(தோழர் தியாகு எழுதுகிறார் 159 : மௌனத்தின் சொல்வன்மை தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

வைக்கோல் போரில் மாடு படுத்துக் கிடக்க நியாயமுண்டு. ஆர்.எசு.எசு. ஆளுநர் ஆர்.என். இரவி படுத்துக் கிடக்க நியாயமே இல்லை. வைக்கோல் போரில் படுத்துக் கிடக்கவே நியாயமில்லை என்றால், சட்டப் பேரவை இயற்றும் சட்டமுன்வடிவுகளைக் கீழே போட்டு ஏறிப் படுத்துக் கிடக்க ஏது நியாயம்?

ரவியின் அடாவடித்தனத்தால் முடங்கிக் கிடக்கும் முன்முயற்சிகளில் ஒன்று சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான தமிழக அரசின் முன்னெடுப்பாகும். இது குறித்து சித்த மருத்துவப் பேரியக்கம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு அவர்கள் கேட்டுள்ள வடிவில் ஆதரவு தாருங்கள், தமிழர்களே!

சித்த மருத்துவப் பேரியக்கம் வேண்டுகோள்

சித்த மருத்துவம் – தமிழர்களின் மாபெரும்  பண்பட்ட வாழ்வியலின் மருத்துவப்  பேரறிவு ஆகும்.

தமிழர்களின் நாகரிகம். பண்பாடு, மொழி, இலக்கியம் போன்றவை எவ்வாறு  சிறப்புற்று விளங்குகின்றனவோ அதே போன்று சிறப்பு மிக்கதே சித்த மருத்துவம். 

சித்த மருத்துவம்  பல ஆயிரம் ஆண்டுகளாக மக்களின் மருத்துவமாக  விளங்கி வருகிறது .உலகளாவிய நோய்த்தொற்று பரவும் (CORONA, Dengue) இக்காலங்களில் கூட மிகச் சிறப்பாகச் செயல்பட்டு  மக்களைக் காத்து  வருகிறது.

ஆனால் நவீன அறிவியல் உகத்தில் சித்தமருத்துவம் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள, மெய்ப்பிக்க உயர் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் போன்றவை அடிப்படைத் தேவைகளாக உள்ளன. 

அதனடிப்படையில் சித்த மருத்துவர்கள் மற்றும் தமிழக மக்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்றுத் தமிழக அரசு சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. இதுவே சித்த மருத்துவத்திற்கென்று அமையப்போகும் முதல் பல்கலைகழகம் ஆகும். ஆனால்  அருத்தமற்ற காரணங்களுக்காகத்  தமிழக ஆளுநர். திரு ஆர்.என். இரவி அவர்கள் இந்தப் பல்கலைகழகச் சட்ட வரைவிற்கு ஒப்புதல் அளிக்காமல்   இரண்டு ஆண்டுக் காலமாகக் காலந்தாழ்த்தி வருகிறார்.

மிக நீண்ட காலம் கிடப்பில் வைக்கப்பட்டுள்ள  வரைவுகள் ‘இறந்ததற்கு’ச் சமம் என்று  தன்னிச்சையாக அறிவிக்கிறார்.

அவரின் இத்தகைய செயல் சித்த மருத்துவர்கள்,  ஆர்வலர்கள் மற்றும் உலகத்  தமிழ் மக்களிடையே பெரும்  அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இச்சூழ்நிலையில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதை உறுதி செய்ய வேண்டி  நாம் அனைவரும்  உலகம் தழுவிய சில செயல்பாடுகளை முன்னெடுப்பது நம் கடமையாக உள்ளது  . 

அந்த வகையில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு விரைவில் ஒப்புதல் அளித்திட வலியுறுத்தி ஆளுநர் அவர்களிடம் கோரிக்கை வைக்கும் விதமாகவும்,  உலகத்  தமிழ் மக்கள் சித்த மருத்துவப் பல்கலைகழகத்தை எந்த அளவிற்கு எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிவிக்கவும் ஒரு ONLINE VOTING METHOD சித்த மருத்துவப் பேரியக்கத்தின் சார்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. நம்முடைய கோரிக்கைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் Change.org என்ற இணையத்தளத்தில் பதியப்பட்டுள்ளது. 

நம் கோரிக்கைகளை வாசித்து விட்டுச் சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு ஆதரவாக  நாம் அனைவரும் வாக்களித்தால் போதுமானது!!

தாங்கள் சார்ந்த அமைப்புகள், இயக்கங்கள், நண்பர், சுற்றத்தார் போன்றோர்களையும் ஆதரவு அளிக்க   வேண்டுகிறோம்.

இந்திய, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியசு , ஆத்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் உலகெங்கும் உள்ள  தமிழர்களிடம்  தங்கள் மேலான ஆதரவை    வாக்களித்துத் தெரிவிக்க வேண்டுகிறோம் .  உலகம் தழுவிய தமிழர்கள் நாம் ஒன்றிணைந்து  சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை அமைத்திடுவோம் –  உறுதியாக!

 தமிழால் இணைவோம் !

சித்த மருத்துவப்  பல்கலைக்கழகம்   அமைப்போம்!

தொடர்புக்கு:

மின்வரி :globalsiddhasociety@gmail.com

மரு.விசய் விக்கிரமன் : 98943 08584

பேரா.அமலானந்தன் : 94892 35387

மரு.தீனதயாளன் : 9626719626