(தோழர் தியாகு எழுதுகிறார்  149 : அஞ்சலட்டை தொடர்ச்சி)

கீழடியும் தென்முடியனூரும்

மதுரையிலிருந்து  12 அயிரைப்பேரடி(கிலோமீட்டர்) தென்கிழக்கே சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் இரண்டு காணி(ஏக்கர்) பரப்பளவில் 18.3 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க. தாலின் திறந்து வைத்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூரில் பட்டியலின மக்கள் கோயிலில் நுழைந்த பின்னர் சாதி இந்துக்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

அகழ் வைப்பகம் எனப்படும் இந்த அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆறு காட்சிக் கூடங்களில் பழங்கால மனிதர்களின் வாழ்வியலைச் சித்திரிக்கும் வகையிலான ஓவியங்கள், வைகைக் கரையில் வாழ்ந்த மக்களின் வேளாண்மை, நீர் மேலாண்மை குறித்து விளக்கும் தொல்பொருட்கள், பழங்காலத்திலேயே தமிழ்ச் சமூகம் எழுத்தறிவு பெற்று வாழ்ந்ததற்கான சான்றுகளாக உள்ள தொல்பொருட்கள், இரும்பு நெசவு கைவினைத் தொழில்கள், கடல் வணிகம் செய்ததற்கான தொல்பொருள் சான்றுகள், கலை சார்ந்த தொல்பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

தென்முடியனூர் முத்துமாரியம்மன் கோயிலுக்குள் நுழைய நீண்ட காலமாகவே பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் தாங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கடந்த 30 ஆண்டுகளாகவே அம்மக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

15 நிமிட ஒலி-ஒளி காட்சியகம், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைத் தொடுதிரையில் அறிந்து கொள்ளும் வசதி, 2 நிமிட அசைவூட்டக் காணொளி (அனிமேசன் வீடியோ) காட்சி ஆகியவையும் இந்தக் கூடங்களில் இடம்பெற்றுள்ளன.

வட்டார வளர்ச்சி அலுவலர் இருதரப்புச் சார்பாளர்களிடமும் சனவரி 25  அன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் அடிப்படையில் சனவரி 30 அன்று பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்லலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.

கீழடி அருங்காட்சியகத்தில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட தனித்துவமான கலைப் பொருட்கள் உள்ளன. இவை 2018  முதல் தமிழக அரசின் தொல்லியல் துறையால் அகழ்வாய்வின் 4ஆம், 8ஆம் கட்டங்களுக்கிடையே தோண்டி எடுக்கப்பட்டவை ஆகும்.

தென்முடியனூரில் பட்டியலின மக்கள் கோயில் நுழைவின் போது மாவட்ட ஆட்சியர் தொடங்கிப் பலரும் மரியாதையுடன் முன்னிறுத்தப்பட்டனர். அனால் அந்நிகழ்வுக்குப் பிந்தைய விளைவுகளை எதிர்கொள்ள அவர்கள் துணை நின்றார்களா என்பது கேள்விக்கு உரியதாகி விட்டது.

கீழடி அகழாய்வுகள் சங்கக் காலத்தைப் பொது ஊழிக்கு முன் 300க்கும் பொது ஊழி 300க்கும் இடைப்பட்ட காலம் என்பதிலிருந்து பொது ஊழிக்கு முன் 6 ஆம் நூற்றாண்டுக்குத் தள்ளி விட்டன.

“ஆதிக்கச் சாதியினர் இந்தக் கோயில் நுழைவை எதிர்க்கின்றார்கள், நாங்கள் பாதுகாப்புப் பணியாளர்களை நியமித்துள்ளோம்; அசம்பாவிதம் நடந்தால் சட்டம் தன்கடமையைச் செய்யும்” எனக் காவல் துறை அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர். ஆனால் அதையெல்லாம் மீறி அங்கு வன்முறை நிகழ்ந்துள்ளது.

கீழடி அகழாய்வின் முதல் இரு கட்டங்களை வழிநடத்திய கண்காணிப்பு அகழாய்வாளர் கே. அமர்நாத்து இராமகிருட்டிணா அண்மையில் இந்திய அகழாய்வுத் துறைக்கு அளித்துள்ள அறிக்கை சங்கக் காலம் பொது ஊழிக்கு முன் 800 ஆண்டுகள் என்று கூறியுள்ளார்.

கோயில் நுழைவில் பங்கெடுத்த பட்டியலின மக்கள் மிரட்டப்பட்டனர். ஒரு பெண்ணின் பெட்டிக் கடை கொளுத்தப்பட்டது.

அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் ஒரு மணி நேரத்துக்கு மேலாகத் தொல்பொருட்களை ஆர்வத்துடன் பார்வையிட்டார். அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த மண்பானைக்கு அருகில் நின்று தற்படம்(செல்ஃபி) எடுத்துக் கொண்டார்.  

நிகழ்விடத்தைப் பார்வையிட்ட காவல் துறையினர் ‘புகார் தரப்படவில்லை’ எனும் காரணத்தைச் சொல்லி முதலில் வழக்குப் பதிவு செய்யவில்லை. பிறகு பதியப்பட்ட வழக்கு பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்காகப் பதிவு செய்யபப்பட வில்லை. இதை விடக் கொடுமையாகப், பட்டியலின மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தடுக்கும் வகையில் ஆதிக்கச் சாதியினர் தங்கள் கடைகளை மூடியுள்ளனர். பட்டியலின மக்களிடமிருந்து பால் கொள்முதல் போன்ற வருத்தகத் தொடர்புகளையும் துண்டித்துள்ளனர். வேளாண் நிலங்களுக்கான தண்ணீரையும் தடுத்துள்ளனர்.  

தொடரும்

தோழர் தியாகு,

தாழி மடல் 120