(தோழர் தியாகு எழுதுகிறார்  144 :சாதி என்பது வதந்தி அல்ல! தொடர்ச்சி)

வேங்கைவயல் குற்றப் புலனாய்வு பற்றிய குற்றாய்வு

வேங்கைவயல் திண்ணியத்தை நினைவூட்டுவதாக உள்ளது என்பது இரண்டுக்கும் பகைப்புலமாக உள்ள சாதியப் பாகுபாட்டையும் ஒடுங்கியர் (தலித்து மக்கள்) மீதான தீண்டாமை இழிவையும் மனத்தில் கொண்டு சொல்லப்பட்டது. அதே போது வரலாற்றில் இருவேறு நிகழ்ச்சிகள் நூற்றுக்கு நூறு முழுதொத்தவையாக இருப்பதில்லை. ஒவ்வொன்றையும் உருத்திட்டமாகப் பகுத்தாய (concrete analysis of concrete data) வேண்டும்.

திண்ணியம் பற்றிய உருத்திட்டமான தரவுகள் அனைத்தும் ஐயந்திரிபறக் கிடைத்த பிறகே அது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பைச் சட்ட நோக்கிலும் சமூக நோக்கிலும் ஆய்வு செய்து அந்தக் கட்டுரையை எழுதினேன். வேங்கைவயல் தொடர்பாகவும் இப்படி ஓர் ஆய்வை முன்வைப்பதற்கு எனக்குக் கிடைத்துள்ள தரவுகள் போதுமானவையாக இல்லை. உங்களிடம் இருக்கும் தரவுகளை எனக்குத் தந்துதவ வேண்டுகிறேன். அல்லது நீங்களே அப்படி ஓர் ஆய்வை எழுதினால் தாழியிலேயே வெளியிடலாம்.  

நான் இந்தச் சாதிய விசாரணை குறித்து மௌனம் காப்பது உங்களுக்கு வியப்பை அளிப்பதாகச் சொல்வதுதான் எனக்கு வியப்பாய் உள்ளது. நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்?

வேங்கைவயலில் திமிறி வழியும் சாதியத்தைக் கண்டிக்கவில்லை என்றும், வேங்கைவயல் புலன்விசாரணை முறையை ஆதரித்து எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுகிறார்கள் என்றும் வருத்தப்பட்டுள்ளீர்கள். அவர்கள் யாரானாலும் கண்டிக்க வேண்டியதே. நானும் உங்களோடு சேர்ந்து அவர்களைக் கண்டிக்கிறேன். கள்ள மௌனம் சாதிப்பவர்களும் கண்டனத்துக்குரியவர்களே. பாசக கூட திமுக ஆட்சி மீது களங்கம் கற்பிப்பதற்காக ஒடுங்கியர்(தலித்து)களுக்குக் காசு கொடுத்து அவர்கள் குடிக்கும் தண்ணீரில் அவர்களையே மலம் கலக்கச் செய்திருப்பார்கள் என்று கூறியது யார்? நானும் இதை நம்பவில்லை. தமிழ்நாட்டில் நாள்தோறும் நடந்து கொண்டிருக்கும் சாதிக் கொடுமைகள், இந்தியத் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் அலட்சியம், ஆளுநர் ஆர் என். இரவி, பாசக போக்குகள், சாதி இந்துக்களின் கூட்டு மனசாட்சி இந்த ஒவ்வொன்று குறித்தும் நீங்கள் எழுதியிருப்பதை அட்டியின்றி ஏற்றுக் கொள்கிறேன். இவ்வாறான போக்குகள் குறித்து நானும் எமதியக்கம் சார்பில் பல தருணங்களில் பேசியுள்ளேன்.

நான் இந்தச் சாதிய விசாரணை குறித்து மௌனம் காக்கிறேனா? உரக்கப் பேசுகிறேனா? என்று நீங்களும் தாழி அன்பர்களும் முடிவு செய்யுமுன் சில செய்திகளைக் கவனப்படுத்துகிறேன்.  

1)    சென்ற சனவரி 23ஆம் நாள் சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்ற ‘சிந்தனையாளன்’ பொங்கல் மலர் வெளியீட்டு நிகழ்வுக் கருத்தரங்கில் நான் பேசியது:

இந்த உரையில் இறையூர் வேங்கைவயல் பற்றி நான் பேசியுள்ள  ஒவ்வொரு பகுதியையும் எடுத்து எழுதி வைத்துக் கொண்டு அதில் என்ன சிக்கல் என்று சொல்லுங்கள். பேசுவோம்.

2)    கடந்த சனவரி 7ஆம் நாள் செங்கிப்பட்டியில் நடைபெற்ற பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் பொதுக்குழு வேங்கைவயல் கொடுமையைக் கண்டித்தது மட்டுமல்ல, முன்னணி சார்பில் புதுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்தது. அன்று மாலை செங்கிப்பட்டியில் நடைபெற்ற கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் நான் வேங்கைவயல் கொடுமை குறித்து விரிவாகப் பேசினேன். புதுக்கோட்டையில் சனவரி 11ஆம் நாள் தோழர் பாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

3)    வேங்கைவயல் கொடுமை குறித்து விரிவான ஆய்வுகள் செய்த தோழர் கரிகாலன் ((உ)ரூட்சு வலையொளி) அவர்களை அழைத்து, சனவரி 23ஆம் நாள் செய்தி அரசியல் அணுக்க(‘சூம்‘) நிகழ்வில் பேசச் செய்தோம்.

4)    பாசிச எதிரப்பு மக்கள் முன்னணியின் பொதுக் குழுவிலும் செயற்குழுவிலும் வேங்கைவயல் குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. பிறகு முன்னணி சார்பில் சனவரி 15ஆம் நாள் வேங்கைவயல் அறிக்கை குறித்து விரிவான அறிக்கை வெளியிட்டோம். இந்த அறிக்கையை வரைந்து ஒவ்வொரு கட்டமாகத் திருத்தம் செய்து இறுதியாக்கியதில் என் பங்கு முகன்மையானது என்று நான் சொல்வதை நம்புவீர்கள் அல்லவா?

இதோ அந்த அறிக்கை (முழுமையாக):

திமுக அரசே! இறையூர் வேங்கைவயலில் பட்டியலின சாதி மக்களுக்கான குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சாதி வெறியர்களைக் கண்டுபிடித்து வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்! கடந்த ஓராண்டில் நடந்த சாதிய வன்கொடுமைகளைப் பற்றி உயரதிகார நீதி விசாரணை நடத்துக!

தமிழக மக்களே! சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து போராடுக!

தொடரும்

தோழர் தியாகு,

தாழி மடல் 113