தோழர் தியாகு எழுதுகிறார் 177 : இந்தோனேசியாவிலும் தமிழர் துயரம்
(தோழர் தியாகு எழுதுகிறார் 176 : எப்படி வந்தது மருத்துவக் கல்வியில் அனைத்து இந்திய ஒதுக்கீடு? -தொடர்ச்சி)
இந்தோனேசியாவிலும் தமிழர் துயரம்
இனிய அன்பர்களே!
நம் இனத்தின் துயரம் முள்ளிவாய்க்காலோடு முடிந்து விடவில்லை. முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து முடிந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழினத்தின் அமைதியும் நிம்மதியும் கேள்விக்குறியாகவே நீடிக்கின்றன. இந்தோனேசியாவிலிருந்து வரும் செய்திகள் இதைத்தான் சுட்டி நிற்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாட்டிலிருந்து ஈழத் தமிழர்கள் சிலர் தொலைசிபேசி வழி என்னைத் தொடர்பு கொண்டனர்:
ஈழத்திலிருந்து தஞ்சம் கோரி ஆத்திரேலியாவுக்கு அவர்கள் ஒரு விசைப் படகில் சென்று கொண்டிருந்தனர். நடுக்கடலில் ஆத்திரேலியக் கடற்படை அவர்களை வழிமறித்துத் திருப்பியனுப்பி விட்டது. அவர்களிடம் மிகக் குறைந்த எரிபொருள்தான் மீதமிருந்தது. அருகிலிருந்த நாடு இந்தோனேசியாவில் அவர்கள் கரையொதுங்க நேரிட்டது. இந்தோனேசியாவில் காவல்துறையினர் அவர்களைக் கொண்டுபோய் ஓரிடத்தில் அடைத்து வைத்து விட்டனர்.
ஆத்திரேலியா ஒரு காலத்தில் ஈழத்தமிழ் ஏதிலியருக்கு இடம்கொடுத்து வந்தது. ஆனால் இப்போது புதிதாக யாரையும் எளிதில் கால்பதிக்க விடுவதில்லை என்று கடுமையான நிலை எடுத்து, நடுக்கடலிலேயே வழிமறித்து விரட்டியடிக்கும் நடைமுறையை மேற்கொண்டது. அவர்கள் கடலில் மூழ்கிச் சாக நேரிட்டாலும் ஆத்திரேலிய அரசுக்குக் கவலையில்லை.
எனக்குத் தொடர்பெடுத்தவர்கள் பற்றிய செய்திகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத் தலைமைக்குத் தெரிவித்துப் பிற நாடுகளிலிருந்து சட்டத் தரணிகள் இந்தோனேசியா சென்று அவர்களைச் சந்தித்து உதவுவதற்கு ஆவன செய்தேன்.
நான் குறிப்பிட்ட குழுவினருக்கு முன்னும் பின்னுமாக அதே போல் ஆத்திரேலியக் கடற்படையால் விரட்டப்பட்டு இந்தோனேசியாவில் குடும்பம் குடும்பமாகக் கரை ஒதுங்கிய ஈழத் தமிழர்கள் மொத்தத் தொகை 650க்கு மேல் என்று சொல்லப்படுகிறது.
இந்தியாவைப் போலவே இந்தோனேசியாவும் ஏதிலியர் தகுநிலை பற்றிய 1951 ஐநா உடன்படிக்கையிலோ அதற்கான 1967 வகைமுறையிலோ ஒப்பமிடவில்லை. இந்தியாவில் போலவே இந்தோனேசியாவிலும் ஈழத் தமிழர்கள் ஏதிலியராகக் கூடச் சட்டத்தால் அறிந்தேற்கப்பெறாத அவலம்!
இப்போது இந்தோனேசிய அரசு தமிழ் ஏதிலியரைக் கட்டயமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. இலங்கைக்கே திரும்பிச் செல்ல விரும்புவதாக அவர்கள் ஒவ்வொருவரிடமும் எழுதி வாங்க முயல்கிறது. அவர்கள் எழுதிக் கொடுக்க மறுப்பதால் காவல்துறையைக் கொண்டு அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. கைபேசிகளைப் பறித்துக் கொண்டு வெளித் தொடர்புகளைத் துண்டிப்பது, அடிப்படை வசதிகளைக் கூட மறுப்பது, குழந்தைகள் கல்வி கற்க விடாமல் செய்வது… இப்படிப் பல வழிகளிலும் அவர்களைத் தொல்லைப்படுத்தி வருகிறது.
உலகெங்கும் ஏதிலியர் தொடர்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஓர் அடிப்படைக் கொள்கை: எந்த நாட்டிலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனரோ அந்த நாட்டுக்கே வலுக்கட்டாயமாக அவர்களைத் திருப்பியனுப்பக் கூடாது என்பதாகும். இதற்குத் திருப்பி அனுப்பாமைக் கொள்கை (PRINCIPLE OF NON-REFOULEMENT) என்று பெயர். ஏதிலியர் தொடர்பான ஐநா உடன்படிக்கைகளில் ஒப்பமிடாத நாடுகளும் இயற்கை நீதியின் பாற்பட்டு இந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஐ.நா. வலியுறுத்துகிறது. சான்றாக, இந்த உடன்படிக்கைகளில் ஒப்பமிடாத நாடாகிய இந்தியாவில் ஐ.நா. ஏதிலியர் ஆணையத்துக்கு தில்லியிலும் சென்னையிலுமாக இரண்டு அலுவலகங்கள் உள்ளன. ஏதிலியர் நலன் சார்ந்த சிக்கல்களில் சென்னை அலுவலகத்தை நாம் அணுகினால் கிடைக்கும் விளக்கம் இதுதான்: எங்களுக்கு இரண்டே பணிகள்தான் – முதலாவதாக, இலங்கையிலிருந்து ஏதிலியாக வந்துள்ள எவரையும் வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பாமல் பார்த்துக் கொள்வது. இரண்டாவதாக, திரும்பிச் செல்ல விரும்புகிற எவரையும் தடுத்து வைக்காமல் பார்த்துக் கொள்வது.
இந்தக் கொள்கையை மீறித்தான் சென்னையிலிருந்து ஈழவேந்தன் இலங்கைக்குக் கடத்தப்பட்டார். நாங்கள் நடத்திய ஒரு போராட்டத்துக்காக வந்து கொண்டிருந்தவரை வழிமறித்த தமிழ்நாடு காவல்துறை குண்டுக்கட்டாகத் தூக்கிப் போய் கொழும்பு செல்லும் வானூர்தியில் அமர்த்தி அனுப்பி விட்டது. இந்த ஆள்கடத்தலைத் தடுக்க யாரும் நீதிமன்றத்தை நாட அவகாசம் தந்து விடக் கூடாதாம்!
தலைவரின் அன்னை பார்வதி அம்மாள் உரிய பயண இசைவுகள் பெற்றுத் தமிழ்நாட்டுக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்த போது சென்னை மண்ணை மிதிக்கக் கூட விடாமல் திருப்பியனுப்பப்பட்டதையும், இந்தியாவில் சிகிச்சைக்கு வர அன்றன் பாலசிங்கம் அனுமதிக்கப்படாததையும் கூட நினைவுகூரலாம்.
உள்நாட்டுப் போர் இனவழிப்பில் முடிந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஈழத் தமிழர்கள் தஞ்சம் நாடி அலைவதும், அவர்களை மற்ற நாடுகள் அலைக்கழிப்பதும் தொடர்வதுதான் பெருந்துயரம்.
இந்தோனேசியாவிலிருந்து ஈழத் தமிழர்கள் அபயக் குரல் எழுப்புகின்றனர். உதவி கோரி ஐநாவுக்கும் ஏதிலியர் ஆணையத்துக்கும் மனிதவுரிமை அமைப்புகளுக்கும் அவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் முயற்சியில் வென்றால் நம் மனம் அமைதியாகும்.
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 210
Leave a Reply