(தோழர் தியாகு எழுதுகிறார் 193 : நலங்கிள்ளி , பொன்.சந்திரன் கருத்தூட்டங்கள்-தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

தேசியப் புலனாய்வு முகமையையும் சஎதச(ஊபா) சட்டத்தையும் கண்டித்து அரசவன்முறை(பாசிச) எதிர்ப்பு முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையை தாழி (216) மடலில் வெளியிட்டிருந்தோம். இவ்வறிக்கை மேலும் செப்பம் செய்யப்பெற்று மீண்டும் வெளியிடப்படுகிறது. தெளிவு பெறுங்கள். பிறரையும் தெளிவு பெறச் செய்யுங்கள்.

++++

இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)!


வழக்கறிஞர்கள் மீதும் சஎதச(ஊபா)வின் கீழ்ப்
பொய் வழக்கு!
அரசவன்முறையின்(பாசிசத்தின்) வன்முறை நிறுவனமாய்த் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)!
அரசவன்முறையின்பாசிசத்தின் அடக்குமுறைக் கருவியாய் சஎதச(ஊபா)!
மோடி அரசின் அரச பங்கரவாதத்தை முறியடிப்போம்!

தமிழ்நாட்டில் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) நடத்திய மற்றுவொரு கைது நடவடிக்கை!.
புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்) அமைப்பு கடந்த ஆண்டு செட்டம்பரில் தடைசெய்யப்பட்டவுடன் அவ்வமைப்பைக் கலைத்து விட்டதாக அதன் நிருவாகிகள் அறிவித்து விட்டனர். அதன் பிறகும் கூட, ஏறத்தாழ ஏழு மாதங்கள் கழித்து, அவ்வமைப்பில் முன்னாள் நிருவாகியாய் இருந்த சென்னையைச் சேர்ந்த தோழர் அத்துல் இரசாக்கு முதலான ஐந்து இசுலாமியர்கள் கடந்த 2023 மே 9 அன்று தேசியப் புலனாய்வு முகமையால் (என்.ஐ.ஏ) புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்!

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக வழக்காடிய முகமது அப்பாசும் முகமது யூசுப்பும் அதே வழக்கில் சேர்க்கப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்) இசுலாமியர்கள் மீதான நா.தொ.ச.(ஆர்.எசு.எசு.) – பாசகவின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் மாநில உரிமைகளுக்காகவும் சஎதச(ஊபா) முதலான அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகவும் அரசமைப்புச் சட்ட உரிமைகளைப் பாதுகாக்கவும் மக்களிடையே பரப்புரை செய்தது; இசுலாமியர்களை அமைப்பாக்கியது; இசுலாமியர்கள் அமைப்பாக்கிக் கொள்வதையும் போராடுவதையும் கட்டுப்படுத்தும் நோக்கில் புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்) மீது பயங்கரவாத முத்திரை குத்தி தடை விதித்தது அரசவன்ம பாசக அரசு.

புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்) அமைப்பைத் தடை செய்வதற்குக் காரணமாக அவ்வமைப்பினர் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றுக் கொண்டு பயங்கரவாதச் செயல்களுக்குத் திட்டமிட்டனராம்; சட்டஎதிர் செயல்கள், பயங்கரவாதச் செயல்கள் செய்வதற்குத் சதித்திட்டம் தீட்டினராம்; இரு பிரிவினருக்கு இடையே பகை வளர்க்கும் செயல்களில் ஈடுபட்டனராம்: தங்கள் பயங்கரவாதச் செயல்களுக்கு ஆட்சேர்த்தனராம்; பேரணி நடத்தினராம்; ஈ.சி.இ.அ.(ஐ.எசு.ஐ.எசு.) போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் கமுக்கத் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களை ஆதரித்தனராம்; இதுபோன்ற தகவல்கள் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)வுக்குக் கிடைத்ததாம். அதன் அடிப்படையில் அவ்வமைப்பை தடை செய்தார்களாம்! மேற்சொன்ன குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்கு தொடுத்திருக்கிறது தே.பு.மு.(என்.ஐ.ஏ.).

கணக்கற்ற கலவரங்களை நடத்தி, பல்லாயிரக்கணக்கான இசுலாமியர்களைப் படுகொலை செய்து, மசூதிகளை இடித்துத் தள்ளி, மசூதிகளுக்கு வெடிகுண்டு வைத்து, காந்தி தொடங்கி பன்சாரே, தபோலர், கவுரி இலங்கேசு, கல்புரிகி எனப் பலரையும் சுட்டுக் கொன்று, இசுலாமியர்களை இனவழிப்பின் அபாயத்தில் நிறுத்தியிருக்கும் நா.தொ.ச.(ஆர்.எசு.எசு.) தலைமையிலான ‘சங்’ பரிவார அமைப்புகள் செயல்படுவதற்கு அனுமதியுண்டு. ஆனால், இதற்கு எதிராக அமைப்பாக்கிக் கொண்டு போராடுவதற்கு தடையாம்! இந்த வெட்கக் கேடான தடையை எதிர்த்து நிற்போம்! அரசவன்ம(பாசிச)த்தை ஒருவர் எதிர்ப்பதாகச் சொல்லிக்கொண்டால் அவர் கட்டாயம் இந்தத் தடையை எதிர்த்துப் போராடியாக வேண்டும்.

புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்) கடந்த 2022 செட்டம்பர் 28 ஆம் நாள் தடைசெய்யப்பட்டது. கடந்த 2022 செட்டம்பர் 19 அன்று போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 120(ஆ), 153-அ, 153-அஅ ஆகியவற்றின் கீழும் சட்ட எதிர் செயல்கள் தடுப்புச் சட்டப் (ஊபா, UAPA) பிரிவுகள் 13,17,18, 18(ஆ), 38, 39 ஆகியவற்றின் கீழும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே 9 பேர் சிறைபட்டிருந்தனர். சஎதச(ஊபா) முதலான அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரான கூட்டமைப்பு ஒன்றின் தமிழ் மாநில அமைப்பாளராகச் செயல்பட்ட தோழர் காலித்து முகமது முதலான 9 பேர் சிறைபட்டுள்ளனர்.

கடந்த 2022 ஏப்பிரல் 13 அன்று மேற்சொன்னப் பிரிவுகளுடன் சஎதச(ஊபா) பிரிவுகள் 20, 22ஆ. ஐயும் சேர்த்து முன்னமே இன்னொரு வழக்குப் போடப்பட்டிருந்தது. முதல் வழக்குப் போடப்பட்டதோ ஏப்பிரலில்! ஆனால், அதற்கான கைது நடவடிக்கையை தே.பு.மு.(என்.ஐ.ஏ.)மேற்கொண்டது செப் 22 இல்! இதில் 21 பேர் சிறைப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தோர்.

  1. ஒரே குற்றத்திற்காக இரண்டு வழக்குகளைச் சட்டஎதிராகப் போட்டுள்ளது.
  2. பயங்கரவாதக் குற்றங்களுக்கான பிரிவுகளின் கீழ் ஏப்பிரல் மாதத்தில் ஒரு வழக்கைப் பதிந்துவிட்டு ஐந்து மாதங்கள் கழித்து அவ்வழக்குக்காகக் கைது செய்திருப்பதில் இருந்தே தெரிகிறது குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை!
  3. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஈடுபட்ட சட்டஎதிர் செயல்கள் என்ன என்பது பற்றி எதுவும் பதிவு செய்யாத நிலையில் பிரிவு 13இன் கீழ்ச் சட்டஎதிராகச் சிறையிலடைத்திருக்கிறது
  4. இரு பிரிவுகளுக்கு இடையே நல்லிணக்கத்தைச் சீர்குலைத்தார்கள் என்ற குற்றஞ்சாட்டிற்கு எவ்வித சம்பவமோ ஆதாரமோ காட்டப்படவில்லை
  5. பிரிவு 38, 39 ஆகியவை பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராய் இருப்பது பற்றியது. ஆனால் புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்) பயங்கரவாத அமைப்பு என்பதற்காகத் தடை செய்யப்படவில்லை, மாறாகச் சட்டஎதிர் செயல்களில் ஈடுபடும் அமைப்பு என்ற பெயரிலேயே தடைசெய்யபட்டுள்ளது. உறுப்பினராக இருந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக சஎதச(ஊபா) சட்டத்தின் கீழ்க் கைது செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் மார்ச்சு 2023இல் தீர்ப்பளித்த பிறகும் கூட இதே காரணத்திற்காக சஎதச(ஊபா)வின் கீழ்க் கைது செய்யப்பட்டிருப்பது அப்பட்டமான சட்ட மீறல் மட்டுமல்ல உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தூக்கி எறிவதும் ஆகும். அதுமட்டுமின்றி, அப்படித் தடைசெய்யப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே சஎதச(ஊபா)வின் கீழ்க் கைது செய்திருப்பது திட்டமிட்ட அரச பயங்கரவாதமே.
  6. வழக்கம் போலவே, சஎதச(ஊபா)வின் பிரிவு 18 – பயங்கரவாத செயல்களைச் செய்ய சதிதிட்டம் தீட்டியக் குற்றத்திற்கான பிரிவு இவ்வழக்கிலும் சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கம் போலவே, எவ்விதப் பயங்கரவாதச் செயல்களும் நடக்காமலே இப்பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறிவைக்கப்படும் வழக்கறிஞர்கள்:
இவ்வழக்கு சட்டத்திற்குப் புறம்பானது என்பதால் அதை நீக்கக் கோரி குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகுகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்களை தே.பு.மு.(என்.ஐ.ஏ.) தன் விருப்பப்படி விசாரணைக்கு அழைப்பதையும் பொருட்களைப் பறிமுதல் செய்ததையும் அவர்கள் நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்குகின்றனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பாக வழக்கை நடத்திய வழக்கறிஞர்கள்தான் முகமது அப்பாசும் முகமது யூசுப்பும் ஆவர்.

முகமது அப்பாசு தே.பு.மு.(என்.ஐ.ஏ.) போட்ட வழக்குகளில் கைதானவர்களின் சார்பாக 10 வழக்குகளில் வாதாடியவர்; 4 வழக்குகளில் முகமது யூசுப்பும் வாதாடியிருந்தார்.
இதற்கிடையே 5.3.2023 அன்று மதுரை கோரிபாளையத்தைச் சேர்ந்த முகமது அலி சின்னா என்பவரை ’விசாரணை’ என்ற பெயரில் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)அதிகாரி கா.து.க.(டி.எசு.பி.) செந்தில்குமார் கூட்டிச் சென்று மிக மோசமாகச் சித்திரவதை செய்கிறார். இதனால் மயங்கி விழுந்ததை மறைத்து, மருத்துவமனைக்கு அருகில் வலிப்பு வந்து விழுந்து கிடந்தார் என்று பொய்யாகக் கூறி மதுரை இராசாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கின்றனர். ஆனால் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) அதிகாரிகள்தான் சின்னாவைச் சேர்த்ததாக வழக்கறிஞர் முகமது அப்பாசு கமுக்க அகக்காட்சிகளைப்(சிசிடிவி) ) பெற்றுத் தெரிந்துகொள்கிறார். இதை முகநூலில் அம்பலப்படுத்துகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த தே.பு.மு.(என்.ஐ.ஏ.). கா.து.க.(டி.எசு.பி.) செந்தில்குமார் தல்லாகுளம் காவல் நிலையத்தில் தே.பு.மு.(என்.ஐ.ஏ.). மீதான அவதூறு பரப்பல்’ என்று முகமது அப்பாசு மீது வழக்கு பதிவு செய்கிறார். பின்னர் பயங்கரவாதச் சட்டமான சஎதச(ஊபா)வைப் பயன்படுத்தி கலைக்கப்பட்டுவிட்ட பி.எப்.ஐ அமைப்பின் உறுப்பினர் எனப் பொய்யாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தே.பு.மு.(என்.ஐ.ஏ.).வால் கைது செய்யப்படுகிறார்.
தே.பு.மு.(என்.ஐ.ஏ.)வால் பொய்யாகப் புனையப்படுகின்ற வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டோருக்கான வழக்கறிஞராக வருபவர்களை எல்லாம் ’பயங்கரவாதி’ என முத்திரை குத்திக் கைது செய்வது அப்பட்டமான அரசியல் சட்ட மீறலாகும். இது மோடி ஆட்சியின் அரசவன்ம ஒடுக்குமுறையின் கோர வடிவமாகும். இது அரச பயங்கரவாதமாகும். இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று மேனாள் உச்சநீதிமன்ற நீதியர் மார்க்கண்டேய கட்சுவே கண்டித்திருக்கிறார்.


(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 223