(தோழர் தியாகு எழுதுகிறார் 130 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் ஆ. தொடர்ச்சி)

திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் –  

மருத்துவச்சான்று வலுவற்று இருப்பதாக நீதிபதி குறைபட்டுக் கொள்வது பொருளற்றது. தாக்குண்டவர்கள் மருத்துவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்ட போது காயங்கள் பெரும்பாலும் ஆறிப்போய் இருந்ததில் வியப்பில்லை. ஆனால் முதல் எதிரி சுப்பிரமணியனுக்கு இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 323 / 324 பிரிவுகளில் குற்றத் தீர்ப்பு வழங்குவதற்கு நீதிபதி இதே மருத்துவச் சான்றைத்தான் நம்பியுள்ளார்.

வழக்குரைஞர்களின் போற்றத்தக்க பணி

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் அச்சத்தைப் போக்கி அவர்களுக்கு ஊக்கமளித்து, நிகழ்ந்த கொடுமைகளை வெளிப்படுத்திச் சட்ட நடவடிக்கையின் ஒவ்வொரு படியிலும் அவர்களுக்குத் துணை நின்ற வழக்குரைஞர்கள் இரத்தினம், அலெக்குசு, செபசுட்டியன் ஆகியோரின் பங்கு போற்றத்தக்கது. நியாயமாகவே நீதிபதியும் அவர்களை பாராட்டியிருக்க வேண்டும். ஆனால் இந்த வழக்குரைஞர்கள் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் முறையீடு தாக்கல் செய்வதற்கு உதவினார்கள் என்பதையே நீதிபதி ஒரு குறையாக எடுத்துக்காட்டுவது வேடிக்கைதான். அரசுத் தரப்பு வழக்குரைஞர் சு.க. மணி திறம்பட வழக்காடினார் என்பதற்காக அவரையும் குறை சொல்லாமல் விட்டாரே நீதிபதி என்று ஆறுதலடையலாம்.

இந்த வழக்குரைஞர்களில் எவர்க்கும் குற்றஞ்சாட்டப் பட்டவர்களின் பால் பகைமையோ உள்நோக்கமோ எதுவுமில்லை என்பதை ஏற்றுக்கொண்ட போதிலும், பாதிக்கப்பட்டவர்கள் அவர்களிடம் உண்மை பேசியிருப்பார்களா என்று நீதிபதி ஐயுறுகிறார். அவர்கள் பொய்கூற வேண்டிய தேவையென்ன? அந்தப் பொய்யை அப்படியே நம்புமளவுக்கு இந்த வழக்குரைஞர்கள் ஏமாளிகளா? என்றெல்லாம் ஏரண முறையில் சிந்திக்க இயலாதவராக நீதிபதி உள்ளார். தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி அவரது உள்ளத்தில் படிந்துள்ள படிமமே அவரது ஏரணச் சிந்தனைக்குத் தடை போடுகிறதோ? என்று ஐயுற வேண்டியுள்ளது.

அதிகாரிகளின் சாட்சியம்

மாவட்ட ஆட்சியரும் புலனாய்வு அதிகாரியும் அளித்துள்ள சாட்சியத்திலேயே முரண்பாடு காண்கிறார் நீதிபதி. 31-5-2002இல் தாம் திண்ணியம்ஊருக்குச் சென்ற போது பாதிக்கப்பட்டவர்கள் ஊரிலில்லை என்று மாவட்ட ஆட்சியர் சாட்சியம் அளித்துள்ளார். அதே நாளில் அவ்வூருக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை விசாரித்ததாகப் புலனாய்வு அதிகாரி சாட்சியம் அளித்துள்ளார். இந்த இரு சாட்சியங்களும் ஒன்றுக்கொன்று முரணாய் இருப்பதாக நீதிபதி கண்டுபிடித்துச் சொல்கிறார். மாவட்ட ஆட்சியரும் புலனாய்வு அதிகாரியும் தனித்தனியாகச் சென்றுள்ளனர். அவர் சென்ற போது இல்லாதவர்கள் இவர் சென்றபோது இருந்திருக்க லாமல்லவா? மாவட்ட ஆட்சியரும் புலனாய்வு அதிகாரியும் பொய்கூற வேண்டிய தேவை என்ன? அவர்களைக் கூடச் சார்பற்ற சாட்சிகளாக நீதிபதி கருதவில்லையா?

மாவட்ட ஆட்சியரால் யாரையும் தேடிக் கண்டுபிடிக்க முடியாது, ஆனால் புலனாய்வு அதிகாரியால் அப்படிச் செய்ய முடியும் என்ற வேறுபாடு கூடவா நீதிபதிக்கு விளங்கவில்லை?

நிகழ்தகவு

ஒரு வழக்கில் கூறப்பட்டுள்ளவாறு நிகழ்ச்சிகள் நடந்திருக்க எந்த அளவுக்கு வாய்ப்புள்ளது என்பதைத்தான்  வழக்கின் நிகழ்தகவு என்பார்கள். இந்த வழக்கின் நிகழ்தகவு ஐயத்திற்குரியதே என்கிறார் நீதிபதி. தொகுப்பு வீட்டுக்காகப் பணம் வாங்கியது முதல் மனிதர்களை மலம் தின்ன வைத்த கொடுமை முடிய… இப்படியெல்லாம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வருகிறார் நீதிபதி. கருப்பையா, முருகேசன், இராமசாமி ஆகியோர் தப்படித்து சுப்பிரமணியனின் பெயருக்குக் களங்கம் விளைவித்ததால் அவர் ஆத்திரமுற்று அவர்களைத் தாக்கியிருக்க வேண்டும் என்று நம்புவதற்கு மட்டுமே இந்த வழக்கில் சான்று உள்ளதாம்!

அவர்கள் தப்படித்தார்கள் என்றால் ஏன், எதற்காக? அவர்களது அறிவிப்பு சுப்பிரமணியனின் பெயரைக் கெடுப்பதாய் இருந்தது எப்படி? ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் கருப்பையாவைச் செருப்பாலடித்தார், முருகேசன்-இராமசாமிக்குச் சூடுபோட்டார் என்றால், இந்த அளவுக்கு நிகழ்தகவு உண்டு என்றால், அவர்களை மலம் தின்ன வைத்தார் என்பதற்கு மட்டும் ஏன் வாய்ப்பில்லை? ஒரு மனிதனால் இப்படிச் செய்ய முடியுமா? என்பது நியாயமான கேள்விதான். ஆனால் சாதிப் பேய் பிடித்தாட்டும் உள்ளம் மனிதத் தன்மையை அறவே இழந்து மூர்க்கமான மிருகத்தனத்தை வெளிப்படுத்துகிறது என்பதற்கு எத்தனைச் சான்றுகள் வேண்டும்!

முடியுமாமுடியுமா?

மனிதனை மனிதன் உயிரோடு கொளுத்த முடியுமாகொளுத்தினார்களே வெண்மணியில்!

மனிதனை மனிதன் வெட்டிக் கூறு போட முடியுமாகூறு போட்டார்களே குறிஞ்சாங்குளத்தில்!

மனிதனை மனிதன் வெட்டி ஆற்றில் வீச முடியுமாவீசினார்களே சுண்டூரில்!

சாதிவெறி மனிதனை மிருகமாக்கியதற்கு இன்னும் எத்தனைச் சான்றுகள் வேண்டும்?

இதே வரிசையில்… மனிதனை மனிதன் மலம் தின்னச் செய்ய முடியுமா? செய்து விட்டானே திண்ணியத்தில்!

சாதி வெறியின் மிருகத்தனத்துக்கு இது மற்றுமொரு சான்று. இதை நீதிபதி நம்ப மறுக்கிறார் என்றால் சாதிக் கொடுமைகளின் வரலாறு தெரியாதா அவருக்கு?

திண்ணியம் தீர்ப்பு சாதித் தீர்ப்பே

திண்ணியம் வழக்குத் தீர்ப்பு நீதித் தீர்ப்பன்று, சாதித் தீர்ப்பே என்பதுதான் நம் திறனாய்வின் முடிவு. இந்தத் தீர்ப்பின் சாதியம் அது வெளிப்படையாக ஒரு சாதியை ஆதரித்து மறுசாதிக்கு எதிராக உள்ளது என்பதை விடவும், சாதிச் சமூகத்தில் சாதிய ஒடுக்குமுறையிலிருந்து எழுந்த நிகழ்வுகள் தொடர்பான ஒரு வழக்கில் சாதிப் பாகுபாட்டையும் அதன் அக, புற விளைவுகளையும் கண்டுகொள்ள மறுப்பதில்தான் அடங்கியுள்ளது.

இரண்டாம் வகைச் சாதியம்

சாதி பார்க்கும் சாதியம் வெளிப்படையானது. சாதி இருக்கும் போதே இல்லை என்று கற்பித்துக் கொள்ளும் சாதி பாராச் சாதியம் அல்லது சாதிக் குருட்டுச் சாதியம் (caste-blind casteism) உட்கிடையானது, மறைந்து நின்று தாக்குவது. இந்த இரண்டாம் வகைச் சாதியமே திண்ணியம் தீர்ப்பின் சொற்களிலும் சொல்லிடுக்குகளிலும் திமிறி வழிகிறது.

சாதிக் கொடுமைகளுக்கும் சாதித் தீர்ப்புகளுக்கும் எதிரான போராட்டம் நீதிமன்ற எல்லைகளுக்குள் முடிந்து விடாது என்பதைச் சட்டத்தின் பிடியில் சிக்காத சாதி வெறியர்களுக்குக் காலம் உணர்த்தும்.

(தொடரும்)
தோழர் தியாகு, தாழி மடல்