தோழர் தியாகு எழுதுகிறார் 203 : நெல்லையில் ஊடகச் சந்திப்பு
(தோழர் தியாகு எழுதுகிறார் 202 : எப்படிச் செத்தார் புளியங்குடி தங்கசாமி? – தொடர்ச்சி)
நெல்லையில் ஊடகச் சந்திப்பு
இனிய அன்பர்களே!
சாத்தான்குளத்துக்காகத்தான் நெல்லைப் பயணம் என்றாலும், பென்னிக்குசு-செயராசு நினைவேந்தல், சாத்தான்குளக் காவல்நிலையப் பார்வை ஆகியவற்றை முடித்துக் கொண்டு அதே நாள் மாலை தங்கசாமியின் காவல் சாவுக்கு (புளியங்குடி காவல்நிலையமா? பாளையங்கோட்டை நடுவண் சிறையா?) நீதிகோரிப் போராடப் புளியங்குடியும் செல்ல வேண்டியதாயிற்று.
மறுநாள் (23/06/2023) மதியம் 11 மணியளவில் நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் ஊடக சந்திப்புக்கு அன்பர் பீட்டர் ஏற்பாடு செய்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே நெல்லை செல்லும் போதெல்லாம் பீட்டர் ஊடகச் சந்திப்பு வைத்துக் கொள்வது வழக்கம்தான். அநேகமாய் எல்லா ஊடகங்களிலிருந்தும் செய்தியாளர்கள் வருவதும், நான் சொல்லும் கருத்துகள் மீது வினாக்கள் தொடுப்பதும், பொருத்தமாகச் செய்தி வெளியிடுவதும் கூட ஊக்கமளிப்பனவாக இருக்கும். இடையில் மகுடை(கொரோனா) பெருந்தொற்று காரணாமாக மூன்றாண்டுக்கு மேல் நெல்லை செல்லாத நிலையில் இந்த ஊடகச் சந்திப்பு பயனுள்ளதாக இருக்கும் என நம்பினேன். “தமிழ்நாட்டு அரசியல் போக்குகள்” என்று இந்த ஊடகச் சந்திப்புக்குத் தலைப்புக் கொடுத்திருந்தேன். சந்திப்பின் போது ஒரு சுருக்கமான செய்திக் குறிப்பும் ஊடகர்களுக்கு அச்சறிக்கையாகவும் புலனச் செய்தியாகவும் தரப்பட்டன.
ஊடகச் சந்திப்பின் போது இ.கு.ச.க.(எசுடிபிஐ) மாவட்டச் செயலாளர் எசு.எசு. கனி, வழக்கறிஞர் ஆரிஃப் பாட்சா, இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பீட்டர், சீர்மரபினர் உரிமைமீட்பு இயக்கத்தைச் சேர்ந்த அரிகர பாண்டியன் ஆகியோரும் உடனிருந்தனர்.
ஊடகச் சந்திப்பில் நான் தெரிவித்த கருத்துகளையும், என்னிடம் கேட்கப்பட்ட வினாகளுக்குச் சொன்ன விடைகளையும் ஈண்டு தொகுத்தளிக்கிறேன். –
தமிழ்நாட்டு அரசியல் போக்குகள்
1) தமிழ்நாட்டில் காவல்நிலையக் கொடுமைகள் முடிவில்லாத தொடர்கதையாக நீண்டு வருகின்றன. இவற்றை இல்லாமற்செய்யும் முயற்சிகளைத் தமிழக அரசு முழு விரைவுடன் செய்யவில்லை. சாத்தான்குளம் பென்னிக்குசு-செயராசு தொடங்கி புளியங்குடி தங்கசாமி வரை காவல்நிலையக் கொலைகள் நடந்துள்ளன.
2) அம்பாசமுத்திரம் இ.கா.ப.(ஐபிஎசு) அதிகாரி பல்பிடுங்கி பல்பீர்சிங்கு இதுவரை கைது செய்யப்படவில்லை. முதல் தகவல் அறிக்கை போட்ட பிறகும் கைது செய்யாமல் இருப்பது ஏன்?
3) உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குநர் சைலேந்திர பாபுவின் 41 கட்டளைகளையும் பொதுவாகத் தமிழக காவல்நிலையங்கள் மதித்து நடப்பதில்லை. நேற்று சாத்தான்குளத்தில் நானே இதை நேரில் பட்டறிந்து கொண்டேன்.
4) தூத்துக்குடி செம்பு உருட்டு (சுடெருலைட்டு) துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா செகதீசன் அறிக்கையின் பரிந்துரைகள் இன்று வரை செயலாக்கப்படவில்லை. உடனடியாக அந்தப் பரிந்துரைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5) சாதி ஆணவக் குற்றங்களும் கொலைகளும் தொடர்ந்து நடப்பது தமிழ்நாட்டுக்கே தலைக்குனிவு ஆகும். ஆணவக் குற்றங்களைத் தடுக்கவும் தண்டிக்கவும் தனிச் சட்டம் இயற்ற வேண்டும்.
6) தமிழ்ச் சமூகத்தில் இன்றளவும் தீண்டாமைக் கொடுமைகள் நடந்து வருவது வெளிப்படையான உண்மை. அருப்புக்கோட்டை அருகே ஆதித்தமிழர்கள் (அருந்ததியர்கள்) தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகி வருவதாகத் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
7) காவல்துறைக்குள்ளேயே தீண்டாமையும் சாதி வன்மமும் நீடிக்கின்றன. சென்ற ஏப்பிரல் 14ஆம் நாள் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அம்பேத்துகருக்கு வணக்கம் செலுத்தக் கூடிய தணிந்தசாதி(தலித்து) மக்கள் மீது காவல்துறை நடத்திய தடியடி, பொய்வழக்குகள், நெஞ்சில் அம்பேத்துகர் உருவத்தை பச்சை குத்திய திமுக வட்டச் சார்பாளர் முருகன் மீது காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவை குறித்து அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.
8) நீண்ட காலமாகச் சிறையில் வாடும் இசுலாமியக் கைதிகளை விடுதலை செய்வதாக மு.க. தாலின் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும். பத்தாண்டுக்கு மேல் சிறையில் கழித்த அனைத்து ஆயுள் தண்டனைக் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.
9) தமிழக அரசு இந்தப் போக்குகளை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும். இல்லையேல் பாசக அரசவன்முறை(பாசிச) ஆபத்தை முறியடிக்க அதனால் இயலாமற்போகும். ஊழல் அரசியல்வாதிகளால் அரசவன்முறை(பாசிச) எதிர்ப்பில் உறுதியாக நிற்க முடியாது என்று சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
10) ச.எ.த.(ஊபா) போன்ற சட்டங்களைத் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) போன்ற இந்திய அடக்குமுறை ஏற்பாடுகள் குடியாட்சிய ஆற்றல்கள் மீதும் சிறுபான்மை மக்கள் மீதும் ஏவுவதைத் தமிழக அரசு எதிர்க்க வேண்டும்.
11) நா.தொ.ச.(ஆர்எசுஎசு) – பாசக மத வெறி ஆதிக்க வெறி அரசியல் எவ்வளவு தீங்கானது என்பதற்கு மணிப்பூர் சான்றாக உள்ளது. இப்படிப்பட்டவர்களுக்கு எதிராகத் தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
12) செந்தில் பாலாசி ஊழல் செய்திருப்பதாகத் திமுக சார்பில் முக தாலின்தான் குற்றஞ்சாட்டினார். அந்தக் குற்றச்சாட்டை இன்று வரை அவர் விலக்கிக் கொள்ளவில்லை. அவரைத் திமுகவில் சேர்த்துக் கொண்டதால் அவரது ஊழல் மீது மாநில அரசு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. அவரை அமைச்சரும் ஆக்கிக் கொண்டார்கள். திமுகவை அச்சுறுத்த இது பாசக அரசுக்கு வாய்ப்பாகி விட்டது. இப்போதும் செந்தில் பாலாசி மீது இயல்பான சட்டங்களின் படி நடவடிக்கை எடுக்கலாம். பணப் பரிமாற்றத் தடைச் சட்டம் [PMLA] என்பது படுமோசமான கறுப்புச் சட்டம் ஆகும். இந்தச் சட்டத்தையும் காங்கிரசு தலைமையிலான, திமுக முதலான இந்திய அரசுதான் இயற்றியது. இந்தச் சட்டத்தையே திமுக எதிர்க்கிறதா? செந்தில் பாலாசி மீது பயன்படுத்தியதை மட்டும் எதிர்க்கிறதா? நாம் இந்தச் சட்டமே கூடாது என்கிறோம். இந்தச் சட்டம் இருக்கும் வரை செந்தில் பாலாசி வெளியே வருவதற்கு வாய்ப்பில்லை. பிணையிலும் கூட வர முடியாது. செந்தில் பாலாசி எவ்வளவு பெரிய ஊழல் குற்றவாளியானாலும், அவருக்குரித்தான மாந்த உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும்.
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 231
Leave a Reply