(தோழர் தியாகு எழுதுகிறார் 171 : பார்ப்பனப் பெருவாழ்வு! 7/8 தொடர்ச்சி)

பொருளியல் நலிவு என்ற பெயரில்

பார்ப்பனப் பெருவாழ்வு! 8/8

 இதையெல்லாம் செய்யாமல் அவர்கள் மொழி அரசியல் செய்தார்கள் என்று புலம்பினால்? வயிற்றில் குத்திக் கொண்டாளாமே! குந்தி தேவி அம்மிக்குழவியை எடுத்து, அப்படிக் குத்திக் கொள்ள வேண்டுமா? இது அவ்வளவு எளிதல்ல.

 இரண்டாவதாக இன்னொன்றைப் புரிந்து கொள்ளுங்கள்: மொழி அரசியல் என்பது வெறும் மொழி அரசியல் அல்ல. அது ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்கான அரசியல். தமிழ் ஆளாமல் தமிழர்கள் ஆள முடியாது. தமிழர்கள் என்றால், உழைக்கும் தமிழர்கள், ஒடுக்குண்ட தமிழர்கள்! உண்மையான தமிழர் ஆட்சி என்பது பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுடைய ஆட்சி! தொழிலாளர்கள் உழவர்களுடைய ஆட்சி! அவர்கள்தான் தமிழர்கள்! அவர்களுக்குத்தான் தமிழ் தேவை, மற்றவர்களுக்கு அல்ல. பார்ப்பனர் கலிபோர்னியாவிற்குப் போகலாம், வேறு எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் போகலாம். அந்தந்த ஊரின் மொழிகளைக் கற்றுக் கொள்ளலாம்.

 ஆற்காடு நவாபுகளிடம் மந்திரிகளாக இருந்தது யார்? ஐதராபாத்து நிசாமிடம் மந்திரி வேலை பார்த்தது யார்?  உருது மொழியை கற்றுக் கொண்டு மந்திரி வேலை பார்த்தவர்கள் பார்ப்பனர்கள்! நவாபுகள் இடம் சென்று பாரசீகம் கற்றுக்கொண்டு மந்திரி வேலை பார்த்தவர்கள் பார்ப்பனர்கள்! பிரித்தானியரிடம் சென்று ஆங்கிலம் கற்றுக்கொண்டு அவனுக்குத் தொண்டு செய்தவர்கள் பார்ப்பனர்கள்! அவர்களால் எந்த மொழிக்கும் போக முடியும். ஆனால் எங்களுக்கு இது தாய் மண்! தாய் மொழி! இது தாய் நிலம்! என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்கிற பாடல் எங்களுடைய பாடல். ஏன் கையை ஏந்த வேண்டும் வடநாட்டில்? இந்த மண்ணை உன்னிடம் விற்று விட்டு நாங்கள் வெளிநாடு சென்று பிழைக்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.

 அதனால்தான் சொல்கிறோம், பார்ப்பானுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து விட்டு நீ மொழி அரசியல் செய்ய முடியாது. இந்திய அரசுக் கட்டமைப்பைப் பாதுகாத்துக் கொண்டு, இந்தியத் தேசியத்திற்குக் காவிச் சாயம் பூசி வைத்துக் கொண்டு நீ மொழி அரசியல் நடத்த முடியாது. மொழிவழி மாநிலங்களைக் கலைத்து விடுவதை மனதிற்குள்  சதித் திட்டமாக வைத்துக் கொண்டு 2024ஆம் ஆண்டிற்கான தேர்தலுக்குச் செல்கிறார்கள். இராமர் கோவில் கட்டி அதைப் புனிதத் தலம் ஆக்கி எல்லோரையும் அங்கே திரட்டி கொண்டு வந்து செய் னுமான் என்று சொல்ல வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 இந்த இராசு பவனில் ஒரு காவி வந்து உட்கார்ந்து இருக்கிறது, ஆர்.என். ரவி என்று. அவர் சொல்கிறார். இராமன், சிரீராமன்… அவனை இந்த நாட்டு மக்கள் நெஞ்சில் வைத்துத் தொழுகின்றார்களாம்! எங்கள் கம்பர் இராமன் என்று எழுத மாட்டார் இராமன் என்றுதான் எழுதுவார். சீதா என்று எழுத மாட்டார் சீதை என்றுதான் எழுதுவார். னுமான் என்று எழுத மாட்டார் அனுமன் என்று தான் எழுதுவார். அவர்களின் பெயரைக் கூட தமிழ்ப் படுத்தியவர் எங்கள் தமிழ்ப் புலவர்.  ஆனால் நீ என்ன சொல்கிறாய்!  இந்தியாவில் இந்தியாம்! இந்து மதமாம்! தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் சிரீராமனை நெஞ்சில் வைத்துத் தொழுகிறார்களா? என்றால் இல்லை. இந்த ஊரின் முசுலிம் எல்லாம் இந்தியர்கள் இல்லையா? கிறித்துவன் எல்லாம் இந்தியன் இல்லையா? கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், பகுத்தறிவாதிகள் எல்லாம் இல்லையா? இராமனை வழிபடும் இந்துக்கள் மட்டுமே இந்தியக் குடிமக்கள் என்று சொல்ல வருகிறார் இரவி. இந்தக் கருத்தை பரப்பிக் கொண்டு இருக்கின்ற உனக்கு மொழி அரசியல் வேறு வேண்டுமா?

வள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசி அவரை உங்களுக்கு ஆதரவாக மாற்றிக் கொள்ள முயல்கிறீர்கள். எல்லாருக்கும் வேசம் கட்டி விடுகிறீர்கள். எனவே நண்பர்களே, இந்த ஆபத்தை நாம் உணர வேண்டும். தமிழ்நாட்டை, தமிழ் மண்ணை, தமிழ் மொழியை, தமிழ் நிலத்தை நாம் பாதுகாக்க வேண்டும் இதை அரசு பார்த்துக் கொள்ளும், அரசியல் கட்சிகள் பார்த்துக் கொள்வார்கள் என்று நாம் ஒதுங்கி இருந்தால், நாம் விழித்துப் பார்க்கிற போது எதுவும் மிச்சம் இருக்காது. எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு சென்று விடுவார்கள். எனவே எச்சரிக்கையாக இருப்போம். நாம் குரல் கொடுப்போம். குரல் கொடுப்பவர்களுக்குத் துணையாக நிற்போம். பார்ப்பனர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதியாக எதிர்த்து முறியடிப்போம். இட ஒதுக்கீடு வழங்கும் உரிமை மாநிலத்துக்கு வேண்டும். இந்த ஈடபிள்யூஎஸ்-ஐத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது, செயல்படுத்துவது இல்லை என்று அறிவித்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய இந்திய அரசின் அலுவலகங்களில் அது செயல்படுத்தப்படும்.

 நீங்கள் இந்தத் தெருவில் இருக்கக் கூடிய ஒரு மாநில அரசு  அலுவலகத்தில் சென்று பார்த்தால் பொ.ந.பி(E.W.S.) இருக்காது ஆனால் இதே தெருவில் இருக்கக் கூடிய இந்திய அரசு நிறுவனத்தில் அது செயல்படும். அப்படி என்றால், அண்ணனுக்கு ஒரு நீதி தம்பிக்கு இன்னொரு நீதியா? இதுதான் தமிழ்நாட்டின் சமூக நீதிக்கான ஆதாரமா? அவர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். அம்பானி அதானிகள் கொண்டு  தமிழ்நாட்டை முழு வேட்டைக்காடாக்கி கொண்டு இருக்கிறார்கள் எனவே இட ஒதுக்கீட்டு உரிமை தமிழ்நாட்டுக்கே வேண்டும் என்ற கோரிக்கையோடு நாம் போராடுவோம்! இந்தித் திணிப்பை எதிர்ப்போம்! எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்கிற கனவை மெய்ப்படச் செய்வோம்!

 நன்றி!

தெருமுனைக் கூட்டம், கீழ்க்கட்டளை, 2022 நவம்பர் 22

  தொடரும்
தோழர் தியாகு

தாழி மடல் 153