(தோழர் தியாகு எழுதுகிறார்  148 : சுசி, கவெ: அரசியல் உயிர்!- தொடர்ச்சி)

அஞ்சலட்டை

இனிய அன்பர்களே!

‘சுவருக்குள் சித்திரங்கள்’ நூல் வடிவம் பெற்ற போது “அறிவுப் பாலம்” என்ற தலைப்பில் அதற்கோர் அறிமுகவுரை எழுதினேன். அதன் முதல் பத்தி இதுதான்:

“செத்தும் கொடுத்தவர் சீவலப்பேரியார். சௌபாவின் பாண்டி குறித்து நான் விடுத்த மடலை வெளியிட்ட சூனியர் விகடனார் அத்தோடு விடாமல் என்னைத் தேடிப் பிடித்து, சிறை அனுபவத் தொடர் எழுதச் சொன்னார். ‘சுவருக்குள் சித்திரங்கள்’ தீட்டத் திட்டிவாசல் திறந்தது இப்படித்தான்.”

இந்தச் சுருக்கத்தைக் கொஞ்சம் விரித்தெழுதினால் சுசி பிறந்த கதை தெரிய வரும். அப்போது 1992-93 காலம். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ‘என்சிபிஎச் சு’ தலைமையகத்தில் மூலதனம் தமிழாக்கம் சீர்மைப் பணியில் ஈடுபட்டிருந்தேன். சாந்தாராம், மணிகண்டன் (?), ஆமீனா ஆகியோர் என் உதவியாளர்கள். மாலையில் மட்டும் இரா. கிருட்டிணையா வந்து போவார். அப்போது சூனியர் விகடனில் சௌபா ‘சீவலப்பேரி பாண்டி’ என்ற தொடரை எழுதிக் கொண்டிருந்தார். பாண்டி என் சிறை நண்பர். அது பற்றி சுசி-இல் எழுதியுள்ளேன். பாண்டிக்காகவும் சௌபாவின் ஈர்ப்பான எழுத்துக்காகவும் தொடர்ந்து சூவியில் அந்தத் தொடரைப் படிக்கலானேன். பாண்டி சிறைப்படக் காரணமாய் இருந்த வழக்கு குறித்து எனக்கே தெரியாத செய்திகளையெல்லாம் சௌபா எழுதியிருக்கக் கண்டு வியந்து போனேன். சுவைபடப் போய்க் கொண்டிருந்த கதையில் சிறைக் கட்டம் வரட்டும் என ஆவலாகக் காத்திருந்தேன். பாண்டி சிறையிலிருந்து தப்பிய கதை எனக்கு முழுமையாகத் தெரியும். சௌபாவால் இதை எப்படிச் சொல்ல முடிகிறது? என்று பார்க்க என்று ஆவலாகக் காத்திருந்தேன்.

 திருச்சிராப்பள்ளியிலும் கடலூரிலும் பல்லாண்டுக் காலம் என்னோடு சிறையிலிருந்த ஒரு தோழர் விடுதலைக்குப் பின் சென்னை வந்து ஒரு பாத்திரக் கடையிலும் பாத்திரக் கடை உரிமையாளருக்குச் சொந்தமான திருமண மாளிகையிலும் வேலை செய்து கொண்டிருந்தார். அவர் பெயர் கருணாநிதி. அவர், அண்ணன் சிவப்பிரகாசம், அப்பா ஆகிய மூவரும் ஒரே கொலைவழக்கில் வாழ்நாள் (ஆயுள்) சிறைத்தண்டனை பெற்று வந்தார்கள். அவர்கள் முடிதிருத்தத் தொழிலாளர்கள். சிறையிலும் அதே வேலைதான்.

 கருணாநிதியை நண்பர்கள் “கலைஞர்” என்று அழைப்பது வழக்கமாயிற்று. நான் மட்டும் கருணா என்றுதான் அழைப்பேன். கலைஞர் என்று விளித்து இருவரையும் அவமதிக்க வேண்டாமே என்பேன். கருணா பற்றிச் சொல்ல வேண்டியவை நிறைய உண்டு, சொல்வேன்.

இப்போதைக்கு… 1992-93 காலத்தில் நான் அம்பத்தூரில் ‘என்சிபிஎச்சு’ அலுவலகத்தில் ஒரு புத்தகக் கிடங்கு போன்ற அலுவலகத்தில் உட்கார்ந்து மூலதனம் சீர்மைப் பணி செய்து கொண்டிருந்த போது, சூனியர் விகடனில் சௌபா ‘சீவலப்பேரி பாண்டி’ தொடர் எழுதிக் கொண்டிருந்த போது, கலைஞர் என்னும் கருணாநிதி என்னும் கருணா  அடிக்கடி என்னை வந்து பார்த்துப் போய்க்கொண்டிருந்தார். இருவரும் சௌபாவின் தொடர் பற்றி நிறையப் பேசிக் கொண்டிருப்போம். சூவி கடைக்கு வந்ததும் அதை எனக்கு வாங்கி வருவதே கருணாவாகத்தான் இருக்கும்.

சீவலப்பேரி பாண்டி கதையில் அவர் சிறையிலிருந்து தப்பிச் செல்லும் செய்தியை சௌபா முழுக்கக் கற்பனையாக எழுதியிருப்பது தெரிந்து விட்டது. இதை நான் கருணாநிதியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். உடனே அவர் அஞ்சலட்டையில் இந்தச் செய்தியை சூவிக்கு எழுதிப் போட்டு விட்டார். “பாண்டி பற்றி எங்கள் தோழர் தியாகுவிடம் கேட்டு எழுதுங்கள்” என்றும் எழுதி விட்டார். இதற்கு மேல் எதுவும் நடக்கும் என்று நாங்கள் நம்பவில்லை.

அப்போதெல்லாம் இயக்கப் பணிக்காக அடிக்கடி மதுரை போய் வருவதுண்டு. அந்த முறை மு.கருப்பையாவின் அறைக்கே சௌபா வந்து விட்டார்: “பாண்டி தப்பியமை பற்றி நான் எழுதியது கற்பனைதான். வேறு வழியில்லை. அந்தக் காவல் நிலையத்தில் ஏதோ எழுதி வைத்திருந்தான். அதை வைத்து நான் சமாளித்தேன். ஆனால் விகடன் ஆசிரியர் “தியாகுவிடம் கேட்டு உண்மையை எழுதிப் போடு” என்கிறார்.”

“சரி, நான் என்ன செய்யட்டும்?”

சூவியில் இந்தத் தொடர் முடிந்த பின் விரிவான கடிதம் எழுதுங்கள். அவர்கள் அதை அப்படியே வெளியிடுவார்கள்.”

 அப்படியே அப்போது கருணா உடனிருந்து தூண்ட நானும் செய்தேன். அடுத்த இதழில் அது அப்படியே வெளிவந்தது. அத்துடன் இதையெல்லாம் மறந்து விட்டு மற்ற வேலைகளில் மூழ்கி விட்டேன். சில நாள் கழித்து விகடனிலிருந்து எனக்கு ஓர் அஞ்சலட்டை வந்தது: “ஆசிரியர் உங்களைப் பார்க்க விரும்புகிறார்.”

 அவசரமில்லாமல் மெதுவாக ஒருநாள் போனேன். உதவி ஆசிரியர் இராவு என்னைப் பார்த்தார். “நீங்கள் சூவியில் எழுத வேண்டும் என்று ஆசிரியர் விரும்புகிறார். சரி என்றால் உங்கள் விருப்பம்போல் ஒரு தலைப்பில் தொடர்ந்து எழுதுங்கள்.” 

 “என்னை எப்படி உங்களுக்குத் தெரியும்? சின்னக் குத்தூசி சொன்னாரா?”

 “இல்லை, நீங்கள் எழுதிய ஒரு கடிதம் போதும் உங்களைத் தெரிந்து கொள்ள. வாசன் அவர்களுக்குப் புதுமைப்பித்தனைத் தெரிந்து கொள்ள அவர் எழுதிய ஒரே அஞ்சலட்டை போதுமானதாக இருந்தது, தெரியுமா?”

“சரி, நீங்கள் என்ன எழுத விரும்புகிறீர்கள்?”

“இரண்டு யோசனை உண்டு.”

“இரண்டில் எது வேண்டுமானாலும் எழுதுங்கள். அதற்கு முன் ஆசிரியரைப் பார்த்து விடுங்கள்.”

ஆசிரியர் பாலசுப்பிரமணியம் எனக்கு ஓர் உறுதி கொடுத்தார்.

நாளை சொல்கிறேன்…

தொடரும்

தோழர் தியாகு,

தாழி மடல் 119