(தோழர் தியாகு எழுதுகிறார் 134 : பன்னாட்டுத் தாய்மொழிகள் நாள் தொடர்ச்சி)

இரத்தினம் மணி

தாழி குறிப்பு: வழக்கறிஞர் இரத்தினம் அன்று போலவே இன்றும் களத்தில் நிற்கிறார். 1980ஆம் ஆண்டு சென்னைச் சிறையில் என்னையும் தோழர்களையும் நேர்காண வந்த இளைஞர் இரத்தினம் இப்போதும் அதே துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறார். பகைவர்களையும் நண்பர்களையும் உறங்க விட மாட்டார்.   

திண்ணியம் வழக்கைத் திறம்பட நடத்திய வழக்கறிஞர் சு.க. மணி என் கல்லூரி நண்பர், குடந்தை கல்லூரியில் அறிவியல் இளநிலையில் எனக்கு ஓராண்டு மூத்தவர். சேக்குசுபியரின் ஒதெலோ நாடகத்தின் ஒரு காட்சியை ஓரங்க நாடகமாக மேடையில் நடித்துக் காட்டுவார். இருளின் பின்னணியில் கரும்போர்வை உடுத்திச் சிறு ஒளிச் சுடர் ஏந்தி ஆங்கில உச்சரிப்போடு ஆங்கிலம் பேசி குரல் ஏற்றி இறக்கி மிரட்டி விடுவார் மிரட்டி!

கல்லூரித் தேர்தலில் ஆங்கிலப் பேரவைத் தேர்தல் முக்கியமானது. அதில்தான் கூடுதலான மாணவர்களுக்கு வாக்குரிமை. கல்லூரியில் பார்ப்பன மாணவர்கள் அதிகம், அதிலும் அப்போது சுதந்திராக் கட்சியும் திமுகவும் கூட்டணி. ஆங்கிலப் பேரவைத் தலைவராக 14  ஆண்டுகளுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பார்ப்பனரல்லாத மாணவர் மணிதான் என்று பேசிக் கொண்டார்கள். அப்போதெல்லாம் எசு.கே. மணி! அடுத்த ஆண்டு (68-69 என்று நினைவு) அதே பொறுப்புக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். சில மாதம் முன்பு இளைஞர் அரண் தோழர்களைச் சந்திக்கக் குடந்தை சென்றிருந்தேன். கல்லூரி வாயிலருகே தோழர்களோடு உரையாடிக் கொண்டிருந்த போது பெரியவர் ஒருவர் அருகில் வந்து என்னை நலம் வினவி விட்டுச் சொன்னார்: “அந்தத் தேர்தலில் நான் உங்களுக்கு வாக்கு அளித்தேன்.” ‘தேர்தலில் வாக்குறுதி ஏதும் தந்தேனா?’

*தோழர் சு.க. மணிதான் நம்முடைய பேராசிரியர் க. நெடுஞ்செழியனுக்கும் சட்டத் துணைநின்றவர்.

இரத்தினங்களும் மணிகளும் என்றும் மங்குவதில்லை!

(தொடரும்)
தோழர் தியாகுதாழி மடல் 107