(தோழர் தியாகு எழுதுகிறார் 155 : காந்தியாரின் இந்தி பிரசார சபாவும்

மோதியாரின் தமிழ் பிரசார சபாவும் 2 – தொடர்ச்சி)

அன்பர் தமிழ்க்கதிர் கேட்கிறார்

இன்றைய தாழி (172) மடலில் பொதுமை, குமுகியம், குடியாட்சியம், தேசியம் என்ற தலைப்பில் தாங்கள் வரைந்த கட்டுரையில் – மக்கார்த்தியம் போன்ற பொதுமை வெறுப்புக் கொள்கைகள் எப்படிக் குடியாட்சியத்தை ஒடுக்க முயன்றன என்பது ஒரு வரலாற்றுப் பாடம் என்றுள்ளீர்கள்.

“மக்கார்த்தியம்” என்றால் என்ன தோழர்?

தாழி விடை:

சோசப்பு மக்கார்த்தி என்றோர் அமெரிக்கப் பேரவையினர் (செனட்டர்)  1950 பிப்பிரவரியில் குண்டு போடுவது போல் ஒரு செய்தி வெளியிட்டார், அமெரிக்க அயலுறவுத் துறையில் 205 பொதுவுடைமையர் வேலை செய்வதாக! அத்தனைப் பேரும் உறுப்பினர் அட்டை வைத்துள்ள பொதுமைக் கட்சியினர் என்றார்!

இதிலிருந்து அவர் பரப்பிய சிவப்பு பீதி அமெரிக்காவில் பொதுமைக் கொள்கைக்கும் கொள்கையருக்கும் எதிரான நடவடிக்கைகளுக்கு வழிகோலிற்று. இரண்டாம் உலகப் போரில் சோவியத்து ஒன்றியம் பெற்ற வெற்றியும், அடுத்துப் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்த மாற்றமும், 1949 சீனப் புரட்சியின் வெற்றியும், 1950இல் வெடித்த கொரியப் போரும், சோவியத்து அணுகுண்டுச் சோதனையும், பல நாடுகளில் செவ்வியக்க வளர்ச்சியும்… முதலமை (முதலாளித்துவ) நாடுகளில் பொதுமைப் புரட்சி பற்றிய அச்சத்தைத் தோற்றுவித்தன.

பனிப்போர்க் காலம் தொடங்கி விட்டது. சிவப்பு ஊடுருவல் பற்றிய அச்சம் அமெரிக்காவிலும் பரவியதைத்தான் மக்கார்த்தியம் குறித்தது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் மக்கார்த்தியர்களின் கண்ணுக்கு எல்லாமே சிவப்பாய்த் தெரிந்து அச்சுறுத்தின.

மக்கார்த்திய பீதியைப் பயன்படுத்திக் கொண்டு எழுத்தாளர்கள், கலைஞர்கள், அரசுப் பணியாளர்கள், அறிவுத்துறையினர் இடையிலான இடதுசாரிகளை அமெரிக்க அரசு ஒடுக்கியது. சிறையிலடைக்கபட்டவர்கள் சிலர், நாடுகடத்தப்பட்டவர்கள் சிலர். விசாரணை என்று அலைக்கழிக்கப்பட்டவ்ர்கள் சிலர்.

அனைத்துக்கும் உச்சமாக, அணுகுண்டு இரகசியங்களை சோவியத்துக்கு விற்ற குற்றச்சாற்றில் 1950இல் தளைப்படுத்தப்பட்ட சூலியசு உரோசன்பர்க்கு, ஈத்தல் உரோசன்பர்க்கு இணையர் மீதான கொலைத் தண்டனை 1953இல் நிறைவேற்றப்பட்டது. அவர்களின் உயிர் காக்க உலகெங்கும் நடந்த போராட்டங்களை மதிக்காமல் அவர்களை மின்சார நாற்காலியில் அமர்த்திக் கொன்றது அமெரிக்க வல்லரசியம்.  

மக்கார்த்தியம் மக்கார்த்தியோடு மறைந்து விடவும் இல்லை. அமெரிக்க எல்லைகளோடு நின்று விடவும் இல்லை. நாம் பார்த்துக் கொண்டிருக்கும் பீமா கொரேகான் வழக்கு கூட (‘அருபன் நக்சல்’ குற்றச்சாட்டு) இந்திய மக்கார்த்தியத்தின் வெளிப்பாடுதான்! கருத்து வேறுபாடுகளைப் பேசும் போது இது சீனச் சார்பு, இவர் சீன முகவர் என்று முத்திரையிட்டு உள்நோக்கம் கற்பிக்கும் அணுகுமுறையும் மக்கார்த்திய மனப்போக்குதான்! பொதுமை வெறுப்பைச் சொல்லிக் குடியாட்சிய உரிமைகள் மறுக்கப்படும் போதெல்லாம் மக்கார்த்தியம் தலைதூக்குகிறது.      

தொடரும்
தோழர் தியாகு
தாழி மடல்
 174