தோழர் தியாகு எழுதுகிறார் 116 : ஆர்எசுஎசு கும்பலின் காவித் திகிலியம் (2)
(தோழர் தியாகு எழுதுகிறார் 115 : ஆர்எசுஎசு கும்பலின் காவித் திகிலியம் (1) தொடர்ச்சி
)
ஆர்எசுஎசு கும்பலின் காவித் திகிலியம் (2)
பன்வார் மேகவன்சி என்ற பெயரைக் கேள்விப்பட்டுள்ளீர்களா? இவர் ஒடுக்கப்பட்டவராக இருந்தும் ஆர்எசுஎசு அமைப்பில் சேர்ந்து பற்றார்வத்துடன் பணி செய்தவர். 1991 மே முதல் 1992 திசம்பர் வரை ஆர்எசுஎசு-இல் இருந்தவர். இது ஆர்எசுஎசு வரலாற்றில் முனைப்புமிகுந்த காலம். பாபர் மசூதியை இடித்த காலம். கரசேவைக் காலம்.
பாபர் மசூதி இந்து தேசத்துக்கு அவமானச் சின்னம் என்றும், அதை இடித்து அந்த இடத்தில் இராமர் கோயில் கட்டுவதுதான் தேசபக்தி என்றும் ஆர்எசுஎசு பாசக செய்த பரப்புரையில் பன்வார் மேகவன்சியும் மயங்கினார். கரசேவையில் பங்கேற்பதற்கான காவித் தொண்டர் படையில் சேர்ந்து அயோத்திக்குப் புறப்பட்டார். தன் வீட்டில் கரசேவகர்களுக்கு உணவு படைக்க விரும்பி அவர்களை விருந்துக்கு அழைத்தார்.
ஒடுக்கப்பட்டோர் வீட்டில் அவர்கள் உண்பார்களா? என்ற ஐயமே அவருக்கு எழவில்லை. அந்த அளவுக்கு ஆர் எசு எசு மீது நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் சாதி இந்துக்களான கர சேவகர்கள் அவரது விருந்தோம்பலை மறுதலித்தனர்: “எவ்வளவு முயன்றும் நம் இந்துச் சமூகத்தில் சாதியும் தீண்டாமையும் ஒழியவில்லை. ஆசாரமான சாதுக்கள் தீண்டப்படாதார் வீட்டில் உண்ண மாட்டார்கள். நாம் அவர்களுக்கு வருத்தம் அளிக்கக் கூடாது அல்லவா?”
பன்வார் அதிர்ந்து போனார். ஆர்எசுஎசு மீதான அவரது நம்பிக்கை ஆட்டங்காணத் தொடங்கியது. சாதியும் தீண்டாமையும் ஆர்எசுஎசு-இல் தெளிவாக (ஆனால் நுட்பமாக) கடைப்பிடிக்கப்படுவதை மெல்ல மெல்லப் புரிந்து கொண்டார். கர சேவையைக் கைவிட்டு வீடு திரும்பினார்.
தன் பட்டறிவினால் அவர் ஆர்எசுஎசு-ஐ மட்டுமல்ல, இந்துவியத்தையே புரிந்து கொண்டார். தனது புரிதலை எழுதவும் செய்தார்.
I Could Not Be Hindu: The Story of a Dalit in the RSS (நான் இந்துவாக இருக்க முடியாது: ஆர் எசு எசு-இல் ஒடுக்கப்பட்டவர் கதை) என்பது அவரது நூல்.
000
சொல்லடிப்போம் வாங்க!
அன்பர் சிபி எழுதுகிறார்.
Corona virus என்பதைத் தமிழில் தீநுண்மி என வழங்குகிறார்கள். இதன் பொருத்தப்பாடு ஐயத்திற்குரியதே. இது நேரடியான மொழிபெயர்ப்போ ஒலிபெயர்ப்போ கிடையாது. வெறும் புரிதல் சார்ந்த சொற்கோவை எனலாம். அறிவியலில் பெயரிடும் போது தனித்தனிப் புழுக்களுக்குத் தனித்தனிப் பெயரிடுவர். அதனை அடையாளம் காண இதுவே உதவும். இத்தீநுண்மி அவ்வாறு தனித்த ஒரு புழுவைக் குறிக்க இயலாது. பொதுவாகத் தீமையளிக்கும் நுண்பொருள்களுக்கும் பயன்படுத்தலாம். இதனால் குழப்பம் வரும். Corona என்பது கிரீடம் அல்லது முடி எனப் பொருள் தரும். இதில் முடி என்பதே தமிழ்ச்சொல். Virus என்பதைக் கிருமி என வழங்குகிறோம். கிருமி என்ற வடசொல்லிற்குப் புழு என்பதே தமிழ்ச் சொல். எனவே Corona virus என்பதை முடிப்புழு என வழங்கலாமென கருதுகிறேன். தோழர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன்.
00
அன்பர் இலக்குவனார் திருவள்ளுவன் கொரோனா என்பதைத் தமிழில் மகுடத் தொற்று என்று சொல்லக் கேட்டுள்ளேன். சிபியின் முன்மொழிவுக்கு அவரது மறுமொழியை எதிர்பார்க்கிறேன்.
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல்
Leave a Reply