(தோழர் தியாகு எழுதுகிறார் : எங்கள் பெயரால் செய்யாதே!- தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

இசுரேல் எதிர்ப்பும் இசுலாமியக் குறுநெறியும்

இசுரேல் – பாலத்தீனப் போர் குறித்துப் பல கோணங்களிலும் ஆய்ந்து பார்க்க வேண்டிய தேவையுள்ளது. எனது அறிவன் கிழமை (தமிழ்நாடு இனி) அரசியல் வகுப்புகளில் இந்தச் சிக்கலின் வரலாறு முழுவதையும் சுருக்கமாகச் சொல்லி வருகிறேன். செமித்திய எதிர்ப்புக் கொள்கை-நடைமுறை, சீயோனியத்தின் தொடக்கமும் வரலாறும், இசுரேல் வந்த வழி ஆகியவற்றை அலசியுள்ளேன். அடுத்து பாலத்தீன விடுதலைப் போராட்ட வரலாற்றை எடுத்துக் கொள்வோம்.

இதற்கிடையில், சமூக-அரசியல் கண்ணோட்டமும் வரலாற்றுப் பார்வையும் இல்லாமல் இந்தச் சிக்கலைத் தங்கள் காழ்ப்புகளுக்கு ஏற்பக் கையாளும் முயற்சிகளையும் பார்க்க முடிகிறது.

சில உண்மைகளை எப்போதும் நினைவிற்கொள்ள வேண்டும். இசுரவேலர்கள் எல்லாரும் யூதர்கள் அல்லர். யூதர்கள் எல்லாரும் இசுரவேலர்களும் அல்லர். பழைய ஏற்பாட்டில் சொல்லப்படும் எபிரேய மொழி பேசும் இசுரவேலர்களில் யூதரல்லாதாரும் இருந்தனர். அப்போது கிறித்துவம் தோன்றவில்லை, இசுலாமும் தோன்றவில்லை. இசுரேல் நாட்டில் வாழ்ந்த மக்களில் ஒரு பகுதியினர் பிற்காலத்தில் கிறித்துவரானார்கள், மற்றொரு பகுதியினர் இசுலாத்துக்கு மாறினார்கள். ஆகவே இவ்வளவு காலம் கழித்து “இசுரேல் யூதர்களுக்கே!” என்ற சீயோனிய முழக்கம் பிழையானது. சீயோனிய வெறியில் வீழ்ந்திடாத இசுரேலிய யூதர்கள் இசுரேலை அனைத்து சமயத்தவருக்கும் சமயச் சார்பில்லாதவர்களுக்குமான உலகிய (சமயச் சார்பற்ற) நாடாக்குவதற்காகப் போராட வேண்டும். அதுதான் குடியாட்சியமாக இருக்கும்.

மறு புறம், சீயோனியத்துக்கும் இசுரேலின் போர் வெறிக்கும் எதிரான உணர்ச்சியை யூத வெறுப்பாக மாற்றும் முயற்சியை இசுலாமியப் பரப்பாளர்கள் சிலர் செய்து வருவதை ஏற்பதற்கில்லை. இது பழைய செமித்திய-எதிர்ப்புக்குப் புத்துயிரளிக்கும் மோசமான முயற்சி! யூதர்கள் இறைவனால் கண்டித்து ஒதுக்கப்பட்டவர்கள் என்பதற்குத் திருக்குரானில் சான்றுகள் இருப்பதாக முசுலிம் இளைஞர் ஒருவர் வலையொளி சமூக ஊடகத்தில் பேசக் கேட்டு அதிர்ச்சியுற்றேன். இதுதான் இசுலாமியக் குறுநெறி (அடிப்படைவாதம்)! இது தமிழ்ச் சமூகத்துக்கும் மாந்தக் குல முன்னேற்றத்துக்கும் பகையான சிந்தனை!

யூதர்கள், கிறித்துவர்கள், இசுலாமியர்கள், இந்துக்கள் யாரானாலும் இறைவனிடம் நற்சான்று பெற்றவர்கள் யாருமில்லை, இறைவனால் சபிக்கப்பட்டவர்களும் யாருமில்லை. அப்படியெல்லாம் நம்பிக்கைகள் இருக்குமானால் அவை மூட நம்பிக்கைகளே! மூட நம்பிகைகளை உங்கள் மனத்தளவில் வைத்துக் கொள்ளுங்கள்! பொதுச் சமூகத்தில் விதைத்து வெறுப்பை விதைக்காதீர்கள்! தினை விதைத்தால் தினை! வினை விதைத்தால் வினை! வெறுப்பை விதைத்தால் பகை! மாந்தப் பகை!
பாலத்தீனர்களை ஆதரிப்பதன் பெயரால் யூதர்களை இனவழிப்புச் செய்வதற்கான வெறுப்பை விதைக்கும் இசுலாமியக் குறுநெறியை வெளிப்படையாக எதிர்க்கத்தான் வேண்டும். இசுலாமிய அரசு (ISLAMIC STATE – IS) அல் கொய்தா போன்ற இசுலாமியக் குறுநெறி அமைப்புகளால் இசுலாமியருக்கோ மற்றவர்களுக்கோ எவ்வ்வித நன்மையும் இல்லை. இவர்கள் எந்தத் தேசத்தின் விடுதலைக்காகவும் போராடவில்லை. உலகு முழுவதையும் இசுலாமிய ஆட்சிக்கு உட்படுத்தும் அனைத்திசுலாமியம் (PAN-ISLAMISM) … என்பதே இந்தக் குறுநெறியாளரின் வெறிக் கொள்கை. ஒரே தேசம் ஒரே மதம் என்று மோதி முன் வைப்பதும், ஒரே உலகம் ஒரே மதம் என்று இசுலாமியக் குறுநெறியாளர் முன்வைப்பதும் விளைவளவில் ஒன்றுதான்! யூதர்கள் என்றால் பிறவியிலேயே மோசமானவர்கள், சூனியக்காரர்கள், வெறியர்கள் என்று இசுலாமியத் தமிழ் இளைஞர் ஒருவர் பொறிந்து தள்ளுவதைப் பார்த்தால் நாம் எச்சரிககையோடிருக்க வேண்டிய தேவை உள்ளது என நினைக்கிறேன்.
இசுரேலிடம் திரும்பிச் செல்வோம். காசா முனையில் போரின் அழிவுக்கு ஆளான பாலத்தீனர்களுக்காக மட்டுமல்ல, இசுரேலில் அழிவுக்கு ஆளான யூதர்களுக்காகவும் நாம் வருந்துவதே அறம். உலகியம், குடியாட்சியம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் பாலத்தீனம், இசுரேல் ஆகிய இரு நாடுகள் அமைவதுதான் தீர்வாக இருக்க முடியும், உடனடித் தீர்வு போரை அறவே நிறுத்துவதுதான்! இது பற்றார்ந்த விருப்பம் மட்டுமன்று! இது ஒன்றுதான் செயலுக்குகந்த தீர்வாக இருக்கும்!

தோழர் தியாகு
தாழி மடல் 344
(தொடரும்)