(தோழர் தியாகு எழுதுகிறார் 138 : செந்தமிழ்க்கோ! தாெடர்ச்சி)

 

தருசன் சோலங்கி!

மீண்டும் ஒரு (உ)ரோகித் வெமுலா! உயர்கல்விக் கூடங்களில் பார்ப்பனர்களின் ஆதிக்க வெறிக்கு மீண்டும் ஓர் உயிர்ப் பலி!

அகமதாபாத்தில் ஓர் ஒடுக்கப்பட்ட மாணவன். பெயர் தருசன் சோலங்கி.

வயது பதினெட்டு.  தந்தை குழாய் வேலை பார்ப்பவர்; தாய் வீட்டு வேலை செய்பவர். அரிதின் உழைத்து மும்பை இ.தொ.நு. (ஐ.ஐ.டி) இல் இ.தொ. (பி.டெக்) வகுப்பில் இடம் பிடித்து விட்டார்.

படிக்கத் தொடங்கி மூன்றே மாதம் கழிந்திருந்த நிலையில் கடந்த பிப்பிரவரி 12 ஞாயிறு மதியம் விடுதிக் கட்டடத்தின் ஏழாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.

கல்லூரி வளாகத்துக்குள் தொல்லைக்கு ஆளான பின் சோலங்கி உயிரை மாய்த்துக் கொண்டாராம்!

மும்பை இ.தொ.நு.(ஐஐடி)- இ ல் முதலாண்டு மாணவரான  பதினெட்டு வயதான சோலங்கியை ஒடுக்கப்பட்டவர் என்று தெரிந்து சாதி சொல்லி இழிவு செய்ததே அவரைத் தற்கொலைக்குத் தள்ளியதாகச் செய்தி! அவர் ஒடுக்கப்பட்டவர் என்று தெரிந்தவுடன் மற்றவர்கள் அவரோடு பேசுவதை நிறுத்தி விட்டனராம்! “ஓசியில் படிக்க வந்து விட்டதாக” அவரைக் கேலி செய்தனராம்! இதைத் தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
சோலங்கி தற்கொலையே செய்து கொண்டிருந்தாலும் கல்வி நிறுவனங்களில் சமூக நீதியை மறுக்கும் பார்ப்பனிய முற்றாதிக்கத்தால் கொலை செய்யப்பட்டதாகவே கருத வேண்டும். கல்வி நிலையங்களில் இந்துத்துவப் பார்ப்பனியம் பலவாறு நடத்தி வரும் தொடர் தாக்குதலின் ஒரு வெளிப்பாடே இது. இதற்குப் பலியாகும் பி.வ. மற்றும் ப.வ. (பி.சி,எசு.சி.) பிரிவினரே ஆவர். இந்தக் கொடிய வதை மூலம் சூத்திர பஞ்சம மாணவர்களைத் திட்டமிட்டு மட்டம் தட்டி அவர்களில் பலரைத் தற்கொலைக்கும் தள்ளிவிடுபவர்கள் பார்ப்பனரும் பிற முன்னேறிய சாதியினரும்தான்.

பல இ.தொ.நு.(ஐ.ஐ.டி.)க்களில் பயிலும் ப.வ.-பி.வ.  (எசுசி-பிசி) மாணவர்கள் “அம்பேத்துகர்-பெரியார் கல்வி வட்டம்” எனும் அமைப்புகளை உருவாக்கி இந்தச் சித்திரவதைகளுக்கு எதிராக நீண்டகாலமாகப் போராடி வருகிறார்கள்.

மும்பை இ.தொ.நு. (ஐ.ஐ.டி)- இல் அம்பேத்துகர்-பெரியார்-புலே கல்வி வட்டம் இயங்கி வருகிறது. சென்னை இ.தொ.நு. (ஐ.ஐ.டி.)-இலும் அம்பேத்கர்-பெரியார் கல்வி வட்டம் இயங்கி வருகிறது.

மறுபுறம் பார்ப்பனியத்தின் தரப்பிலும் இந்துத்துவப் பார்ப்பனிய மதவெறி மாணவர் அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. அண்மையில் தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இதன் விளைவுகளைப் பார்த்தோம்.

தலித்திய ஆற்றல்கள் ஏனைய குடியாட்சிய ஆற்றல்களோடு இணைந்து நின்று இ.தொ.நு.(ஐ ஐ டி) போன்ற உயர் கல்வி நிறுவனங்களிலிருந்து பார்ப்பனியத்தைக் களைந்தெடுக்க அன்று (உ)ரோகித்து வெமுலா அழைத்தார்! இன்று தருசன் சோலங்கி அழைக்கிறார்!  

(தொடரும்)

தோழர் தியாகு, தாழி மடல் 109