தோழர் தியாகு எழுதுகிறார் 192 : கோயில்கள் கொள்ளைக் கூடாரங்களாக மாற விடோம்!
(தோழர் தியாகு எழுதுகிறார் 191 : இந்து அறநிலையத் துறையா? இந்துத்துவ சேவைத் துறையா?- தொடர்ச்சி)
கோயில்கள் கொள்ளைக் கூடாரங்களாக மாற விடோம்!
இனிய அன்பர்களே!
உலகில் தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் அவர்கள் தமக்கான சமய வழிபாட்டுக் கூடங்களை அமைத்துள்ளார்கள். அவை அவர்களின் பன்மையப் பண்பாட்டின் அடையாளங்களாக விளங்கி வருகின்றன. நான் அயல்நாடுகள் செல்லும் போது நேரம் கிடைக்கும் போது அவற்றைச் சென்று பார்ப்பதுண்டு. சிலநேரம் நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளே அங்கு நடப்பதும் உண்டு.
அப்படித்தான் கடந்த 1994ஆம் ஆண்டு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாட்டுக்காக அமெரிக்கா சென்றிருந்த போது என் உரைக்காக சிக்காகோ தமிழ்ச் சங்கக் கூட்டம் அங்குள்ள பாலாசி கோயிலில் நடைபெற்றது. இந்தியாவிலிருந்து பிராமணர்கள் வரவழைக்கப்பட்டு அருச்சகர்களாகப் பணியாற்றி வரக் கண்டேன். அவர்கள் என்னைச் சாமி கும்பிட அழைத்த போது “நம்பிக்கை இல்லை” என்று சொல்லி விட்டாலும், கோயிலையும் அதன் கோபுரங்களையும் பல கோணத்தில் படம்பிடித்துக் கொண்டேன். இந்த நாட்டில் நம் கட்டடக் கலையின் சிறப்பைக் காட்டுவதாக இந்தக் கோயில் இருப்பதாகத் தமிழ் அன்பர்களிடம் சொல்லி மகிழ்ந்தேன்.
கடந்த 1998ஆம் ஆண்டும் 2000ஆம் ஆண்டும், முதலில் மாவீரர் நாள் நிகழ்வுக்காகவும், பிறகு ஒரு கல்வி மாநாட்டுக்ககவும் ஐரோப்பா சென்றிருந்தேன். அந்தப் பயணம் முழுவதிலும் என்னோடு இருந்தவர் ‘சர்வே’ எனப்படும் அன்பர் சர்வேசுவரன். மார்க்குசு பிறந்த திரையர் இல்லம், இடிக்கப்பட்ட பெருலின் சுவர் எல்லா இடத்துக்கும் அவர்தான் என்னை அழைத்துச் சென்றார்.
பாரிசு நகரத்தில் சர்வேயிடம் “கோயிலுக்குப் போகலாமா?” என்று கேட்ட போது “அண்ணா போக விரும்பினால் போகலாமே!” என்றார். ஒரு மாலை நேரம் பனிப் பொழிவிற்கிடையில் ஒரு சிவன் கோயிலில் நின்றோம். “அண்ணா, நாங்கள் யாருக்கும் சொல்ல மாட்டோம், நீங்கள் கும்பிட்டுக்கலாம்” என்று சிரித்தார். “டேய் தம்பி, அண்ணா கோயிலுக்கு வந்ததைப் படம் எடு, தமிழ்நாட்டுக்கு அனுப்போணும்” என்று பகடி செய்தார். சிறிய கோயில்தான், சுற்றிப் பார்த்தேன். இறையன்பர்கள் வழிபாடு செய்து உண்டியலில் காணிக்கை செலுத்திக் கொண்டிருந்தார்கள்.
“உண்டியலில் சேரும் காசு முழுவதும் தமிழர் மறுவாழ்வுக் கழகத்துக்குப் போய் விடும்” என்று சர்வே எனக்குச் சொன்னார். மக்களுக்கும் இது தெரியும் என்றார். அவர் பல முறை என்னிடம் சொன்ன ஒரு செய்தியை ஈண்டு பதிய வேண்டும். “மக்களிடம் எதைச் சொல்லிக் காசு தண்டுகிறோமோ, அந்தக் காசை அந்த நோக்கத்துக்குத்தான் பயன்படுத்த வேண்டும், வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது, இது தலைவர் கட்டளை” என்றார்.
கோயில் நிருவாகியை எனக்கு அவர் அறிமுகம் செய்த போது உண்மையிலேயே வியப்பாய் இருந்தது. அவர் ஒரு கிறித்தவர் என்பது பெயரிலேயே தெரிந்தது. “இது எப்படி?” என்று கேட்காமல் கேட்ட என் வியப்புக் குறியைப் புரிந்து கொண்டு சர்வே சொன்னார்:
“இவர் கிறித்தவர்தான், ஆனால் சிவன் கோயிலை முறையாக நிருவாகம் செய்கிறார்.”
“யார் இவரை இந்தப் பணியில் அமர்த்தியது?”
“தலைவர்தான்.”
பாரிசு நகர சிவன் கோயிலைப் பரிபாலனம் செய்ய ஒரு கிறித்தவரைத் தாயகத்திலிருந்து தலைவர் பிரபாகரன் அமர்த்துகிறார், அதை அந்தச் சைவ பக்தர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். இதுதான் குடியாட்சிய உலகியல் (சனநாயக சமயச் சார்பின்மை). ஈழத் தமிழ் மக்களின் இந்தப் பண்பு இன்னும் விரிந்த அளவில் வெளிப்பட்ட ஒன்றே! சைவர்களாகிய அவர்கள் சாமுவேல் சேம்சு வேலுப்பிள்ளை செல்வநாயகம் என்ற கிறித்தவரைத் தேசத் தந்தையாக ஏற்றுக் கொண்டவர்கள் அல்லவா?
இந்துக் கோயிலுக்கு இந்துதான் அருச்சகராக வேண்டும் என்று சொன்னால் அதில் நியாயமுண்டு. ஆனால் இந்துதான் அறங்காவலராக வேண்டும் என்ற கட்டாயமில்லை. அறங்காவலரின் பணி இறையியல் சார்ந்தது அன்று, அது உலகியல் சார்ந்தது. திராவிட இயலுக்கு இந்தப் புரிதல் இருந்தால் சேகர்பாபு போன்ற பார்ப்பனிய அடிமையை இந்தப் பணிக்குத் தேர்வு செய்ய வேண்டியிருக்காது.
அனைத்துச் சாதியினரும் அருச்சகராதல், தமிழ் வழிபாட்டு மொழி ஆகிய முகன்மையான சமூகநீதித் திட்டங்களில் சேகர்பாபு வகையறாக்களின் அலட்சியத்தால் ஏற்பட்டுள்ள சேதம் கண்கூடான ஒன்று.
இந்து அறநிலையத் துறை எதற்காகத் தொடங்கப்பெற்றது? என்பதே சேகர்பாபுவின் நடவடிக்கைகளால் குழம்பிக் கிடக்கிறது. இதுதான் வாய்ப்பென்று கோயில்களை இந்துத்துவ அரசியல் தளங்களாக மற்ற ஆர்எசுஎசு வரிந்து கட்டி வேலை செய்கிறது. இந்து அறநிலையத் துறையின் பொறுப்பில் இருக்கும் கோயில்களை இந்துக்களிடமே கொடுத்து விடு என்று எச்சு. இராசா போன்ற இந்துத்துவ வெறியர்கள் கூக்குரலிடுகின்றார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்துக் கோயில்களைப் பார்ப்பனர்களும் பார்ப்பனியர்களும் கைப்பற்றத் துடிக்கின்றார்கள். நிருவாகத்தில் சமூகநீதியை மாய்த்து சாதி ஆளுகையை நிறுவிக் கோயில்களைக் கொள்ளைக் கூடாரங்களாக மாற்றுவதே அவர்களின் நோக்கம்.
சில நாள் முன்பு (தாழி 207) குமாரபாளையம் அருகே (சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம்) கத்தேரி வட்டமலை அருள்மிகு வேலாயுதசுவாமி ஆலயம் மீட்புக் குழுவினரின் போராட்டம் பற்றி எழுதியிருந்தேன். இந்தக் கோயில் நிருவாகத்தில் இதுகாறும் அருந்ததியர், நாடார் உட்பட அனைத்துச் சாதியினரும் இடம்பெற்றிருந்தார்கள். இதை மாற்றி ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மட்டும் இடம் பெறுவதற்கான முயற்சிகள் ஊழல் அரசியல்வாதி ஒருவரின் துணையோடு நடைபெற்று வந்தன. இதைக் கண்டித்து சென்ற 10.06.2023இல் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் நானும் தோழர் ப.பா. மோகன் முதலானோருடன் கலந்து கொண்டேன்.
ஆனால் மக்கள் கருத்துக்கு மதிப்பளிக்காமல் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று பேரைப் பரம்பரைசாரா அறங்காவலர்களாக அமர்த்தி இந்து அறநிலையத் துறை ஆணையிட்டுள்ளது. மக்கள் கொதித்துப் போயுள்ளனர். அவர்கள் தொடர்ந்து போராட உறுதி ஏற்றுள்ளனர். தமிழ்நாட்டில் பல இடங்களில் ஒலிக்கும் வினா வட்டமலையிலும் மோதி எதிரொலிக்கிறது: இது மு.க. தாலினுக்குத் தெரியுமா?
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 222
Leave a Reply