(தோழர் தியாகு எழுதுகிறார் 139 : தருசன் சோலங்கி தாெடர்ச்சி)

இனிய அன்பர்களே!

·         ஒடுக்கப்பட்ட மாணவர்களை இழிவுபடுத்தித் தற்கொலைக்குத் தள்ளி விடுதல்;

        பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் இடதுசாரி, அம்பேத்துகர்வழி, பெரியார்வழி, சிறுபான்மை நலன், தேசிய இன நலன் சார்ந்த மாணவர் இயக்கங்கள் மீது இழிவும் வன்முறையும்  ஏவுதல்;

        தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான சமூக நீதி வழி இட ஒதுக்கீட்டு உரிமையை மறுக்கத் தூண்டுதல்;

        மாணவர் சங்கத் தேர்தலை நடத்த விடாமல் தடுத்தல், கெடுத்தல்;

        வெறுப்புக் கூச்சல், வெறுப்புரைகள் வழியாகப் பலகலைக்கழக அறிவுச் சூழலையும் அமைதிச் சூழலையும் சிதைத்தல்;

        இந்திய அரசமைப்பு வழிப்பட்ட மதச் சார்பின்மைக்கும், குடியாட்சியத்துக்கும், கூட்டாட்சிக் கொள்கைகளுக்கும், அறிவியல் வரலாற்றுப் பார்வைக்கும் எதிராக இந்துத்துவ வல்லாண்மைக் கருத்துகளைத் திணித்தல்.

இந்தியா எங்கிலும் உயர் கல்வி நிறுவனங்களைக் கைப்பற்றிப் பார்ப்பனிய இந்துத்துவக் கோட்டைகளாக மற்ற நா.தொ.ச.(ஆர்எசுஎசு) தனது மாணவர் பிரிவான அ.இ.மா.ச. (ஏபிவிபி) வழியாக முரட்டுத்தனமாகச் செயல்பட்டு வருகிறது. கல்லூரிப் பேராசிரியர்கள் சிலருடன் கல்லூரி, பல்கலைக்கழக ஆட்சிகள் சிலவும் கூட இதற்கு உடந்தையாக இயங்கி வருகின்றன. இந்தப் போக்கின் ஒரு வெளிப்பாடுதான் தில்லி ச.நே.ப. (J.N.U.)-இல் தமிழ்நாசர் மீதும் மற்ற மாணவர்கள் மீதும் நா.தொ.ச.(ஆர்எசுஎசு) குண்டர்கள் நடத்திய வன்செயல். கல்வி நிறுவனங்கள் மீதான நா.தொ.ச.(ஆர்எசுஎசு) வன்தாக்கிற்கு எதிராகப் பல்வேறு பலகலைக்கழக மாணவர் அமைப்புகளையும் இணையவழி ஒருங்கிணைக்கிற முயற்சி செய்து வருகிறோம். அதற்கான பரப்புரை இயக்கத்தின் தொடக்கமாக (உ)ரோகித் வேமுலாவின் இறுதி மடலை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

(உ)ரோகித்து வேமுலா இறுதி மடல்

வணக்கம். நீங்கள் இந்தக் கடிதத்தைப் படிக்கும் போது நான் இருக்க மாட்டேன். என்னிடம் சினங்கொள்ளாதீர்கள். எனக்குத் தெரியும், உங்களில் சிலர் என்னிடம் மெய்யாகவே அக்கறைப்பட்டீர்கள், என்னை நேசித்தீர்கள், என்னை மிக நன்றாக நடத்தினீர்கள். எவர் மீதும் எனக்குக் குறைசொல்ல எதுவுமில்லை. எப்போதும் எனக்கு என்னிடத்திலேதான் சிக்கல்கள் இருந்தன. எனது ஆன்மாவுக்கும் உடலுக்கும் இடைவெளி வளர்ந்து வருவதாக உணர்கிறேன். நான் பெரிய அசுரனாகி விட்டேன். எழுத்தாளன் ஆக வேண்டும் என்றுதான் எப்போதுமே விரும்பினேன். காரல் சாகனைப் போல் அறிவியல் எழுத்தாளன் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

அறிவியலை, விண்மீன்களை, இயற்கையை நேசித்தேன். 

பிறகு மக்களை நேசித்தேன். மக்கள் நீண்ட காலமுன்பே இயற்கையை விட்டு விலகிப் போய் விட்டார்கள் என்று அறியாமல் மக்களை நேசித்தேன். நம் எண்ணங்கள் கைமாறி வரக்கூடியவை. நமது நேசம் கட்டி வளர்க்கப்படுவது. நமது நம்பிக்கைகள் வண்ணம் பூசியவை. நமது தனித்தன்மை செயற்கைக் கலையின் ஊடாகவே செல்லுபடியாகிறது. காயப்படாமல் நேசிப்பது மெய்யாகவே கடினமாகி விட்டது.

ஒரு மாந்தனின் மதிப்பு அவனது நேர் ஓர்மையும் மிக அண்மைய வாய்ப்புமாகச் சுருங்கி விட்டது. ஒரு வாக்காக. ஓர் எண்ணாக, ஏதோ ஒன்றாக. மாந்தன் ஒரு போதும் ஒரு மனமாக நடத்தப்படவில்லை. விண்மீன் தூளால் ஆன ஒரு புகழ்ப் பொருளாக. களத்தில், படிப்பில், தெருக்களில், அரசியலில், சாவதிலும் வாழ்வதிலும்.

 இவ்வகையான கடிதம் முதல் முறையாக எழுதுகிறேன். முதல் முறையாகக் கடைசிக் கடிதம். பொருள் விளங்க எழுதத் தெரியவில்லை என்றால் மன்னியுங்கள்.

நான் இத்துணைக் காலமும் உலகைப் புரிந்து கொண்டது தவறாகவே இருக்கலாம். அன்பை, வழியை, வாழ்க்கையை, இறப்பைப் புரிந்து கொண்டது தவறாகவே இருக்கலாம். அவசரம் ஒன்றுமில்லை. ஆனால் எப்போதும் விரைந்து கொண்டே இருந்தேன். வாழ்க்கை தொடங்கி விட வேண்டும் என்ற தவிப்பு. இத்துணைக் காலமும், சிலருக்கு வாழ்க்கையே சாவக்கேடு. என் பிறப்பு எனக்கு நேர்ந்த உயிர்பறிக்கும் விபத்து. குழந்தைப் பருவத் தனிமையிலிருந்து என்னால் மீள முடியவே இல்லை. கடந்த காலத்திலிருந்து வருவது என் மதிக்கப்படாத குழந்தைமை.

இந்த நேரம் நான் காயபப்படவில்லை. எனக்கு வருத்தமில்லை. வெறுமையாக இருக்கிறேன், அவ்வளவுதான். என்னைப் பற்றிக் கவலை இல்லை. 

அது  இரங்கத்தக்க நிலை. எனவேதான் இப்படிச் செய்கிறேன்.

கண்ணாடியில் தெரியும் பொருட்கள் அவை தோன்றுவதை விட நெருக்கத்தில் இருப்பது (ஒருபோதும் இல்லை.) (உரோகித்தின் முகநூல் பக்கத்திலிருந்து)

மக்கள் எண்னைக் கோழை எனலாம். நான் போன பின் தன்னலக்கரன் அல்லது முட்டாள் எனலாம். என்னை என்ன சொல்வார்கள் என்ற கவலை எனக்கில்லை. சாவுக்குப் பின் வாழ்வு, பிசாசுகள், ஆவிகள் பற்றிய கதைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் ஏதாவது நம்புவதாக இருந்தால், விண் மீன்களுக்குப் பயணம் செய்யலாம் என்று நம்புகிறேன். வேறு உலகங்ளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

இந்தக் கடிதத்தைப் படிக்கிற நீங்கள் எனக்காக ஏதேனும் செய்யக் கூடும் என்றால், எனக்கு 7 மாதக் கால ஆய்வுதவித் தொகை வர வேண்டியுள்ளது. இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் உரூபாய். என் குடும்பத்தினரிடம் அதைக் கொடுக்கச் செய்யுங்கள். இராம்சிக்குக் கிட்டத்தட்ட 40 ஆயிரம் கொடுக்க வேண்டும். அவர் அதைத் திருப்பிக் கேட்டதே இல்லை. ஆனால் அருள்கூர்ந்து அவருக்கு அதைக் கொடுத்து விடுங்கள். என் இறுதி நிகழ்வு அமைதியாகவும் சரளமாகவும் நடக்கட்டும். வந்தேன் போனேன் என்பது போல் நடந்து கொள்ளுங்கள். எனக்காகக் கண்ணீர் உகுக்காதீர்கள். வாழ்வதை விடச் சாவது எனக்கு மகிழ்ச்சி என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

“நிழல்களிலிருந்து விண்மீன்களுக்கு.”

உமா அண்ணா, இந்த வேலைக்கு உங்கள் அறையைப் பயன்படுத்த வருந்துகிறேன்.

அம்பேத்துகர் மாணவர் சங்கக் குடும்பத்தினருக்கு, உங்களுக்கெல்லாம் ஏமாற்றமளிப்பதற்காக வருந்துகிறேன். நீங்கள் என்னை மிகவும் நேசித்தீர்கள். எதிர்காலம் சிறக்க வாழ்த்துகிறேன்.

கடைசியாக ஒரு முறை, செய் பீம்!

சம்பிரதாயங்களை எழுத மறந்து விட்டேன். என்னை நானே மாய்த்துக் கொள்ளும் இந்தச் செயலுக்கு யாரும் பொறுப்பில்லை. தங்கள் செயல்களாலோ சொற்களாலோ யாரும் இந்தச் செயலுக்கு என்னைத் தூண்டவில்லை.

இது என் முடிவு. இதற்கு நானே பொறுப்பு.

நான் போன பிறகு இதற்காக என் நண்பர்களையோ பகைவர்களையோ தொல்லைப்படுத்தாதீர்கள்!

[நாளைய தாழி மடலில்: ரோகித்து வேமுலா தற்கொலை ஏன்?]

(தொடரும்)

தோழர் தியாகு, தாழி மடல் 109