தோழர்தியாகு எழுதுகிறார் 207 : தமிழ்மணக்கும்காலுடுவெல் இல்லம்
(தோழர்தியாகுஎழுதுகிறார் 206 : வேண்டும்சித்திரவதைத்தடுப்புச்சட்டம் 2/2-தொடர்ச்சி)
தமிழ் மணக்கும் காலுடுவெல் இல்லம்
அயல்நாட்டுப் பயணங்களில் வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பார்க்கப் பெரிதும் விருப்பப்படுவேன். உள்நாட்டிலும் பார்க்க வேண்டியவை பலவும் இருப்பதைக் கால்ந்தாழ்ந்துதான் உணர்ந்தேன். ஆனால் அயல்நாடோ உள்நாடோ அதற்காக யாரையும் தொல்லைப்படுத்தக் கூடாது என்று கவனமாக இருப்பேன். நமக்குள்ள ஆர்வத்தில் கொஞ்சமாவது அவர்களுக்கும் இருக்க வேண்டும். இன்றேல் ஒன்றும் செய்ய முடியாது.
அமெரிக்கப் பயணத்தில் நான் சென்று பார்த்தவைபற்றி ஒரு நூலே எழுதலாம், அவ்வளவு செய்திகள் உண்டு. சிக்காகோவில் மே நாள் நினைவுச் சின்னத்தைத் தேடி அலைந்தது பற்றியும், இரண்டாவது முறை அங்கு சென்ற போது சின்னம் எழும்பியிருந்தது பற்றியும் முன்பே எழுதியுள்ளேன். அந்த எழுத்துகளைத் தேடியெடுத்து விரைவில் உங்களோடு பகிர்வேன்.
ஐரோப்பியப் பயணத்தில் என்னோடு நாடு நாடாக அலைந்து என் ஆர்வத்தை முழுமையாகப் பகிர்ந்து கொண்டவர் “சர்வே அண்ணா”. (இப்படித்தான் மற்றவர்கள் அவரை அழைப்பார்கள். நான் அவருக்கு எப்போதும் “தியாகண்ணா”தான்.) நள்ளிரவில் சுழிகுறைவில்(minus)குளிரில் இடிபட்ட பெருலின் சுவர் பார்க்கச் சென்றது என்றும் நெஞ்சு விட்டகலாது.
செர்மன் நாட்டின் (இ)ரைன்லாந்தில் திரையர் என்ற ஊரில் காரல் மார்க்குசு பிறந்தார் என்று படித்திருப்போம். மார்க்குசு பிறந்த இல்லத்தைப் பார்க்க சர்வே என்னை அழைத்துப் போய் “ஆசை தீரப் பார்த்துப் பேசி விட்டு வாருங்கள்” என்று அனுப்பிய போதும் –
இலண்டனில் மார்க்குசு சிந்திப்பதை நிறுத்தி விட்டு நிரந்தரமாக உறங்கும் ஐகேட்டு கல்லறைக்கு யமுனா இராசேந்திரன் என்னை அழைத்துப் போய், “தோழர், இதோ மார்க்குசு, போய் கொஞ்சி விட்டு வாருங்கள்” என்று அனுப்பி விட்டுப் படங்களாகச் சுட்டுத் தள்ளிய போதும் –
ஏற்பட்ட அதே ஆவல் கலந்த துடிப்போடு இராபருட்டு காலுடுவெல் வாழ்ந்த ஊரையும் இல்லத்தையும் காண அருள்திரு கிப்புசனோடு விரைந்து கொண்டிருந்தேன். திசையன்விளை ஊருக்குள் போவோமா? புறவழிச் சாலையில் போவோமா? காலுடுவெல் இடையன்குடியில் வாழ்ந்த போது அவ்வப்போது போய் வந்த ஊர்கள் திசையன்விளையும் உவரியும் என்று படித்துள்ளேன். ஆனால் இப்போது திசையன்விளைக்குள் போனால் நேரமாகி விடும் என்பதால் வண்டியைப் புறவழிச் சாலையில் விடச் சொன்னோம். இடையன்குடி பார்த்து விட்டு உவரிக்குப் போகலாம் என்றார் கிப்புசன்.
இடையன்குடி என்ற பெயர்ப் பலகை வந்து விட்டது. நெருங்கி விட்டோம். ஒரு பெரிய வரவேற்பு வளைவு –
“திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த
தமிழறிஞர் காலுடுவெல் வாழ்ந்த இல்லம்”
என்று அறிவிக்கிறது.
அதைக் கடந்து போனால் காலுடுவெல் வாழ்ந்த இல்லம். நடுக் கூடத்தில் அழகான காலுடுவெல் சிலை. அருள்திரு கிப்புசன், நெல்லை பீட்டர் ஆகியோருடன் சிலை அருகில் நின்று படம் எடுத்துக் கொண்டேன்.
அண்ணா முதல்வராக இருந்த போது 1968 உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டிகங காலுடுவெல்லுக்குச் சென்னை கடற்கரையில் சிலை வைக்கப்பட்டது. பிறகு கலைஞர் முதல்வராக இருந்த போது 2011இல்தான் காலுடுவெல் இல்லம் நினைவுச் சின்னம் ஆக்கப்பட்டுள்ளது.
கலைஞர் எப்போதுமே வரலாற்று நினைவுச் சின்னங்களில் ஆர்வம் உள்ளவர். குமரிக் கடலில் வள்ளுவருக்கு வானுயரச் சிலை அமைத்த போது அதை வரவேற்றுத் தமிழ்த் தேசம் இதழில் பேராசிரியர் மருதமுத்து எழுதிய கட்டுரையை வெளியிட்டோம். பூம்புகாரில் சிலப்பதிகாரக் கலைக் கூடம், சென்னையில் வள்ளுவர் கோட்டம் முதலான நினைவுச் சின்னங்கள் வெறும் நினைவூட்டும் சின்னங்கள் மட்டுமல்ல. அவை தமிழர்களுக்கு வரலாற்று உணர்வும் வரலாற்று அறிவும் ஊட்ட வல்லவை. கலைஞர் என்ற அடைமொழிக்குப் பொருத்தமான பணிகள் இவை. காலுடுவெல் நினைவில்லம் அமைத்தமைக்காகவும் தமிழ் மாணவர்களின், வரலாற்று மாணவர்களின் நன்றிக்கு உரியவர் ஆகிறார் கலைஞர். கலைஞர் நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்த நேரத்தில் கலைஞர் அமைத்த நினைவுச் சின்னங்களையும் அவை காட்டும் வரலாற்றையும் இலக்கியத்தையும் தொகுத்து எழுதினால் நன்றாக இருக்கும். யார்?
சிலை அமைந்துள்ள கூடத்தில் பார்க்கவும் படிக்கவும் கண்ணாடியிட்ட பல அருஞ்செய்திகள் – ஒவ்வொன்றாக நின்று படித்தேன். காலுடுவெல் குடும்ப (FAMILY TREE) வரைபடம் குறிப்பிடத்தக்கது. எலிசா பற்றிய செய்திகள் அவர் காலுடுவெல் பணிகளுக்குத் துணை நின்றது தவிர தாமாகவே செய்த பணிகளையும் காட்டுகிறது.
‘காலுடுவெல் ஐயர்’ உடுத்திய கருப்பு அங்கியை ஒரு கண்ணாடிப் பேழைக்குள் பாதுகாத்துத் தொங்க விட்டுள்ளனர். உயரமான காலுடுவெல் அந்த அங்கி உடுத்தி எவ்வளவு கம்பீரமாகக் காட்சியளித்திருப்பார் என்று மனக் கண்ணால் காணலாம்.
காலுடுவெல்லின் புத்தக அறை, அவர் அமர்ந்து படித்த நாற்காலி ஒவ்வொன்றையும் எனக்குக் காட்டி விளக்கமும் தந்தார் அருள்திரு கிப்புசன். அங்கிருந்த நினைவகப் பணியாளரும் எல்லா வகையிலும் எங்களுக்கு உதவினார்.
இல்லத்தைப் பார்த்து முடித்த பின் காலுடுவெல் கட்டிய அந்தத் தூயத் திரித்துவ தேவாலயத்துக்குச்(Holy Trinity Church) சென்றோம். அது பற்றி நான் முன்பே நிறைய படித்துள்ளேன், படமாகவும் பார்த்துள்ளேன். இப்போது நேரில் பார்க்கும் வாய்ப்பு. தேவாலயத்க்தின் பலிபீடத்தில்தான் காலுடுவெல் இறந்த பின் புதைக்கப்பட்டார். அருகிலேயே எலிசாவும் புதைக்கப்பட்டுள்ளார்.
சுற்றிப் பார்த்து முடித்து இளைப்பாறித் தேநீர் அருந்திய பின் “இன்னும் ஏதும் பார்க்க வேண்டுமா?” என்று கேட்டேன். “இருக்கிறது, உங்களால் ஏற முடியுமா?” என்று கிப்புசன் கேட்க, “ஏறலாமே?” என்று விடையிறுத்தேன்.
ஏற்றம் என்றாலும் செங்குத்தான ஏற்றம்! என் அகவைக்குக் கடினம்தான்! எப்படியோ ஏறி விட்டேன். யார் இடையன்குடி சென்றாலும் இந்த ஏற்றம் இல்லையேல் பயணம் முழுமை பெறாது. நாளை சொல்கிறேன்.
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 234
Leave a Reply