(தோழர் தியாகு எழுதுகிறார் 168 : பார்ப்பனப் பெருவாழ்வு! 4/8 தொடர்ச்சி)

பொருளியல் நலிவு என்ற பெயரில்

பார்ப்பனப் பெருவாழ்வு! 5/8

 ஆனால் விபிசிங்கு அவர்கள் பதவி போனால் போகட்டும் என்று இதைச் செயல்படுத்துவதில் உறுதியாக இருந்தார். அப்படி அவர் உறுதியாக இருந்ததால் மண்டல்குழு பரிந்துரை செயலுக்கு வந்தது. நீதிமன்றத்தில் போய் வழக்குப் போட்டார்கள். அதுதான் இந்திரா சாகுனி வழக்கு. அதில் பெரும்பான்மை நீதிபதிகள் செல்லும் என்றார்கள். ஒரு சிறுபான்மையினர் செல்லாது என்றார்கள். விபிசிங்கு அரசைக் கவிழ்த்து விட்டு நரசிம்மராவு  வந்தார். ஆந்திரத்தின் சூழ்ச்சிமிக்க பார்ப்பன நரி! அவர் ஆட்சிக்கு வந்த உடனேயே என்ன செய்தார் தெரியுமா?

 ஏற்கெனவே நம் சிபிஎம் தோழர்கள் அங்கே இருக்கிறார்கள். “ஏழைப் பார்ப்பனர்களைக் கொஞ்சம் கவனிக்க மாட்டீர்களா? அவர்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டுமே” என்று பேசினார்கள். உடனே அவர் பார்த்தார், “10 விழுக்காடு இந்தா எடுத்துக் கொள்” என்றார்.

ஏழைப் பார்ப்பனர்களுக்கு ஓடு வைத்திருந்தால் சோறு போடு! வங்கிக் கணக்கில் பணம் போடு! கடை வைத்துக் கொடு! அல்லது வேதம் கற்றுக் கொடு! மந்திரம் சொல்லிப் பிழைத்துக் கொள்ளட்டும்! இட ஒதுக்கீடு எதற்கு? வேலைவாய்ப்பில் அவர்களுக்கு இடம் இல்லையா? கல்லூரியில் அவர்களுக்கு இடம் இல்லையா? பொறியியல் கல்லூரி,  மருத்துவக் கல்லூரி என அனைத்துக் கல்லூரிகளிலும் அவர்கள்தான் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் மருத்துவர் என்றாலே அவர்கள் மருத்துவ சாதிதான். ஏன்?  அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டப்படாத மக்கள்! ஆனால் பார்ப்பனர்கள் அங்கே போக மாட்டார்கள். ஏன் போக மாட்டார்கள் என்றால், மருத்துவன் என்றால் நோயாளியைத் தொட்டுப் பார்க்க வேண்டும், கட்டி இருக்கும்  சீழ் துடைக்க வேண்டும், இந்த வேலைக்கு நாம் எப்படிப் போவது? எனவே  பார்ப்பனர்கள் போக மாட்டார்கள். ஆனால் இப்போது என்ன செய்கிறார்கள்? மருத்துவர் என்றால் நோய்  போக்குவது அல்ல காசு குவிப்பதே நோக்கம். எனவே இப்போது எல்லாம் அதை விட்டு விட்டார்கள். அந்தத் தீண்டாமை எல்லாம் வேண்டா, நானே தொட்டு வைத்தியம் செய்கிறேன், இதய அறுவை சிகிச்சையா? நானே செய்கிறேன் என்று வந்து விட்டார்கள். இப்போது மருத்துவக் கல்லூரியில் போட்டி! ஒரு காலத்தில் என்ன செய்தார்கள்? நீங்கள் சமற்கிருதம் படித்தால்தான் மருத்துவத்தில் சேர முடியும் என்றார்கள். சமற்கிருதத்தை யார் படிப்பார்கள் யார் வீட்டுக் குழந்தை படிக்கும்? காயத்திரி மந்திரம் சொன்னால்தான் உனக்குக் கல்வி என்றால், யார் போய்ச்சொல்வது? 

 முதலில் மண்டல் குழுவிலும் வெறும் வேலைவாய்ப்புதான்! 2006ஆம் ஆண்டு அருசுன் சிங்கு கல்வி அமைச்சராக இருக்கிற போதுதான் புதிதாக ஒரு தீர்மானம் கொண்டுவந்து 2008இல் இருந்து கல்வியிலான இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது இந்திய உச்ச நீதிமன்றத்தில் உட்கார்ந்திருக்கிற நீதிபதிகள் உயரமான நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டு என்ன கேள்வி கேட்டார்கள் தெரியுமா? இதற்கு என்ன அவசரம்? எதற்கு? இட ஒதுக்கீட்டிற்கு என்ன அவசரம்? என்று கேட்டார்கள். பொறுத்துக் கொள்ளக் கூடாதா? பிறகு பார்ப்போமே? ஏன் இந்த இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதற்கு முன்பு சாதிவாரிக்  கணக்கெடுப்பு நடத்தி விட்டீர்களா? பிற்படுத்தப்பட்டவர்கள் எத்தனை விழுக்காடு? என்ற கணக்கு இருக்கிறதா?  அரசு வழக்குரைஞர் சொல்வீர்களா? என்று கேட்டார்கள். அதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு பிறகு பார்ப்போம் என்றார்கள். 

 ஐயா, இந்தக் கணக்கை எல்லாம் மண்டல் எடுத்தார், கணக்கெடுப்பு செய்தார். அப்படியானால் இந்தக் கணக்கே எடுக்காமல் நீங்கள் எப்படி முடிவுக்கு வருகிறீர்கள்? நீதிபதிகள் எந்த ஆய்வுமே இல்லாமல் நிறுத்தி வைத்தார்கள். பிறகுதான் வெற்றி பெற்று அந்த வழக்கு வந்தது கல்விக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்கிற போது மருத்துவக் கல்விகளில் ஒரு பொது ஒதுக்கீட்டை உருவாக்கினார்கள். ஏன்? இந்தியா முழுவதும் மருத்துவக் கல்லூரிகள் இல்லை, எனவே தொடங்கு என்று சொல்வதற்குப் பதிலாக இருக்கின்ற இடங்களில் இந்தியா முழுவதிலிருந்தும் ஆட்களைச் சேர்த்துக் கொள். நீ இந்திக்காரரா குசராத்தியரா மராட்டியரா இவர்கள் அனைவருக்கும் தமிழ்நாட்டில் இடம் கொடு. இது அனைத்திந்திய ஒதுக்கீடு!

 சரி, கொடுப்போம். அடுத்த கேள்வி என்ன தெரியுமா? அதில் இட ஒதுக்கீடு உண்டா?

 எசுசி எசுடிக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் அல்லவா? நீதிபதிகள் சொன்னார்கள் – அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் போய்ச் சேர்த்துக் கொள் என்றார்கள். அதற்குப் பிறகும் பத்து ஆண்டுகள் கழித்துப் போராடித்தான் அதற்குள்ளே இட ஒதுக்கீடு பெற முடிந்தது நம்மால்! இவ்வளவு வரலாற்றுப் பின்னணிகள் இந்த இடஒதுக்கீட்டிற்குப் பின் இருக்கிறது.

நண்பர்களே! இது நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்தது. நம்முடைய எதிர்காலக் குழந்தைகள் பேரன் பேத்திகள் மகன் மகள் என அவர்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்த செய்தி இது நம் மூதாதையர்கள் போராடிப் பெற்றுக் கொடுத்த உரிமையை ஒரு மோதியும் அமித்துசாவும் சட்டென்று பறித்துக் கொண்டுசெல்ல முயல்கிறார்கள் மொத்தத்தில் அவர்களுடைய திட்டம் இவ்வளவுதான்! பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு என்பதுதான்!

 பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு என்றால் என்ன பொருள் தெரியுமா? இட ஒதுக்கீட்டிற்கு சமாதி கட்டுவது என்று பொருள்.

நீங்கள் நோயற்றவனுக்கு மருந்து கொடுக்க வேண்டும் என்று சட்டம் போட்டால் நோயுள்ளவனுக்கு மருந்து கிடைக்காது என்று பொருள். புளிச்ச ஏப்பக்காரனுக்குத்தான் விருந்து என்றால் பசி ஏப்பகாரனுக்குப் பட்டினி போகாது என்று பொருள். இதுதான் உண்மை. இந்தத் திட்டம்தான் பார்ப்பனர்களுக்கான இந்த இட ஒதுக்கீடு. சமூக வழியில், கல்வி வழியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் இட ஒதுக்கீடு என்று தீர்ப்பு இருப்பதால் நரசிம்மராவு கொண்டு வந்த திட்டத்தை நீதிமன்றம் நிராகரித்து விட்டதால், அப்போது என்ன செய்தார்கள்பெயரை மாற்றிக் கொண்டார்கள் மிகத் திறமையாக மாற்றி விட்டார்கள். பொருளாதரத்தில் பின் தங்கியோர் (‘Economically Backward‘) என்ற வார்த்தையே இல்லை. அப்படி இருந்தால் செல்லாது. வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு வழக்கில் தீர்ப்பு வந்து விட்டது அப்படியெல்லாம் கொடுக்கவே முடியாது. ஒரு சாதிக்குத் தனியாகக் கொடுக்க முடியாது சமூகத்திலும் பொருளாதரத்திலும் பின் தங்கியோர் (Socially and ecomomically backward‘)’க்குக் கொடுக்க முடியாது என்று எல்லாம் தெளிவாகி விட்டது நீதிமன்றத்தில். எனவே இந்த வார்த்தையை அப்படியே மாற்றி பொ.ந.பி.- பொருளாதரத்தில் நலிந்த பிரிவு (E.W.S – Economically weaker section)– என்று புதுக் கதை எழுதுகிறார்கள். யார் அவர்கள்? ஆண்டு ஒன்றுக்கு எட்டு இலட்சம் உரூபாய் சம்பாதிப்பவர்கள்! தினமும் 2,200 கல்லா கட்டுபவர்கள்! இவர்கள்தான் ‘எக்கனாமிக்கலி வீக்கர் செக்சன்’ அப்போது உண்மை என்ன? பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதுதான்!

தெருமுனைக் கூட்டம், கீழ்க்கட்டளை, 2022 நவம்பர் 22

 தொடரும்
தோழர் தியாகு

தாழி மடல் 153