுபோல், மற்றொரு மாறா வடுவும் உள்ளத்தில் பதிந்து விட்டது. இவரது மன்பதை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளுக்காக இவருக்கு வாரந்தோறும் விருது தரும் மின்னிதழ் ஒன்றுக்கு இவருக்கு விருது அளிக்குமாறு தெரிவித்திருந்தேன். மேல் விவரம் கேட்பதற்காக இவருடன் தொலைபேசி வழி தொடர்பு கொண்டதாகவும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர். தொடர் நடவடிக்கையின்றி நின்று விட்டது. அதுபோல் உறவினரான கவிஞர் ஒருவர் வீடு தேடிவந்து, மகனின் திருமண விழாவை முன்னிட்டு இலக்கிய நிகழ்ச்சி நடத்துவதாகவும் இருபதின்மருக்குக் குறையாமல் விருதுகள் வழங்க உள்ளதாகவும் எனக்கும் வழங்க உள்ளதாகவும் ஐவரைத் தெரிந்தெடுத்துச்சொல்ல வேண்டுமென்றும் வேண்டினார்.

 “நமக்கு நாமே விருது வழங்கிக் கொள்ள வேண்டா. எனவே, எனக்கு விருது வேண்டா. ஆனால், நீங்கள் விளம்பரத்திற்காக விருது வழங்காமல் உண்மையிலேயே விருதிற்குரியவர்களை மதித்து வழங்குவதாக இருந்தால் தெரிவிக்கின்றேன்” என்றேன்; “வெளியூர்க்காரர்களுக்குப் பயணச் செலவும் தங்குமிட ஏற்பாடும் தரவேண்டும்” என்றேன். அதற்கும் ஒத்துக் கொண்டார். அதன்படி ஐவர் பெயரைக் குறிப்பிட்டு அவர் கைப்பட எழுதியும் வாங்கிக் கொண்டேன். அந்த ஐவரில் நல்லாராய்ச்சியாளர் வைகை அனீசும் ஒருவர். ஆனால், கவிநண்பர், யாருடைய அறிவுரையாலோ அரசியல் முகம் கொண்டவர்களுக்கு விருதுகள் வழங்கி அந்த அழைப்பிதழைக்கூட எனக்கு அனுப்பவில்லை.(பின்னர் அனுப்பியதாக எண்ணியதாகவும் விடுபட்டதற்கு வருந்துவதாகவும் அவர் சொன்னது தனிக்கதை.) எனவே, இந்த விருதையும் அவருக்கு வழங்க இயலவில்லை.

வரும் ஆண்டு அகரமுதல இதழ்சார்பில் விழா எடுத்துச் சிலருக்கு விருது வழங்க எண்ணமிட்டுள்ளோம். அந்தச்சிலருள் ஒருவர் வைகை அனிசு எனக் கூறாமல் புரிந்திருக்கும். தான் விருதுகளுக்கு அப்பாற்பட்டவன் எனச் சொல்லாமல் சொல்லி நாம் அவரைப் பாராட்டும் வாய்ப்பை நல்காமல் நீங்கி விட்டாரே!

வைகை அனீசு நான் நேரில் சந்தித்திராத நண்பர்.

புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா

னட்பாங் கிழமை தரும். (திருவள்ளுவர், திருக்குறள் 785)

என்னும்பொழுது நேரில் சந்தித்தால்தான் நட்பா, என்ன?

 முறைகேடுகளால் ஏற்படும் அவலங்கள் நீங்கி

மக்கள், வேண்டியவற்றை எளிதாக எய்த வேண்டும்

என்று விரும்பிய நற்செய்தியாளர்

வைகை அனிசு புகழ் ஓங்குக!

வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை

(அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ.08, 2015)

AkaramuthalaHeader