தோழர் தியாகு எழுதுகிறார் 129 : வடவர் வருகையும் தமிழ்நாடும் 4
(தோழர் தியாகு எழுதுகிறார் 128 : வடவர் வருகையும் தமிழ்நாடும்.3 தொடர்ச்சி)
வடவர் வருகையும் தமிழ்நாடும் 4
நான் சொல்வது போல் தமிழ்நாட்டிற்கு ஒரு குடியுரிமை இருந்தால், இந்தியக் குடியுரிமை இல்லை என்றாலும் நாம் தமிழ்நாட்டுக் குடியுரிமை வழங்க முடியும். இப்போது தமிழ்நாட்டில் ஏதிலியர்களாக இருக்கிறார்களே, அவர்கள் எல்லாரும் குடிமக்களா? அவர்கள் ஏதிலிகள் கூட இல்லை. ஏனென்றால் எதிலிகள் தொடர்பான அனைத்துலகச் சட்டத்தில் இந்தியா கையொப்பம் இடவில்லை. ஏதிலிகள் என்பதைக் கூட அங்கீகரிக்கவில்லை. அகதிகள் பற்றிய உலகச் சட்டம் எதுவுமே அவர்களுக்கு பொருந்தாது! (உ)ரோகிங்கியா முசுலிம்களுக்குப் பொருந்தாது! திபெத்தியர்களுக்குப் பொருந்தாது!
அதனால் முதலாவதாக நாம் ஓர் அடிப்படை தீர்வு முன்வைப்போம். என்னவென்றால், தமிழ்நாட்டில் வடவரோ மற்றவர்களோ படையெடுப்போ வருகையோ நுழைவோ எதை ஆனாலும், இங்கு தோழர் ஒருவர் கேட்டார். கட்டுப்படுத்துவதா தடுப்பதா என்று. கட்டுப்படுத்துவோம், ஒழுங்கு படுத்துவோம். ஏனென்றால் நமக்கு இந்தத் தேவை உலகமுழுவதும் இருக்கிறது அந்த ஒழுங்குபடுத்துவதற்கு அடிப்படைத் தேவை தமிழ்நாட்டுக் குடியுரிமை வேண்டும். வேறு எவருக்கோ இரட்டைக் குடியுரிமை என்று பேசுகிறீர்கள் அல்லவா? நாங்கள் கேட்கிறோம் எங்களுக்கு இரட்டை குடியுரிமை வேண்டும். இந்தியக் குடியுரிமையோடு தமிழ்நாட்டுக் குடியுரிமையும் வேண்டும்.
தமிழ்நாட்டில் ஓர் அமைச்சர் இருந்தார். அவர் பெயர் என்ன? தமிழ்க்குடிமகன். அவரே தமிழ்க் குடிமகன் இல்லை. அவருக்குத் தமிழ்நாட்டுக் குடியுரிமை யார் எங்கு கொடுத்தது? பெயர் மட்டும்தான் தமிழ்க் குடிமகன்! அமித்துசா சொன்னார்: தமிழ்நாட்டிற்கு அதிகாரிகள் எல்லாரையும் அனுப்பி யாரெல்லாம் இந்த நாட்டில் குடிமக்கள் என்று தீர்மானிக்கப் போகிறோம், நாங்கள் பட்டியல் எடுத்துக் கொண்டு வருகிறோம் என்று சொன்னார் – நான் திருப்பிக் கேட்டேன், நீங்கள் வாருங்கள், வருகிற போது நீங்கள் இந்த நாட்டிற்குச் சொந்தமானவர் என்பதற்கான சான்றைக் கொண்டுவாருங்கள். நீங்கள் யார் எங்களைக் கேட்பதற்கு? என்னை எப்போது நான் உன்னிடம் ஒப்படைத்துக் கொண்டேன். இந்த நாட்டை வைத்துக் கொள், எடுத்துக் கொள் என்று எவராவது கொடுத்தார்களா? காசுமீர் விடயத்தில் நீ சொல்கிறாய், மன்னர் எங்களிடம் ஒப்படைத்தார் என்று. இங்கே யார் ஒப்படைத்தது? யாரும் ஒப்படைக்கவில்லை. நீயாக எடுத்துக் கொண்டாய். இப்போது எங்களை நீ அதிகாரம் செய்கிறாய், அதனால் இந்தச் செய்தி ஓர் அடிப்படைத் தேவை.
இன்னும் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தத் தொடர்வண்டி நிலையத்தில் வந்து இறங்குபவர்கள், பானி பூரி விற்பவர்கள், வெற்றிலை பாக்கு போட்டு எச்சில் துப்புபவர்கள் இவர்கள்தான் வடநாட்டவர்கள் என்று நினைக்காதீர்கள். தமிழ்நாடு அரசு 41 பொதுத்துறை நிறுவனங்கள் வைத்திருக்கிறது. எல்லாம் பெரிய பெரிய நிறுவனங்கள், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டிட்கோ, தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் எல்காட், தமிழ்நாடு இரப்பர் கழகம் என்று ஒவ்வொன்றாக இருக்கிறது இந்த ஒவ்வொரு கழகத்திலும் யார் அதிகாரிகள் என்று தெரியுமா? அதில் எத்தனை பேர் தமிழர்? எத்தனை பேர் வெளிமாநிலத்தவர்? என்று எண்ணிப் பார்க்க வேண்டாமா?
ஓர் உதாரணம் சொல்கிறேன் எல்காட்டு என்று ஓர் அமைப்பு தெருவெல்லாம் வண்ண விளம்பரம் போடுகிறார்கள். அதனுடைய பெயர் உமாசின் (UMAGIN). அது என்ன என்று உங்களால் கற்பனை செய்யக் கூட முடியாது செட்டம்பர் மாதத்தில் உலகம் முழுவதும் இருக்கக் கூடிய முதலீட்டாளர்கள் அனைவரையும் சென்னையில் திரட்ட போகிறார்கள். அதற்குப் பெயர்தான் உமாசின். இதை நடத்தப் போவது எல்காட் மின்னணுவியல் கழகம். அதில் இயக்குநர் வாரியம் இருக்கிறது அதில் ஏழு பேர். அவர்கள் எல்லாரும் இ.ஆ.ப. ஆக இருக்கக் கூடிய அதிகாரவர்க்க முதலாளிகள். பெரும் சம்பளம் மட்டுமல்ல, இலாபத்திலும் பங்கு பெறுபவர்கள். பிறகு அதில் என்னென்ன உண்டோ சம்பளம் கிம்பளம், எப்படி எல்லாம் தேட்டை போடலாமோ அப்படி எல்லாம் போடுவார்கள்.
அரசாங்கம் மாறுகிற போது அமைச்சர்கள் மாறுவார்கள். காவல் துறையில் கூட சில உயர் அதிகாரிகள் மாறுவார்கள் ஆனால் இந்த நிறுவனங்களில் யாரும் மாற மாட்டார்கள். அவர்களேதான் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். இந்த எல்காட் நிறுவனத்தில் ஏழு இயக்குநர்கள் இருக்கிறார்கள். டாக்டர் மீரசு மிட்டல், இ.ஆ.ப., அசய் யாதவு இ.ஆ.ப., பங்கசுகுமார் பன்சால், இ.ஆ.ப., ஆனந்து விசேந்திர பாண்டியா, அல் சுந்தர் தயாளன், திருமதி சரண். ஒரு சில பெயர்கள் தமிழ் போன்று இருக்கலாம். எனக்கும் அந்த சந்தேகம் உண்டு ஆனால் சந்தேகமே இல்லாத வடநாட்டவர்கள்தான் தலைமை. அந்த முக்கியப் பதவிகள் வடநாட்டார் கையில். இவர்கள் எல்லோரும் யார்? எந்த ஊர்? எந்த வகுப்பு? பிற்படுத்தப்பட்ட வகுப்பா? தாழ்த்தப்பட்ட வகுப்பா? எந்த மாவட்டம்? பெயரிலேயே தெரிகிறது, இவர்களில் எவருக்கும் தமிழும் தெரியாது. இவர்கள் நிரந்தரமாக இங்கு ஆட்சி புரிகிறார்கள். ஒரு பெரிய நிறுவனம் நிறையத் தொழில்களுக்கு முதலீடு செய்திருக்கிறது கோடிக்கணக்கான உரூபாய் இலாபமீட்டி கொடுக்கிறது – டிட்கோ. இதே நீரசு மிட்டல், அட்சய யாதவு, பிரபாகரன் நாயர், பிரவீன் சுரிசா, தேசிகன் அருள்ராசு இது போன்று ஏழு எட்டுப் பேர். நான் சொல்லிய 41 நிறுவனத்திற்கும் இயக்குநர்கள் பட்டியலை எடுத்துப் பார்த்தால் பாதிக்குக் குறையாமல் வடநாட்டு அதிகாரிகள் இருப்பார்கள்
ஏன் இ.ஆ.ப., – Indian Administrative Service – இ.வெ.ப. – Indian Foreign Service – இ.கா.ப. – Indian Police Service? நாம் என்ன கேட்க வேண்டும்? எதற்கு இந்தியாவில் தமிழ்நாட்டில் நாம் நடத்துகிற தொழில்களுக்கு இஆப? தஆப வரட்டும் – Tamilnadu Administrative Service வேண்டும், Tamilnadu Police Service வேண்டும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுடன் உறவுகளுக்கு எங்களுக்கு Tamilnadu Foreign Service வேண்டும். இந்தக் கோரிக்கையே இல்லை என்றால் பிறகு எதற்குத் தன்னாட்சி? கூடுதல் அதிகாரம்? இதற்கெல்லாம் என்ன பொருள் இருக்கிறது? இந்தக் கோரிக்கைகளை நாம் எழுப்ப வேண்டும். மன்றங்களிலும் எழுப்ப வேண்டும், மக்கள் மத்தியிலும் எழுப்ப வேண்டும் இந்தக் கோரிக்கைகளை எழுப்பாமல் ஒன்றும் செய்ய முடியாது.
(தொடரும்)
தோழர் தியாகு, தாழி மடல்
Leave a Reply