(தோழர் தியாகு எழுதுகிறார் 6: துவாலு தெரியுமா உங்களுக்கு? இன் தொடர்ச்சி)

முனைமுகத்தே துவாலு

காலநிலை மாற்றம் உலகை அச்சுறுத்தும் பெரும் நெருக்கடியாக முற்றி வருகிறது என்று சூழலியலர் எவ்வளவுதான் சொன்னாலும் அப்படியெல்லாம் இருக்காது என்று தன்னாறுதல் கொள்வதுதான் பாமர இயல்பு.

ஆனால் பாமரரும் புறந்தள்ள முடியாத படி துவாலு நாட்டைப் பற்றிய செய்திகளால் காலநிலை மாற்றம் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது.

துவாலு — பசிஃபிக் கடலில் அருகருகே அமைந்த ஒன்பது தீவுகளைக் கொண்ட ஒரு சின்னஞ்சிறிய தீவுக் கூட்டம். இவற்றில் இரண்டு தீவுகள் கடல் அலைகளால் விரைவில் விழுங்கப்படும் நிலையில் உள்ளன. கடல் மட்டம் உயர உயர மணலரிப்பும் சேர்ந்து கொண்டு நிலம் சுருங்கிக் கொண்டிருக்கிறது, 

இது பற்றி கார்டியன் ஏடு மூன்றாண்டு முன்பே படங்களுடன் விரிவான செய்திக் கட்டுரை வெளியிட்டது. தங்கள் நாடு மூழ்கிக் கொண்டிருப்பதை துவாலு மக்கள் அறிந்துள்ளார்கள். வெளியிலிருந்து செல்கிறவர்களிடமெல்லாம் துவாலுவைக் கடல் விழுங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்லாதவர்களே இல்லை. அது அவர்களின் கண்முன்னே நடந்து கொண்டிருக்கிறது.

கடலில் நீந்தும் போது முன்பெல்லாம் தரை தெரியும், பவழப் பாறைகள் தெரியும், இப்போது தெரிவதில்லை, எந்நேரமும் மேக மூட்டமாக உள்ளது, பவழம் செத்து விட்டது என்று வருந்துகிறார்கள்.

துவாலு  ஒசேனியாவில் இருக்கும் பொலினீசிய நாடு. இந்தப் பகுதியில் நமக்குத் தெரிந்த இரு நாடுகள்: ஆசுதிரேலியா, நியுசிலாந்து. தமிழர்கள் ஒப்பந்தக் கூலிகளாகக் கரும்புத் தோட்டத்தில் பாடுபட்டு, பாரதியால் பாடப்பெற்ற நாடு என்பதால் பிசித் தீவுகள் தெரியும். இப்போது துவாலுவைத் தெரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். பசிபிக் பெருங்கடலில் சுதிரேலியாவுக்கும் அவாய்க்கும் நடுவில் துவாலுவும் ஒரு தீவுத் துளி; சரியாகச் சொன்னால் ஒன்பது துளிகள்! மக்கள்தொகை பன்னீராயிரத்துக்குள்! உலகின் மிகச் சிறிய நாடுகளின் வரிசையில் நாலாமிடம். அஃதாவது துவாலுவை விடவும் சிறிய நாடுகள் இன்னும் மூன்று உள்ளன. ஐநா உறுப்பு நாடுகளில் மக்கள்தொகையில் போப்பரசர் ஆளும் வத்திகனுக்கு அடுத்த பெரிய நாடு துவாலு! நிலப்பரப்பு மொத்தம் 26 சதுர அயிரைப் பேரடி (கிலோ மீட்டர்)!

பெரும்பாலான தீவுகள் கடல் மட்டத்திலிருந்து மூன்றே பேரடி( மீட்டர்) உயரத்தில் உள்ளன. ஆகப் பெரிய தீவாகிய ஃபாங்கஃபேல் அதன் மிகக் குறுகலான நீட்சியில் வெறும் 20 பேரடி  அகலம்தான்! கடல் மேல் ஒரு பாலம் போலத்தான்!

புயல் மழையின் போதெல்லாம் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் அலைகள் சீறி வந்து தாக்கும்! கடலரக்கன் நாட்டை விழுங்குவது போல் இருக்கும் என்கிறார்கள் துவாலு மக்கள்.

கடல் மட்டம் உயர உயர நிலத்தடி நீரும் கெட்டுப் போகிறது. குடிநீருக்கு மழையை நம்பிருக்கும் நிலை! அடிக்கடி வறட்சி தாக்குவதால் வீட்டுத் தோட்டம் கூடப் போட வாய்ப்பில்லை. காய் கனிகள், உணவுப்பொருள் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை. கடல் மீன்களும் நஞ்சாகிப் போகின்றன.

காலநிலை மாற்றம் தொடர்பான நோய்கள் பரவி வருகின்றன. இவ்வகை நோய்களுக்கென்று உள்ளூர் மருத்துவமனையில் தனிப் பிரிவு இயங்கி வருகிறது.

அயல்நாடுகளிடமிருந்தும் ஐக்கிய நாடுகள் அமைப்பிடமிருந்தும் பெறப்படும் உதவியையே துவாலு பெரிதும் நம்பியுள்ளது. கல்வியும் வேலைவாய்ப்பும் நாடி இளைஞர்கள் பலரும் ஆசுதிரேலியா, நியுசிலாந்து, பிசி ஆகிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து செல்கின்றனர்.

வேறு வழியின்றி மக்கள் நாட்டை விட்டு வெளியேற நேரிட்டால் அவர்களே உலகின் முதல் காலநிலை மாற்ற ஏதிலியர்களாய் இருப்பார்கள்.

ஆனால் துவாலு அரசோ “நடப்பது நடக்கட்டும்! நாங்கள் வெளியேறப் போவதில்லை” என்று பறைசாற்றியுள்ளது.    

அடுத்த 50 முதல் 100 ஆண்டுக்குள் துவாலு மனித வாழ்வுக்குப் பொருந்தாமற்போய் விடும் என்பது அறிவியலர் கணிப்பு. அவ்வளவு காலம் தாங்காது என்பது உள்ளூர் மக்கள் அச்சம்.    

துவாலுவுக்கு அரசுண்டு, கொடியுண்டு, கொற்றமுண்டு! தலைமையமைச்சர் உண்டு! நாடுகளின் அவையில் இடமுண்டு! ஆனால் உலக நிலவரையிலிருந்து மறைந்து போகும் ஆபத்தை மடியில் கட்டிக் கொண்டு எப்படிப் பெருமை கொண்டாட முடியும்?

[ஒசேனியா, பொலினீசியா… இவற்றின் புவியியலும் அரசியலும் பற்றித் தனியாக எழுத வேண்டும்.]

துவாலுவுக்கு ஒரு புதிய பொறுப்பும் புதிய பெருமையும் வாய்த்திருப்பதாகச் சூழலியலர் நம்புகின்றனர். அது காலநிலை மாற்றத்தின் தீவிளைவுகளுக்கு எதிரான போராட்டத்தின் முனைமுகத்தே நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கையும் காலமும் இட்டுள்ள கட்டளை இது!

துவாலு அழிந்தால், அது மாந்தக் குல அழிவின் தொடக்கமாக அமையும். இந்த அழிவுக்கு நாமே காரணமாய் இருப்போம். தற்கொலைதான் நம் முடிவா? இல்லை என்றால் என்ன செய்யலாம்?  

தரவு: தியாகுவின் தாழி மடல் 7