(தோழர் தியாகு எழுதுகிறார் 194 : இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! 1/4 – தொடர்ச்சி)

இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! 2/4

இதைக் கண்டித்து மதுரை வழக்கர் சங்கம்(பார் அசோசியேசன்), தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கர் சங்கக் கூட்டுக்குழு (JACC) தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தைத் தமிழ்நாடு அரசு உடனே கொண்டுவர வேண்டும்; வழக்கறிஞர்களை பொய் வழக்குகளில் கைது செய்த தே.பு.மு.(என்.ஐ.ஏ.)அதிகாரிகள் மீதும் தமிழகக் காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இதைக் கண்டித்துத் தமிழ்நாடு தழுவிய அளவில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று இவர்களுக்குப் போராடவில்லை எனில் நாளை எந்தவொரு சாமானியனும் வழக்கறிஞரை வைத்து சட்டமுறையில் கூடச் சிறையிலிருந்து வெளியே வர முடியாது.

இசுலாமியர்களைக் குதறும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.):
திறந்த வீட்டில் ஏதேதோ நுழைவது போல் தே.பு.மு.(என்.ஐ.ஏ.). தமிழ்நாட்டில் உள்ள இசுலாமியர்களை வேட்டையாடி வருகிறது. அன்றாடம் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் சோதனை நடத்துவதன் மூலம் இசுலாமிய மக்களைத் தொடர் அச்சுறுத்தலில் வைப்பதும் பொது சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்துவதும் நடந்து வருகிறது.

புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்) அமைப்பின் மீதான தடையைக் காரணமாகச் சொல்லிக் கொண்டு இந்தச் சோதனைகளும் கைதுகளும் நடத்தப்படுகின்றன.

நா.தொ.ச.(ஆர்.எசு.எசு.)–பாசகவின் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை எதிர்த்து இசுலாமியர்கள் அமைப்பாவதையும் போராடுவதையும் பயங்கரவாதமென முத்திரை குத்தி அச்சுறுத்த நினைக்கிறது அரசவன்ம பாசக அரசு.

கடந்த செட்டம்பரில் போடப்பட்ட வழக்குக்கான குற்றப் பத்திரிகையைப் பதிவு செய்யாமல் மார்ச்சு 27 வரை இழுத்தடித்தது தே.பு.மு.(என்.ஐ.ஏ.).! அதையும்கூட நீதிமன்றத்தில் முன் வைக்காமல் காலந்தாழ்த்தியது; குற்றஞ்சாட்டப்பட்டோர் உயர்நீதிமன்றத்தை அணுகித்தான், ”குற்றப் பத்திரிகையைத் தே.பு.மு.(என்.ஐ.ஏ.). வெளியிட்டாக வேண்டும்” என்ற ஆணையைப் பெற்றனர். இந்நிலையில்தான் மேற்படி ஐவரையும் இவ்வழக்கில் இணைத்துச் சிறைப்படுத்தியுள்ளது தே.பு.மு.(என்.ஐ.ஏ.).

கோவையில் நடந்த எரிவாயு உருளை வெடிப்பையும் பயன்படுத்திக் கொண்டு ஏதோ தமிழ்நாட்டில் இசுலாமிய பயங்கரவாதம் தலைவிரித்தாடுவது போல் கதைகட்டத் துடிக்கிறது தே.பு.மு.(என்.ஐ.ஏ.). கேட்பார் யாரும் இல்லை என்பது போல் தமிழ்நாட்டில் சோதனைகளும் கைதுகளும் தொடர் கதையாகி இருக்கிறது.
அரசவன்முறையின்(பாசிசத்தின்) அடக்கு முறை கருவியாய் சஎதச(ஊபா)!


சஎதச(ஊபா) வந்த பாதை:
1962 சூன் மாதத்தில் தேசிய ஒருமைப்பாட்டுப் பேரவையை நேரு தலைமையிலான காங்கிரசு அரசு அமைத்தது. அப்பேரவை தேசிய ஒருமைப்பாடு, வட்டாரவியம் குறித்த குழுவொன்றை அமைத்தது. அக்குழு நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறைமையையும் பாதுகாப்பதற்கும் நீடிக்கச் செய்வதற்கும் ஒன்றிய அரசுக்குப் போதுமான அதிகாரங்களை உரித்தாகும் வகையில் கருத்தை வெளியிடுவதையும் கூட்டம் கூடுவதையும் அமைப்பாவதையும் அடிப்படை உரிமையாக உயர்த்திப் பிடிக்கும் அரசமைப்புச் சட்ட உறுப்பு 19 ஐ திருத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரைக்கு இணங்க 1963ஆம் ஆண்டு இந்திய அரசமைப்பில் கொண்டுவரப்பட்ட 16 ஆவது சட்டத் திருத்தம் உறுப்பு 19ஐ இறைமையினதும் ஒருமைப்பாட்டினதும் நலனின் பெயரால் கட்டுப்படுத்தக் கூடிய திருத்தத்தைப் புகுத்தியது. 16 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை செயல்படுத்தும் நோக்கில் சட்டஎதிர் செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA) 1967 ஆம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசு அரசால் இயற்றப்பட்டது. அதுவரை மக்கள் அமைப்பாவதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுகளிடம் இருந்தன. இந்தச் சட்டத்தின் மூலம் அமைப்புகளைத் தடைசெய்யும் அதிகாரத்தை ஒன்றிய அரசு உருவாக்கிக் கொண்டது. நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக இச்சட்டம் இயற்றப்படுவதாக காரணம் சொல்லப்பட்டது.

மிசா, தடா, பொடா என அடுத்தடுத்து வந்த அடக்குமுறைச் சட்டங்கள் சனநாயக ஆற்றல்களின் போராட்டத்தால் முடிவு கட்டப்பட்டன. ஆனால் ஒரு கருப்புச்சட்டத்தை கைவிடும்போது அதன் கூறுகளைக் கொண்ட இன்னொரு புதிய சட்டத்தைக் கொண்டு வருவதை ஆளும்இனம் வாடிக்கையாகக் கொண்டிருந்தது.
2001 ஆம் ஆண்டு செட்டம்பரில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரட்டைக் கோபுரத் தாக்குதலைப் பயன்படுத்திக் கொண்டு ’பன்னாட்டுப் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்றது அமெரிக்கா. புதிய தாராளவாதப் பொருளியல் கொள்கையை எதிர்க்கும் மேற்காசியாவில் உள்ள அரபு நாடுகளை ஒடுக்குவதற்கு அவர்களின் எதிர்ப்பைப் ‘பன்னாட்டுப் பயங்கரவாதம்’ என்று முத்திரை குத்தியது அமெரிக்கா. அந்த பயங்கரவாதத்திற்கு எதிரான போரையும் அதற்கான சட்ட ஏற்பாடுகளையும் புதிய தாராளவாதம் என்னும் அரசியல்பொருளியல் கோட்பாட்டைப் பாதுகாப்பதற்கான இராணுவக் கோட்பாடாக வடிவமைத்தது அமெரிக்கா. இரட்டைக் கோபுரத் தாக்குதலை பயன்படுத்திக் கொண்டு ஐ.நா. பாதுகாப்புப் பேரவையில் 2001 செட்டம்பர் 21 அன்று பன்னாட்டுப் பயங்கரவாதத்திற்கு எதிரான தீர்மானம் 1373 ஐ இயற்றியது. இத்தீர்மானம் ஐ.நா. வின் அனைத்து உறுப்பரசுகளும் பன்னாட்டுப் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றது.

உலகில் உள்ள எல்லா அரசுகளும் தன்னாட்டு மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்கு அமெரிக்க வல்லரசியம் (ஏகாதிபத்தியம்) உருட்டிவிட்ட ’பயங்கரவாத தடுப்பு’ என்ற பகடைக் காயைப் பயன்படுத்திக் கொண்டன.

2002ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத் தாக்குதலைச் சாக்காகக் கொண்டு பொடா சட்டத்தைப் பாசக அரசு அறிமுகப்படுத்தியது. அந்தக் கறுப்புச் சட்டத்தின் பேயாட்டம் கிளப்பிவிட்ட போராட்டப் புழுதியால் சட்டத்தைத் திரும்பப் பெறும் கட்டாயம் ஏற்பட்டது.

வழமைப் போலவே, 2004 ஆம் ஆண்டு பொடா சட்டத்தைத் திரும்பப் பெற்றவுடன் காங்கிரசு அரசு சட்டஎதிர் செயல்கள் தடுப்புச் சட்டத்தில்( ஊபா) பயங்கரவாத தடுப்புக் கூறுகளை சேர்த்தது. சட்டஎதிர் தடுப்புச் செயல்களின் வரைவிலக்கணத்தில் ’பயங்கரவாத செயல்’ , ‘பயங்கரவாத அமைப்பு’ ஆகியவை சேர்க்கப்பட்டன. பிணை கிடைப்பதை மிகவும் கடினமாக்கும் வகையில் சிறைப்பட்டவரின் முதல் நோக்கிலான குற்றமின்மையை நீதிமன்றம் ஒப்புகொண்டால்தான் பிணை தரப்படும் என்ற திருத்தம் செய்யப்பட்டது.

2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதலுக்குப் பிறகு சஎதச(ஊபா) சட்டம் திருத்தப்பட்டது. இப்போது மிக வெளிப்படையாகவே மேற்சொன்ன ஐ.நா. தீர்மானம் 1373 ஐச் சுட்டிக்காட்டி அதன் அடிப்படையிலேயே இத்திருத்தத்தைக் கொண்டுவருவதாக சொன்னது இந்திய அரசு. இச்சட்டத்தில் உள்ள பிரிவு 43(ஈ) இல் செய்யப்பட்ட திருத்தங்கள் பிணை கொடுப்பதில் கூடுதல் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தன. ஆறு மாதத்திற்கு மேல் தடுத்து வைப்பதற்கும் புலனாய்வு செய்வோர் 90 நாட்களுக்குள் புலனாய்வை முடிக்க இயலாவிடில் நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவரை தடுத்து வைப்பதற்கான காலத்தை 180 நாட்கள் வரை நீட்டிக்கவும் திருத்தங்கள் வழிவகுத்தன. இந்தத் திருத்தத்தின் மூலம் சஎதச(ஊபா) என்பது பண்பளவில் ஆபத்தான சட்டமாக மாற்றப்பட்டது. இதே ஆண்டில், தே.பு.மு.(என்.ஐ.ஏ.) சட்டமும் இயற்றப்பட்டு தே.பு.மு.(என்.ஐ.ஏ.) என்றொரு புதிய புலனாய்வு நிறுவனம் உருவாக்கப்பட்டது.

2012இல் மீண்டும் ஒருமுறை இச்சட்டம் திருத்தப்பட்டது. நிதியியல் நடவடிக்கைக்கான செயலணி (Financial action task force) என்ற பன்னாட்டு அமைப்பில் ஒப்புக்கொண்டதற்கு இணங்கப் பண மோசடியையும் பயங்கரவாதத்திற்கு பணம் கொடுப்பதையும் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் திருத்தங்கள் செய்யப்பட்டன. எந்த ஓர் இயக்கத்தையும் காரணம் சொல்லாமல் ’சட்ட எதிர்’ என அறிவித்துக் கைதுகளைச் செய்யலாம், ஆறு மாதங்கள் வரை இப்படிச் சட்டஎதிராக அறிவித்ததற்கான காரணங்கள் என எதையும் சொல்ல வேண்டியதில்லை ஆகிய திருத்தங்களும் செய்யப்பட்டன.

2019இல் செய்யப்பட்ட திருத்தம் எந்தவோர் ஆளையும் ‘பயங்கரவாதி’ என அரசு முத்திரையிடுவதற்கு வழிசெய்கிறது. இதன் காரணமாக இச்சட்டம் இருப்பவற்றில் மிகவும் ஆபத்தான சட்டமாக மாறிவிட்டது.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 223