(தோழர்தியாகு எழுதுகிறார் 207 : தமிழ்மணக்கும் காலுடுவெல் இல்லம் – தொடர்ச்சி)

இடையன்குடி – காலுடுவெல்லுக்கு முன்

இராபருட்டு காலுடுவெல் குறித்தும் அவரது மொழியியல் ஆய்வு, அதன் முடிவுகள் குறித்தும் அண்மைக் காலத்தில்தான் நிறைய படித்தேன். அரசியல் வகுப்புக்காகப் படித்தமையால் சற்று ஆழ்ந்தே படித்தேன் எனலாம்.

மொழிநூல் அறிஞர் காலுடுவெல் ‘திராவிடம்’ என்ற சொல்லை ஆண்டார் என்ற ஒரே காரணத்துக்காக  உடனடி அரசியல் தேவைகளுக்காக அவரைக் கொச்சைப்படுத்தும் போக்குகள் தலைதூக்கியிருக்கும் இத்தருணத்தில் காலுடுவெல்லை முறையாக அறிந்து கொள்வதும் அறியச் செய்வதும் தேவை எனக் கருதுகிறேன்.

அவர் தமிழியல் ஆய்வாளராக மட்டும் இருந்து விடாமல், தமிழ் மண்ணில் வாழ்ந்து, தமிழ் மக்களோடு அரை நூற்றாண்டுக்கு மேல் ஊடாடிப் பணி செய்தவர் என்ற உண்மை அவரை எல்லாக் கோணங்களிலிருந்தும் பயிலும் ஆவலைத் தூண்டியது. இது அறிவுசார் ஈடுபாட்டுடன் ஓர் உணர்வுசார் நேசமும் வளரக் காரணமாயிற்று.

இராபருட்டு காலுடுவெல் செய்த ஆய்வுகளும், வாழ்ந்த வாழ்க்கையும், ஆற்றிய பணிகளும் சில விடைகள் கண்ட போதே பல வினாக்களையும் விட்டுச் சென்றன. அவர் வாழ்ந்த இடையன்குடிக்குப் புறப்படும் போதே, அந்த ஊர் பற்றிய முரண்பட்ட செய்திகளை அறிந்துதான் வைத்திருந்தேன். இடையன்குடி என்ற ஊர்ப் பெயர் பற்றிப் பலரும் இப்படிப் பலவாறு எழுதியிருக்கின்றனர்:

1)      இடையன்குடி ஆதியில் இடையர்களின் குடியிருப்பாக இருந்தது. சமயப் பரப்புப் பணிக்காக அங்கு வந்து குடியேறிய இராபருட்டு காலுடுவெல் அங்குள்ள நாடார்களைக் கிறித்துவ சமயத்துக்கு மதமாற்றி, ஊரை முழுமையாகச் சீரமைத்தார். மற்ற கிறித்துவ மத போதகர்கள் தாங்கள் உருவாக்கும் குடியிருப்புகளுக்கு விவிலியப் பெயர்கள் சூட்டுவது வழக்கம். ஆனால் காலுடுவெல் அப்படிச் செய்யாமல் இடையன்குடி என்ற பழைய பெயரையே தக்கவைத்துக் கொண்டார்.

2)      அயர்லாந்தியராகப் பிறந்து சுகாட்டுலாந்தில் வளர்ந்த காலுடுவெல்லின் சொந்த ஊர் SHEPHERDYARD. இதைத் தமிழாக்கினால் இடையன்குடி என்று வரும். இடையன்குடியைக் கால்டுவெல் தேர்ந்தெடுக்க இது ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஒரு கருத்து.

3)      முன்பு இடையன்குடி வேறு பெயரால் வழங்கியிருக்க,  காலுடுவெல்தான் சொந்த ஊர்ப் பாசத்தால் இடையன்குடி என்று பெயர் சூட்டியிருக்க வேண்டும்.

4)      இயேசு கிறித்துவை ஆயராகவும் மக்களை ஆட்டு மந்தையாகவும் கருதும் கிறித்துவ மரபையொட்டி இடையன்குடி என்ற பெயரே காலுடுவெல்லுக்குப் பொருத்தமான பெயராகத் தெரிந்திருக்கலாம்.

நான் இந்தச் செய்திமுரண்கள் பற்றி கிறித்துவ சமய போதகர்கள் சிலரிடம் வினவிய போது, அவர்களும் மாறுபட்ட கருத்துகளே சொன்னார்கள். காலுடுவெல் பற்றி எழுதப்பட்ட நூல்கள் என்ன சொல்கின்றன என்று பார்த்தால் ஓரளவு தெளிவு பிறக்கலாம்.

இரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய ‘காலுடுவெல் ஐயர் சரிதம்’ நம்பகமானது என்று அறிவுலகத்தால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அந்நூலை இப்போதுதான் தேடிப் பிடித்தேன். அழகான தமிழில் சுருக்கமாகவும் சுவைபடவும்  எழுதியுள்ளார். இடையன்குடிக்கு இராபருட்டு காலுடுவெல் வந்து சேர்ந்தது பற்றி சேதுப்பிள்ளை எழுதியிருப்பதைப் படிப்போம்.

“மேல்நாட்டு நாகரிகம் தமிழ்நாட்டிற் பரவத் தொடங்கிய காலந்தொட்டு அந்நாட்டுச் சமயங்களைத் தமிழகத்திற் பரப்பக் கருதிய ஐரோப்பிய ஆர்வலர் பலர் தமிழ்மொழி பயிலத் தலைப்பட்டார். தெள்ளிய தமிழ் நூல்களின் சுவை அறிந்து திளைத்தார் சிலர். தமிழிலமைந்த அற நூல்களின்  திறங்கண்டு வியந்து அவற்றை ஐரோப்பிய மொழிகளிற் பெயர்த்தமைத்தார் சிலர். மேலை நாட்டு மொழிநூல் முறைகளைத் துணைக்கொண்டு தமிழ் மொழியை ஆராய்ந்தார் சிலர். இம்முத்திறத்தாரும் தமிழ்மொழிக்குத் தகைசான்ற தொண்டு புரிந்துள்ளார்.”

“காலுடுவெல் ஐயர் தமிழகத்தையே தாயகமாய்க் கொண்டார்; தென்தமிழ் நாடாய பொருனை நாட்டில் ஐம்பதாண்டுகட்கு மேலாக வதிந்து அருந் தொண்டாற்றினார். ஏழை மாந்தர்க்கு எழுத்தறிவித்தார்; சமய ஒழுக்கத்தைப் பேணக் கருதித் திருச்சபைகள் நிறுவினார்; தூர்ந்து கிடந்த துறைகளைத் துருவினார்; திருநெல்வேலிச் சரித்திரத்தை வரன்முறையாக எழுதி உதவினார்.”

‘பொருனை நாடும் ஏசு மதமும்’ என்ற தலைப்பில், கிறித்துவம் நெல்லைச் சீமையில்  பரவிய கதையை இரா.பி. சேதுப்பிள்ளை எடுத்துரைக்கிறார். காலுடுவெல் வருகைக்கு முன்பே ஏசு மதம் பொருனையாற்றின் இரு கரையிலும் பரவி, மெல்ல அயலூர்களிலும்  நுழையத் தொடங்கியது.

“பாளையங்கோட்டைக்கும் திருச்செந்தூருக்கும் இடைப்பட்ட நெடுநிலத்தில் பெருந்தொகையினராய் வாழும் பழங்குடிகள் நாடார் என்று அழைக்கப்படுவர். இவ்வகுப்பார் வாழும் நாட்டில் கிறித்து மதம் பரவிய பான்மை அறியத்தக்கதாகும்…”

புதிய மதத்தார்க்குப், பழைய மதத்தாரால் தீங்கு விளையும் என்றஞ்சி, கிறித்துவத்துக்கு மாறியவர்கள் தனிக் குடியிருப்பு அமைத்துக் கொள்வது வழக்கமாயிற்று.

“அக்காலத்தில் நாடார்கள் சிறந்து வாழ்ந்த ஊர்களில் இடையன்குடியும் ஒன்றாகும். ஆதியில் முல்லைநில மக்களாய இடையர் மிகுதியாகக் குடியிருந்தமையால் இடையன்குடி என்று பெயர் பெற்ற அவ்வூரில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடார் வகுப்பினரே பெருந்தொகையினராய் வாழ்ந்து வந்தார்கள். வேத விளக்கச் சங்கத்தின் சிறந்த தொண்டராகிய கெற்றிக்கு என்பார் தென்னாட்டில் கிறித்து மதம் செவ்வையாகப் பரவக் கேட்டு மனமகிழ்ந்து நாடாருறையும் நாடுபோந்து ஆயிரத்து முந்நூறு மக்களை ஞான நீராட்டுவித்தார்….”  

ஆக, இரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய “காலுடுவெல் ஐயர் சரிதம்” இடையன்குடி பற்றிய சில உறுதியான செய்திகளைத் தருகிறது. அது ஆதியில் மெய்யாகவே இடையர் குடியிருப்பாக இருந்துதான் இடையன்குடி எனப் பெயர் பெற்றது. காலப்போக்கில் நாடார்கள் அந்த ஊரில் பெரும்பான்மை ஆகி விட்டனர். இது காலுடுவெல் தந்த பெயர் என்பது உண்மையன்று. அவர் விரும்பிய பெயராக இருந்திருக்கலாம். காலுடுவெல் வருகைக்கு முன்பே நாடார் சமுதாய மக்கள் கிறித்துவம் தழுவத் தொடங்கி விட்டனர்.

அப்படியானால் காலுடுவெல் வரும் போதே இருந்த இடையன்குடி எப்படி இருந்தது? இடையன்குடியில் அவர் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

இரா.பி. சேதுப்பிள்ளை வளமார் தமிழில் வாரி வழங்கும் செய்திகள் கருத்துக்குரியவை. பருகுவோம்.     (ஏற்றமா? மறக்கவில்லை அன்பரே! திரித்துவக் கோயில் பற்றிச் சொல்லும் போது சொல்கிறேன்.) 

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 235