(தோழர் தியாகு எழுதுகிறார் 175 : ஓய்வு கொள்ள நேரமில்லை! தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

தாழி மடல் 153இல் வெளியிட்ட இட ஒதுக்கீடு தொடர்பான என் தெருமுனைக்கூட்ட உரையில் (சென்னை கீழ்க் கட்டளை / 22.11.2022) ஒரு பிழை இருப்பதைச் சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியர் திரு அரி பரந்தாமன் எழுதிய மடலை நேற்று தாழியில் (எண் 156) படித்திருப்பீர்கள். அதே உரையில் மேலும் ஒரு பிழை இருப்பதைச் சுட்டிக்காட்டி அவர் எழுதியுள்ள மடலை இன்று பகிர்கிறேன். தீர்ப்புகளையும் சமூகநீதிக் குறிக்கோளின் மீது அவற்றின் தாக்கத்தையும் சரிவரப் புரிந்து கொள்வதில் அன்பர் அரி பரந்தாமன் அவர்களின் விளக்கங்கள் உங்களுக்கும் எனக்கும் பயனுள்ளவை என நம்புகிறேன். ஒரு குறைக்கு இரு முறை படித்துப் புரிந்து கொள்ள முயலுங்கள். அதன் பிறகும் ஐயமிருப்பின் அவரிடம் கேட்டுத் தெளிவு பெறத் தாழி உங்களுக்கு உதவும். சரி, அவரது மடலைப் பார்ப்போம் –

எப்படி வந்தது மருத்துவக் கல்வியில்

அனைத்து இந்திய ஒதுக்கீடு?

அன்பர் அரி பரந்தாமன் எழுதுகிறார்.    

தோழரே, 

மேலும் ஒரு பிழையைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்: மருத்துவ மாணவர் சேர்க்கையில், அனைத்து இந்திய ஒதுக்கீடு என்ற போர்வையில், 2008 முதல் அனைத்து இந்திய ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதாகத்  தாழி(153)இல் குறிப்பிட்டுள்ளீர்கள்.

2006இல் அர்சுன்சிங்கு மத்திய அமைச்சராக இருந்த போது,  அவரது முயற்சியால் மத்தியக் கல்வி நிறுவனங்களில் பின்தங்கிய வகுப்பாருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்றும், அதற்கு உச்ச நீதிமன்றம் தடை கொடுத்தது என்றும், இறுதித் தீர்ப்பில் 2008இல் கல்வியில் 27% இட ஒதுக்கீடு  சரிதான் என்று கூறிய போது, உச்ச நீதிமன்றம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு இல்லாத அனைத்து இந்திய ஒதுக்கீட்டை (All India Quota)  உருவாக்கியது என்றும் கூறியுள்ளீர்கள். 

இந்த விவரம் பிழையானது.

மருத்துவர் தினேசு குமார் – எதிர் – மோதிலால் நேரு கல்லூரி என்ற வழக்கில் 1984 முதல் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி பி.என். பகவதி அமர்வு தொடர்ந்து பல உத்தரவுகள் போட்டது. 1984இலேயே அளித்த தீர்ப்பில் மருத்துவக்  கல்வியில் அனைத்து இந்திய ஒதுக்கீடு அளிப்பது பற்றியும், எந்த அளவு அளிக்க வேண்டும் என்றும் கூறியது. அந்தத் தீர்ப்பைச் செயற்படுத்துவது தொடர்பாகப் பல முறை உத்தரவுகள் போட்டது.

அந்த அமர்வு 1-5-1985, 16-9-1985, 2-7-86  ஆகிய தேதிகளில் உத்தரவுகள் போட்டது.

இதில், 2-7-86 உத்தரவில் எம்.பி.பி.எசு. (MBBS) மற்றும் பல்மருத்துவ (BDS) கல்வியில் 15%, எம்டி, எம்எசு (MD, MS) பட்ட மேற் படிப்புகளில் 25% அனைத்து இந்திய ஒதுக்கீடு என்று கூறியதுதான் இறுதியானது. 

இந்த அனைத்து இந்திய ஒதுக்கீட்டில், சாதி அடிப்படையில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இது ஒரு மோசடி. அரசமைப்புச் சட்டம் கூறு 15இன் படி இட ஒதுக்கீட்டைப் பற்றி அரசு ஆணையோ, சட்டமோ செய்வது மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசின் பாற்பட்டது.  இதில் நீதிமன்றத்தின் அதிகாரம் எங்கே வருகிறது?

அப்போதைய காங்கிரசு அரசு, அனைத்து இந்திய ஒதுக்கீட்டை அரசின் ஆணையாகவோ சட்டமாகவோ போட்டால் சிக்கல் வரும் என்பதால், பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தில் உள்ள அரசின் நிர்வாகம் வழியாக உச்ச நீதிமன்றம் மூலம் இதைச் சாதித்துக் கொண்டது.

பார்ப்பன மேலாதிக்கம் உள்ள உச்ச நீதிமன்றத்துக்கும் இதில் ஆட்சேபணை இல்லை.

பின்னர், 28-2-2005இல் புத்தி பிரகாசு சருமா – எதிர் – இந்திய ஒன்றியம் (Buddhi Prakash Sharma Vs Union of India) என்ற வழக்கில், MD & MS கல்விக்கு 50% என உயர்த்தியது.

பட்டியல் இனத்தவர்கள் தொடுத்த வழக்கில் (அபய்நாத்து – எதிர் – தில்லிப் பல்கலைக்கழகம்), 31-1-2007இல் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி பாலகிருட்டிணன் அமர்வு அனைத்து இந்திய ஒதுக்கீட்டில் எசுசி / எசுடி (SC/ST) இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

பின்னர், 2020-21இல், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தொடுத்த வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றம் பின்தங்கிய வகுப்பாருக்கும் அனைத்து இந்திய ஒதுக்கீட்டில் 27% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றது

இதில், 1984 முதல் 1986 வரை நடந்த மருத்துவர் தினேசு குமார் வழக்கில் அனைத்து இந்திய ஒதுக்கீட்டிற்குத் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு  தெரிவித்த  விவரம் தீர்ப்பில் உள்ளது. மற்ற மாநிலங்களும், ஒன்றிய அரசும் இதை ஆதரித்துத் திட்டமிட்டுச் செயல்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு மற்றும் கருநாடக மாநில ஆட்சேபணைகளைப் புறந்தள்ளியது.

மேலே குறிப்பிட்டது போல, இதைக் கொண்டுவந்தது நீதிபதி பகவதி அமர்வு!

(தொடரும்)

தோழர் தியாகு

தாழி மடல் 157